Published : 12 May 2016 10:19 AM
Last Updated : 12 May 2016 10:19 AM
இந்த வாரத்துக்கான தலைப்பு
ஆட்சிக்கு வந்தபிறகும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைவர்கள் / வேட்பாளர்கள் / கட்சிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என நினைக்கிறீர்கள்? நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகளைக் கூறுங்கள். |
இமாம்ராசிக், கொளத்தூர்
தேர்தலில் வெற்றி பெற்றவர்களையும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண் காணிக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் அடுத்த தேர்தலில் போட்டி யிட தடை விதிக்க வேண்டும். அப்பொழுது தான் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்பதுடன், சாத்தியமான வாக்குறுதிகளை யும் வழங்குவார்கள்.
வி.சீதாராமன், அடையாறு
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கட்சி அங்கீகாரம், தேர்தல் சின்னம் ஆகியவற்றை வழங்குகிறது. வேட்பாளர் களின் தகுதி, சொத்து மதிப்பு, குற்றப்பின்னணி ஆகியவற்றை வெளியிடச் செய்கிறது. கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தை கண்காணித்து, தேர்தல் செம்மையாக நடைபெற நடவடிக்கை எடுக்கிறது. இந்த வரிசையில், அரசியல் கட்சிகள் வெளியிடுகின்ற தேர்தல் அறிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
எந்த கட்சியும் இலவசம் அல்லது சலுகை என்ற எந்த அடிப்படையிலும் வாக்குறுதி அளிக்கக்கூடாது என தடை விதிக்க வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால், எந்த தொகுதியில் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையோ, அந்த தொகுதியில் அந்த கட்சி அடுத்து வரும் 2 தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
ஆர்.கோகிலா, காஞ்சிபுரம்
ஒரு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளரிடம், வாக்குறுதி பட்டியலையும் தேர்தல் ஆணையம் பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்தலின்போது, வாக்கா ளர்களிடம் கொடுத்த வாக்குறுதியில் 50 சதவீதத்தை 2 ஆண்டுகளில் நிறைவேற்றாத வேட்பாளரை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவருக்கு வழங்கப்பட்ட சலுகை, ஊதியம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். மீதமுள்ள 3 ஆண்டுகளில் அந்த தொகுதிக்கான திட்டங்களை தேர்தல் ஆணையமே முன் நின்று செய்து தர ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருந்தால், வாக்குறுதி அளிப்பவர்கள், ஒரு கணம் யோசித்து செயல்படுவார்கள்.
இரா.ப.ஞானவேலு, செங்கல்பட்டு
அரசியல் கட்சியினர் ஊழல் செய்தால் தண்டிக்கும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதில், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சியினர், வேட்பாளர்களையும் தண்டிக்கும் சட்டப் பிரிவையும் சேர்க்க வேண்டும். மேலும், வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் பிரதிநிதியை திரும்பப்பெறும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டும். இதற்காக சமூக நலனில் அக்கறை செலுத்தும் அமைப்புகள் மூலம் பொது இடங்களில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இதன் முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்து மக்கள் பிரதிநிதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது. அதற்குப் பதிலாக அந்தத் தொகுதியின் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் கட்சித் தலைமையும் மக்கள் பிரதிநிதியும் அச்சத்துடன் மக்கள் பணியில் அக்கறை செலுத்துவார்கள்.
வெங்கடேசன், குரோம்பேட்டை
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் அளிக்கும் வாக்குறுதி களை நம்பித்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் நிறைவேற்றாத பல வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். இதை மக்கள் புரிந்துகொண்டு அந்தக் கட்சியை தேர்தல் களத்தில் தோல்வி அடையச் செய்கிறார்கள். இதற்காக மக்கள் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
அதற்குப் பதிலாக குறிப்பிட்ட கால இடைவெளியில் செயல்பாடுகளின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் சட்டம் அமல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தாலே கவர்ச்சியான வாக்குறுதிகளை அரசியல் கட்சியினர் கொடுக்க மாட்டார்கள். மக்களும் பழிவாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்
தேர்தல் வாக்குறுதிகளை பதவிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் நிறைவேற்றாவிட்டால் அமைச்சராக இருந்தாலும் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும் அவர்களை பதவி நீக்கம் செய்வதுடன், கைது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருக்காக அரசு செய்த செலவுகளான ஊதியம் மற்றும் பிற சலுகைகள் அனைத்தையும் அவர் சார்ந்த கட்சித் தலைமை பொறுப்பேற்று அரசு கஜானாவில் செலுத்த வேண்டும். ஆளுங்கட்சி வேறு, அரசாங்கம் என்பது வேறு என்ற வகையில் செயல்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT