Published : 05 May 2016 10:46 AM
Last Updated : 05 May 2016 10:46 AM

வாக்காளர் வாய்ஸ்: எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?

இந்த வாரத்துக்கான தலைப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் தங்களை மிகவும் கவர்ந்த வாக்குறுதி/திட்டம் எது? எந்த வகையில் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறீர்கள்.

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

ஆ.நந்தகோபாலன், ராமாபுரம்

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புத் திட்டம் ஆகும். இதனால் கிராமப்புற மக்களும், விழிப்புணர்ச்சியில்லாத மலைவாழ் மக்களும், நகர்ப்புறங்களில் விளிம்பு நிலையிலுள்ள மக்களும் பயன்பெறுவார்கள். இவர்களுக்கு முன்னுரிமை அளித்தால் இவர்கள் குடும்பத்தினர் முன்னேற்றம் அடைவார்கள். இத்திட்டத்தை அனைத்து சாதியினருக்கும் சேர்த்து அமல்படுத்து வேண்டும். இது ஒரு அருமையான திட்டம் ஆகும்.

மகேந்திரன், போரூர்

தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டுள்ள பல கட்சிகளும் மதுவிலக்கை கட்டாயம் அமல்படுத்துவோம் என்று உறுதி கூறியுள் ளன. இதுவே இன்று பிரதானமாகப் பேசப்படுகிறது. பிரச்சாரமும் செய்யப் படுகிறது. ஒட்டுமொத்த சமுதாயமும் குடிகார சமுதாயமாக மாறியிருக்கும் சூழ்நிலையில் படிப்படியாக மதுவிலக்கு என்பதெல்லாம் சரிவராத வேலை. மின்சாரக் கட்டணத்தை மாதந்தோறும் கணக்கிடுவதும் மக்களுக்கு பயன்தரும் திட்டமாகும்.

எஸ்.லெட்சுமிபதி, தாம்பரம்

என்னை மிகவும் கவர்ந்த தேர்தல் வாக்குறுதி விவசாயத்துக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி ஆகும். உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். வேளாண் தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற நாடுதான் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும். அடுத்ததாக ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவது ஜனநாயக நாட்டுக்கு ஆபத்தானதாகும். எனவே ஜாதி மறுப்புத் திருமணங்களை அரசே ஆதரித்து அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் நாட்டில் ஜாதி மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் அமைய வாய்ப்பு ஏற்படும்.

ஜவஹர், முகலிவாக்கம்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் உள்ள கட்டண தரிசன முறையை நீக்குவோம் என்ற தேர்தல் அறிக்கைதான் என்னை அதிகம் கவர்கிறது. காசு கொடுத்தவர்கள் அருகில் செல்லலாம் கொடுக்காதவர்கள் செல்ல முடியாது என்ற தீண்டாமை கொடுமையை அறவே நீக்க வேண்டும்.

எஸ்.ஜான்சுந்தர், நன்மங்கலம்

தேர்தல் அறிக்கை களில் முதியோர்களுக்கு அறிவிக் கப்பட்டுள்ள வாக்குறுதிகள் மூத்த குடிமக்களாகிய எங்க ளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. மாதம் இரண்டாயிரம் ரூபாய் ஓய்வூதியம், காப்பீட்டுத் திட்டம், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் முதியோர் பிரிவு, தனியார் கூட்டு முயற்சியில் முதியோர் இல்லங்கள், பேருந்துகளில் இலவச பயணம், மதிய உணவுத் திட்டம் ஆகிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால் மறக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட ஏழை முதியோர்கள் சந்தோஷமாக வாழ வழிவகுக்கும்.

தமிழரசன், வடபழனி

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில், அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம் போன்றவை இன்றைய சூழலில் அனைவருக்கும் தேவைப்படும் நல்ல திட்டங்களாகும். வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்ற வாக்குறுதியும் வரவேற்கத்தக்கது. விதவைகளுக்கு மறுவாழ்வு, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும், லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது போன்ற பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையே சிறப்பானது என்பது எனது கருத்து.

பாலமுருகன், வளசரவாக்கம்

மதுவிலக்கு, பால் விலை குறைப்பு என்பன போன்றவை மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு பயனுள்ளவை ஆகும். விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி ஆகியவை சரியாகத் தோன்றினாலும், ஒவ்வொரு தேர்தலின்போதும் இதே நடைமுறை பின்பற்றப்படுவது, வாங்கிய கடனை கட்ட வேண்டாம் என்று மக்களை தூண்டுவது போல இருக்கிறது. எனவே, இனி எந்த கட்சியும் இதுபோன்ற வாக்குறுதியை அளிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். மின்சாரக் கட்டணத்தை குறைக்க, மாதம் ஒருமுறை மின்சார பயன்பாட்டின் அளவு கணக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருப்பது உண்மையில் நல்ல திட்டமாகும்.

பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

தேர்தல் அறிக்கைகளில் மாநிலக் கல்வி முறையான சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ கல்வித் தரத்துக்கு இணையாக உயர்த்துவோம் என்று ஒரு பிரதான கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புதான் என்னை மிகவும் கவர்ந்த தேர்தல் வாக்குறுதியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x