Published : 07 Oct 2016 11:57 AM
Last Updated : 07 Oct 2016 11:57 AM

உங்கள் குரல்: திருச்சி காந்தி மார்க்கெட்டில் கட்டாய கட்டண வசூல்

அன்புள்ள வாசகர்களே.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

044-42890006 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

காந்தி மார்க்கெட்டில் கட்டாய கட்டண வசூல்

திருச்சி காந்தி மார்க்கெட்டின் சுற்றுப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ரூ.5 கட்டாய கட்டணம் வசூலிக்கின்றனர். இத்தொகைக்கு ரசீதும் தருவதில்லை. இதுகுறித்து கேட்டால் தகராறு செய்கின்றனர். போலீஸாரும் இதைக் கண்டு கொள்வதில்லை. இதுகுறித்து உரிய துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.கணேசன், ஏர்போர்ட்.

பழைய பேருந்துகளை இயக்கக் கூடாது

அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் திருச்சி நகரில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலானவை 20 ஆண்டுகள் பழமையானவை. குறிப்பாக, இனாம்குளத்தூர், பொன்மலை, பொன்மலைப்பட்டி, ராமச்சந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் இருக்கைகள் மோசமாக உள்ளன. கைப்பிடி கம்பிகளும் சேதமடைந்த நிலையில் உள்ளன. பழைய பேருந்துகளை இயக்குவதை நிறுத்திவிட்டு, புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேதுபதி, திருச்சி.

நிற்காமல் செல்லும் தனியார் பேருந்துகள்

திருச்சி காட்டூர், பாலாஜி நகர் பேருந்து நிறுத்தத்தில் காலை 7.30 முதல் 8 மணி வரையிலான நேரத்தில் 2 தனியார் நகரப் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. இதனால், அந்தப் பேருந்துகளுக்காக காத்திருக்கும் மாணவ- மாணவிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அந்த பேருந்து நிறுத்தத்தில் தனியார் கல்லூரிப் பேருந்துகளை நிறுத்திக் கொள்வதால், நகரப் பேருந்துகளை அந்த இடத்தில் நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து தனியார் கல்லூரிப் பேருந்து ஓட்டுநர்களிடம் கூறியும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. இதுதொடர்பாக வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜாத்தி, காட்டூர்.

‘139’-ஐ இலவச அழைப்பாக மாற்ற வேண்டும்

ரயில்கள் குறித்த தொலைபேசி விசாரணை (enquiry) எண் ‘139’-யை தொடர்புகொள்ள நிமிடத்துக்கு ரூ.4 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த எண்ணை பிரீமியம் எண்ணாக அறிவித்து நிமிடத்துக்கு ரூ.4 வசூலிப்பது அதிக தொகையாகும். எனவே, ரயில்வே நிர்வாகம், இதை இலவச அழைப்பாக மாற்றினால், பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

-அப்துல் ரசாக், அதிராம்பட்டினம்.

அனுமதியில்லா மது விற்பனையை தடுக்க வேண்டும்

பூதலூர் - செங்கிப்பட்டி சாலையில் பாரி காலனியில், முன்பு டாஸ்மாக் கடை இருந்த இடத்தில், அனுமதி இல்லாமல் இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை தனி நபர்கள் அதிக விலைக்கு மது விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து, பூதலூர் காவல் நிலையம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மது விற்பனை தொடர்கிறது. இதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.ஜி.நாதன், பூதலூர்.

சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளக்காநத்தம் கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் ஊரை சுற்றிலும் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. இவை, அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறாக உள்ளன. இதனால் விஷ ஜந்துகள் அதிகரிப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே, இந்த சீமைக் கருவேல மரங்களை உடனே முழுவதுமாக அகற்றவும் கொளக்காநத்தம் கிராமத்தை தூய்மையாகப் பராமரிக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலு பிரபாகரன், பெரம்பலூர்.

காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும்

அரியலூர் நகரின் மையப் பகுதியில் காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் வந்து செல்லும் கனரக வாகனங்களால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த மார்க்கெட்டை புறவழிச் சாலையில் நகருக்கு வெளியே அமைத்தால், போக்குவரத்து நெரிசல் குறையும். மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் மக்களுக்கும் சிரமம் இருக்காது. இதற்கு நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் உடனே ஆவண செய்ய வேண்டும்.

-மருதமுத்து நாராயணசாமி, அரியலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x