Published : 30 Sep 2016 09:52 AM
Last Updated : 30 Sep 2016 09:52 AM
அக்கரை பச்சை
கூண்டோடு கட்சி மாறும் காட்சி கள் தமிழகத்துக்கு மட்டும் சொந்த மானவையா என்ன? மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் போய்விடுமோ என்று அரசியல் பார்வையாளர்கள் கருதும் அளவுக்கு, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது திரிணமூல் கட்சி. அன்றிலிருந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி நிர்வாகிகள் திரிணமூல் கட்சிக்குத் தாவிவிட்டார்கள்!
அடுத்த வாரிசு
உத்தரப் பிரதேசத்தில் வாரிசு அரசியல் பிரச்சினை இந்த நூற்றாண்டில் ஓயாது போலிருக்கிறது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் தம்பியும், மாநில அமைச்சருமான ஷிவ்பால் யாதவின் மகன் ஆதித்யா யாதவ் (28) விரைவில் அரசியல் களத்தில் குதிக்கவிருக்கிறார். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் ஷிவ்பால் யாதவின் தொகுதியான ஜஸ்வந்த் நகரிலிருந்து ஆதித்யா யாதவ் போட்டியிடுவார் என்கிறார்கள்.
எதிரிவினை
2014-ல் சிரியா, இராக் நாடுகளின் சில பகுதிகளைக் கைப்பற்றி தங்கள் சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்ட ஐஎஸ் அமைப்பு, தற்போது சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஐஎஸ் சந்திக்கும் பின்னடைவால் அமெரிக்காவுக்குள் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிட்டிருக்கிறது அமெரிக்கப் புலனாய்வுத் துறை!
நானே ராஜா!
சாணக்கியனே சத்ரியனாகும் கதை விரைவில் நிகழும்போல் தெரிகிறது. சாதுர்யமான தனது உத்திகள் மூலம் நரேந்திர மோடி, நிதிஷ் குமாரின் தேர்தல் வெற்றியைச் சாத்தியமாக்கிய பிரஷாந்த் கிஷோர் தற்போது காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வெற்றி தேடித் தருவதில் ஈடுபட்டிருக்கிறார். 2017-ல் நடக்கவிருக்கும் பஞ்சாப், உத்தரப் பிரதேசத் தேர்தல்களுக்குப் பிறகு, அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணி புரிவதைக் கைவிட்டுவிட்டு அரசியலில் நுழையப்போகிறார் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT