Published : 25 Oct 2016 10:47 AM
Last Updated : 25 Oct 2016 10:47 AM
தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவ, மாணவிகளுக்கு கல்வி புகட்டுவதாகக் கூறி, அன்றாடம் கசக்கிப் பிழிகின்றன என்று, திருப்பூர் தனியார் பள்ளி மாணவி ஒருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
தனியார் கல்வி நிறுவனங்களில் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை, சுமார் 12 மணி நேரம் வகுப்புகள், தேர்வுகள் என தொடர்ச்சியாக பள்ளிக்கூடம் செயல்படுகிறது.
சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் என வரவழைத்து, மாலைதான் விடுகின்றனர். இதெல்லாம் பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால், மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாவதை யாரும் அறியவில்லை.
விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், கல்வி நிறுவனங்கள் மதிப்பெண்ணை மட்டும் இலக்காக வைத்துக்கொண்டு மாணவ, மாணவிகளை வதைப்பது தொடர்பாக, கல்வித்துறை அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை.
இதனால், கிராமத்தில் இருந்து தனியார் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, எங்களைப் போன்ற பெண் குழந்தைகள், உடலளவில் மிகுந்த சோர்வை சந்திக்கிறோம். இதனால், படிப்பில் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை.
பள்ளியின் முதன்மை நோக்கமான மதிப்பெண் பெறுவதும் குறைகிறது. இரவு நேரங்களில் வீட்டுக்கு வந்து பாடம் படிப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இரவில் தூக்கம் வராமல், பலர் சிரமத்துக்கு ஆளாகிறோம்.
குறிப்பாக 9, பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு அந்த ஆண்டில் நடத்த வேண்டிய பாடங்களை முழுமையாக நடத்தாமல், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களை நடத்துகின்றனர். இதனால், பாடங்களை முழுமையாக உள்வாங்க முடிவதில்லை.
அரசு விடுமுறை நாட்களில்கூட வகுப்புகள் நடத்தப்படுவதுதான் வேதனை. இதுதொடர்பாக, கல்வித் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. 12 மணி நேரம் பள்ளிகள் செயல்படுவதால், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்” என்றார்.
இதுகுறித்து கல்வியாளர்கள் சிலர் கூறும்போது, “கல்வி நிறுவனங்களால், மாணவர்கள் வெறும் மதிப்பெண் இயந்திரமாக மாறிவரும் போக்கு, தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பள்ளியிலும், குடும்பத்திலும் மாணவர்களோடு அமர்ந்து, அவர்களது பிரச்சினையை தீர்ப்பதற்கு பதில், மன அழுத்தத்தை அதிகரிக்கும் வேலையைத் தான் இன்றைய தனியார் கல்வி நிறுவனங்கள் செய்கின்றன.
மதிப்பெண் இயந்திரங்களாக மட்டுமே மாணவர்கள் பாவிக்கப்படுவதால், சமூகத்தில் இன்றைக்கு படித்தவர்கள் அதிகம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தனியார் கல்வி நிறுவனங்களில், தமிழக பள்ளிக் கல்வித் துறை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே, இப்போக்குக்கு கடிவாளம் இட முடியும்.
மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், தனியார் பள்ளிக் குழந்தைகளுடன் போட்டி போட முடியாமல் மருத்துவம், பொறியியல் உட்பட கல்லூரி மேற்படிப்புகளை படிக்க சிரமத்தை சந்திக்கின்றனர்” என்றனர்.
திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட பாடங்களை மட்டும்தான் நடத்த வேண்டும். விதி மீறும் தனியார் பள்ளிகள் மீது புகார் அளித்தால் விசாரிக்கலாம்.
அதேபோல், தேர்வு நேரம் நெருங்குவதால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தொடர்பாக, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்துவோம். மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசு விதிகள் உள்ளதால், மீறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT