Published : 25 Oct 2016 11:05 AM
Last Updated : 25 Oct 2016 11:05 AM
ராணிப்பேட்டை நகராட்சி 7-வது வார்டில் குடிநீர் திட்டத்துக்காக தோண்டிய பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ராணிப்பேட்டை நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாத தால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவ தாக வாசகர் சமரசம் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தனது புகாரை பதிவு செய்துள்ளார்.
மேலும், அவர் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை முத்துக்கடை அருகே உள்ள 7-வது வார்டு பகுதியில் போக்குவரத்து நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்குள்ள ஒத்தவாடை தெருவில் உள்ள கரு மாரியம்மன் கோயில் வழியாக தண்டலம், செட்டித்தாங்கல், வானா பாடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு ராணிப் பேட்டை நகராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கப்பட்டன. அப்போது, கருமாரியம்மன் கோயில் அருகிலும் குழாய் பதிக்க பள்ளம் தோண்டினர். பள்ளத்தை சரி செய்து சிமென்ட் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டிய தனியார் கட்டுமான நிறுவனத்தினர், மண்ணை மட்டும் மூடிவிட்டுச் சென்றனர்.
இதனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப் படுகின்றனர். இரவு நேரத்தில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இந்தப் பகுதியை கடந்து செல்லவே சிரமமாக உள்ளது.
இதனை நகராட்சி நிர்வாகத்தினரோ, தனியார் கட்டுமான நிறுவனத்தினரோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. போதிய மின் விளக்கு வெளிச்சமும் இல்லாததால் பொதுமக்கள் அவதிப் படுகின்றனர்’’ என்றார்.
இதுதொடர்பாக, ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் பாரிஜாதத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘ஊராட்சி பகுதிக்கான குழாய் இணைப்பு ஒத்தவாடைத் தெரு வழியாகச் செல்கிறது. அந்த இடத்தில் சில மாதங்களுக்கு முன்பு குழாயில் ஏற்பட்ட கசிவை சரி செய்தனர்.
சிமென்ட் சாலை அமைக்க வேண்டிய தகவலை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டோம். பொதுமக்களின் நலன் கருதி நகராட்சி நிதியில் இருந்து அந்த சாலையை சரி செய்வது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திடம் மீண்டும் ஆலோசனை செய்யப் படும். விரைவில், சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT