Published : 21 Oct 2016 12:30 PM
Last Updated : 21 Oct 2016 12:30 PM
தீவைப்போல மாறிய சாலை- ராபர்ட், உடுமலை
உடுமலைப்பேட்டை விஜி ராவ் நகரின் தாழ்வான பகுதியில் பல வருடங்களாக சாலை வசதி இல்லை. 6 மாதம் முன்பு கூட மழை பெய்தபோது தீவைப்போல மாறியது. இது தொடர்பான செய்தி ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் பிரதான சாலையை மட்டும் சரிசெய்துள்ளதால், விஜி ராவ் சாலையில் கூடுதலாக மழைநீர், சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
மரக்கிளைகள் வெட்டப்படுமா? - கே.கே.லெட்சுமணன், கோவை
தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், கோவை மாநகரில் மின் கம்பிகளை உரசிச் செல்லும் மரங்களின் கிளைகளை வெட்டலாம். தற்போது புதிதாக எந்த சாலைப் பணியையும் மாநகருக்குள் தொடங்கக் கூடாது. புதிய சாலைப் பணிகளை தொடங்கினால், அவை மழையால் சேதமடைய வாய்ப்புண்டு. ஆகவே மழைக்கு பின் சேதமடைந்த சாலைகளை மொத்தமாக செப்பனிட மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வேகத்தடைகள் அமைக்க வேண்டும் - ஜீவா, கவுண்டர்மில்ஸ், கோவை
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டர்மில்ஸ் நிறுத்தம் பகுதியில் வாகனங்களின் வேகத்தைக் குறைக்க வேகத்தடையோ, போக்குவரத்து போலீஸாரோ இல்லாததால், விபத்துகள் அதிகமாகி வருகின்றன. சாலையைக் கடக்க போதிய வசதிகள் இல்லாததால், இங்குள்ள தனியார் பள்ளி மாணவர்கள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மாணவர்கள் நிற்பதைக் கூட பொருட்படுத்தாமல், அதிக வேகத்தில் வாகனங்களும், பேருந்துகளும் இயக்கப்படுவதால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து பல முறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தாமதித்து வருகின்றனர்.
‘தி இந்து’-வுக்கு நன்றி!- நந்தினி, காங்கயம்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் நத்தக்காடையூர் வளைவில் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது குறித்து, ‘உங்கள் குரல்’ பகுதியில் தெரிவித்திருந்தோம். இதையடுத்து, நாளிதழில் செய்தி பிரசுரமானது. இந்நிலையில் சாலையை அகலப்படுத்தி, தற்போது சாலை மையத்தடுப்புகளை அரசு அலுவலர்கள் அமைத்துள்ளனர். செய்தி வெளியிட்டு, நடவடிக்கை எடுக்க வைத்தமைக்கு ‘தி இந்து’-வுக்கு நன்றி.
மூடப்படாத குழிகள்- - ரத்தினசாமி, திருப்பூர்
திருப்பூர் காங்கயம், ராக்கியாபாளையம் கணபதிபாளையம் வழியாகச் செல்லும் சாலையில் அடுத்தடுத்து 4 இடங்களில் குடிநீர் இணைப்புக்காக குழிகள் தோண்டியுள்ளனர். அதை உடனே சரி செய்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.
மூலனூரில் மக்கள் பீதி- கலைச்செல்வன், மூலனூர்
திருப்பூர் மாவட்டம் மூலனூரில் உள்ள தேங்காய் எண்ணெய் தொழிற்சாலையில், சமீபத்தில் பாய்லர் வெடித்தது. தொழிற்சாலையை சுற்றி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி, பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆலை இயங்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு பதாகை வைக்கலாம். இதன்மூலம் பொதுமக்களின் மனதில் குடிகொண்டுள்ள பீதி களையப்படும்.
பள்ளிக் குழந்தைகள் அவதி- கந்தசாமி, திருப்பூர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வளம் மேம்பாலம் செல்ல கனரக வாகனங்கள் காங்கயம் சாலை வழியாகச் செல்கின்றன. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் காங்கயம் சாலையில் உள்ள, பேருந்து பணிமனை அருகே உள்ள வளைவில் திரும்புகின்றன. இதனால் அப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் காலை, மாலை வேளைகளில் குறுகிய சாலையில் சிக்கி போக்குவரத்து நெருக்கடிக்கு ஆளாகின்றனர். ஆகவே அப்பகுதியில் கூடுதலாக போலீஸார் நியமித்து போக்குவரத்தை இயக்க நடவடிக்கை தேவை.
மின் கம்பம் அகற்றப்படுமா?- தேவராஜன், கோவை.
கோவை மாநகராட்சி சிங்காநல்லூருக்கு உட்பட்ட கோத்தாரி நகரில் மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளன. ஆகவே, அப்பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி, புதிய மின் கம்பங்களை நடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT