Published : 07 Oct 2016 11:44 AM
Last Updated : 07 Oct 2016 11:44 AM
அன்புள்ள வாசகர்களே.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
044-42890005 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:
ரவுண்டானா அமைக்க வேண்டும்
ராயக்கோட்டை பைபாஸ் சாலையில் காவல் துறையினர் இல்லாத நேரத்தில் வாகனங்கள் தாறுமாறாக வருவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே அங்கு ரவுண்டானா அமைத்தால் விபத்து அபாயத்தை தவிர்க்கலாம். இதேபோல், கிருஷ்ணகிரி சென்னை பைபாஸில் அமைந்துள்ள திருவண்ணாமலை சர்வீஸ் சாலை வளைவில் விபத்து அபாயம் நிலவுகிறது. அதை தவிர்க்க அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
- வெங்கட்ராஜ், கிருஷ்ணகிரி.
பேருந்து நிலையம் சீரமைப்பு தேவை
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே வரும் சாலை சிதிலமடைந்து, ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டு ஓராண்டுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த குண்டும் குழியுமான சாலை வழியாக பேருந்துகள் குலுங்கி குலுங்கி வரும்போது பயணிகளுக்கு கடுமையான உடல் வலி ஏற்படுகிறது. உடனடியாக இந்த சாலையை சீரமைத்து பயணிகளின் இன்னலை போக்க வேண்டும்.
- பா.கதிரேசன், ராணிப்பேட்டை, ஆத்தூர்.
பாலித்தீனை தடுக்க ஆய்வு அவசியம்
ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடைகளில் பாலித்தீன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. இவற்றை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதம் ஒரு முறை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.நடராஜன். ஓசூர்.
கொசுத் தொல்லையால் அவதி
ஈரோடு மாநகராட்சி 45-வது வார்டில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. கொசு மருந்து அடிப்பதில்லை. இதுபற்றி மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
- சஞ்சய்காந்தி, ஈரோடு.
உடைந்த குழாயால் குடிநீர் வீண்
ஈரோடு மாவட்டம் சித்தோடு - பெருந்துறை செல்லும் சாலையில் 1 கி.மீ., தொலைவில் உள்ள நகர் என்ற இடத்தில் திருப்பூருக்குச் செல்லும் குடிநீர் குழாய் கடந்த 3 மாதங்களுக்கு முன் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதுதொடர்பாக புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
- ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சித்தோடு.
பயனில்லா குடிநீர் குழாய்
நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை முன் குடிநீர் பயன்பாட்டுக்கென கடந்த ஓராண்டுக்கு முன் போடப்பட்ட குழாயில் தண்ணீர் வருவதில்லை. அதனால், அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
- என். ராஜ்குமார், நாமக்கல்.
திறந்தவெளி பார்
சேலம் சத்திரம் பகுதியில் இருந்து காந்தி மைதானத்துக்கு செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மாலை நேரத்தில் இங்கு மது வாங்குபவர்கள் சாலையை ஒட்டி அமைந்துள்ள ரயில்வே சுற்றுச் சுவரின் மீது அமர்ந்து மது அருந்துகின்றனர். சாலை நெடுக இவ்வாறு பலரும் மது அருந்துவதால், மாலை நேரத்துக்கு மேல் அந்த சாலையில் நடந்து செல்ல பெண்களும் பொதுமக்களும் அச்சப்படுகின்றனர். திறந்தவெளி பாரை மூட போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.சீதாபதி, சத்திரம், சேலம்.
எச்சரிக்கை அறிவிப்புகள் தேவை
வாழப்பாடியில் சேலம்-உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையுடன் புறவழிச்சாலை இணையும் இடத்தில் போதுமான எச்சரிக்கை பலகைகள் இல்லை. குறிப்பாக, இரவு நேரத்தில் இணைப்புச் சாலை இருப்பதை எச்சரிக்கும் ஒளிரும் பலகைகள் வைக்கப்படவில்லை. இதனால், 4 வழிச்சாலையில் வரும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் திடீரென புறவழிச்சாலையில் உட்புகும்போது, அவற்றின் பின்னால் வரும் வாகனங்கள் தடுமாறுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. புறவழிச் சாலையில் இருந்து 4 வழிச்சாலைக்கு வாகனங்கள் வருவதை உணர்த்தும் வகையிலும் எதிர்சாலையில் எச்சரிக்கை பலகைகள் வைத்து விபத்து அபாயத்தை தடுக்க நடவடிக்கை தேவை.
- எஸ்.வசந்தகுமார், வாழப்பாடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT