Published : 29 Sep 2016 09:37 AM
Last Updated : 29 Sep 2016 09:37 AM

நம்மைச் சுற்றி: உலகிலேயே வயதான அணை எது?

ஒரு நெல்லை விதைத்தால் அது வளர்ந்து, ஒன்றுக்கு நூறாக நெல்மணிகளைத் தரும் என்பது இன்று நம் எல்லோருக்கும் தெரியும். இதை மனிதர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து, சுமார் 10 ஆயிரம் வருடங்கள்தான் ஆகின்றன. உணவுக்காக நாடோடியாகத் திரிந்த மனிதர்கள், ஓரிடத்தில் உட்கார்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பித்தது அப்போதுதான்.

அதிகமாக விவசாயம் செய்ய ஆரம்பித்ததும் அதிக மாகத் தண்ணீரும் தேவைப்பட்டது. தன் போக்கில் போய்க்கொண்டிருந்த தண்ணீரைத் தேக்கவும், திசை திருப்பவும் ஆற்றுக்குக் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி னார்கள். அதுதான் நாளடைவில் அணைக்கட்டானது.

முன்பு மெசபடோமியா என்றும், தற்போது மத்தியக் கிழக்கு நாடுகள் (ஈரான், இராக், எகிப்து உள்ளிட்டவை) என்றும் நாம் அழைக்கிற பகுதியில்தான் முதன்முதலில் அணைகள் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள். அங்கே 5,000 வருடங்களுக்கு முன்னால், அதாவது கி.மு.3000 வாக்கில் கட்டப்பட்ட ‘ஜாவா அணை’தான் இப்போது இருக்கும் அணைகளிலேயே மிகப் பழமையானது. ஜோர்டான் நாட்டில் இருக்கும் அந்த அணை தற்போது பயன்பாட்டில் இல்லை. அழிந்து போய் மனித உழைப்பின் பிரம்மாண்டத்தை உணர்த்தும் வரலாற்றுச் சின்னமாக, கற்களின் குவியலாய் கிடக்கிறது.

வயது அடிப்படையில், ‘சாத்தல் கபாரா’ அணைதான் இதன் தம்பி. இது எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருக்கிறது. கி.மு. 2600-களில் இது கட்டப்பட்டிருக்கலாம். அதுவும் தற்போது அழிந்துகிடக்கிறது. அதேபோல ஏமன் நாட்டிலும் ‘கிரேட் டாம் ஆப் மெரிப்’ எனும் அணை இருக்கிறது. அதைக் கி.மு. 1700-களில் கட்ட ஆரம்பித்திருக்கின்றனர். பல்வேறு காலகட்டங்களில் பலப்படுத்தியிருக்கின்றனர். அதுவும் அழிவின் விளிம்பில் உள்ளது. இப்படி பல சிறு அணைகள் மத்தியக் கிழக்கு நாடுகளில் அழிந்து கிடக்கின்றன.

கி.மு. 200-ல் தமிழகத்தில் காவிரியாற்றின் குறுக்கே மன்னர் கரிகாலன் கட்டியது கல்லணை. 15 அடி உயரம், 66 அடி அகலம், 980 அடி நீளம் எனப் பிரம்மாண்டமாகக் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இடையில் அணை பலப்படுத்தப்பட்டாலும், இன்றளவும் பயன்பாட்டில் இருக்கிற உலகின் பழம்பெரும் அணையாகக் கல்லணை திகழ்வது, தமிழகத்துக்குப் பெருமை. ஆனால், அதில் காவிரி நீர் வர ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் காத்திருப்பதுதான் சமகால சோகம்!

- பிரம்மி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x