Published : 21 Oct 2016 12:55 PM
Last Updated : 21 Oct 2016 12:55 PM
காட்பாடியில் நாய்கள் தொல்லை
காட்பாடி பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. சாலையில் நடந்து செல்லவே பயமாக உள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையாக தெரிவிக்க முடியவில்லை. எனவே, அதிகாரிகள் இதை கவனித்து, நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை செய்யவேண்டும்.
-பழனி, காட்பாடி.
ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்
பேரணாம்பட்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் 800-க்கும் மேற்பட்ட மாணவி கள் படிக்கின்றனர். இங்கு, 25 முதுநிலை ஆசிரியர்கள் பணியில் இருக்கவேண்டும். ஆனால், வேதியியல், ஆங்கிலம், விலங்கியல், உயிரியல், தாவரவியல் பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர் பணியிடங் கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளன. இதனால், மாணவிகள் படிப்பதற்கு சிரமப்படு கின்றனர். எனவே, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.பஷீருத்தீன், பேரணாம்பட்டு.
பயன்படுத்த முடியாத கழிப்பறை
வாலாஜா ஒன்றியம் குடிமல்லூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டுக்காக கழிப்பறை கட்டினர். அப்போது, அரசுப் பள்ளி வளாகத்தில் இருந்த மழைநீர் சேகரிப்புத் தொட்டியை கழிப்பறைக்கான செப்டிக் டேங்க்காக இணைத்துவிட்டனர். அதில் தண்ணீர் செல்லவில்லை. இதனால், கடந்த 6 மாதங் களாக கழிப்பறையை கட்டி முடித்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் திறந்தவெளியில் செல்கின்றனர்.
இதுகுறித்து, வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
- அப்துல்கலாம் நற்பணி மன்றம், குடிமல்லூர்.
குண்டும் குழியுமான சாலை
காட்பாடி காந்தி நகர் மேற்குப் பகுதியில் உள்ள அரசுக் கல்வியியல் கல்லூரிக்கு எதிர்ப்புறம் உள்ள சாலை கடந்த 5 ஆண்டு களாக குண்டும் குழியுமாக உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப் படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேகர், வஞ்சூர்.
சூரிய ஒளி மின்சாரம் தேவை
தமிழகத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடைகள், மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கின்றன. அத்தகைய பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் சூரிய ஒளி மின்சாரம் மூலம் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். மேலும், அதே இடத்தில் செல்போன்களுக்கு சார்ஜர் ஏற்றும் வசதியையும் செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ஜனார்த்தனன், திருவண்ணாமலை.
சாலையோரத்தில் வாகனங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மில்லத் நகரில் செய்யாறு பாலம் அருகே திருமண மண்டபம் ஒன்று உள்ளது. அதன் அருகே நிறைய உணவகங்கள் உள்ளன. அதன் காரணமாக லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால், பள்ளிக்கு செல்லும் வழித்தடம் மறிக்கப்படுகிறது. மாணவ-மாணவிகளால் எளிதாக நடந்து செல்ல முடியவில்லை. அந்தச் சாலையில், பாதசாரிகள் நடந்து செல்வதற்கான குறியீட்டை வெள்ளை நிற பெயின்ட் மூலம் நெடுஞ்சாலைத் துறையினர் அடித்துக் கொடுக்கவேண்டும்.
- வாசகர், செங்கம்.
காவிரி கூட்டுக் குடிநீரில் துர்நாற்றம்
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சில வார்டுகளில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இத்திட்டம் தொடங்கப்பட்டபோது சுத்திகரிக்கப்பட்ட காவிரி குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பாதாளச் சாக்கடைத் திட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால், பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளன. இதில், சில தெருக்களில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் இணைப்புகள் உடைந்து சேதமடைந்துள்ளன. அதில் கழிவுநீர் குடிநீருடன் கலக்கிறது. இதனால், தண்ணீர் துர்நாற்றம் அடிக்கிறது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-அசோகன், அம்பலூர்.
அடிப்படை வசதி இல்லாத ஊராட்சி
ஜோலார்பேட்டை ஒன்றியம், பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சாலை, குடிநீர், தெரு மின்விளக்கு வசதி இல்லை. இப்பகுதி முழுவதும் அடர்ந்த முட்செடிகள், சீமைக் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால், இப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
மேலும், இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இதுவரை அமைத்துத் தரப்படவில்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணவேண்டும்.
-சச்சிதானந்தம், பாச்சல், திருப்பத்தூர்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT