Published : 06 May 2016 10:16 AM
Last Updated : 06 May 2016 10:16 AM

வாக்காளர் வாய்ஸ்: தேர்தல் அறிக்கை!

இந்த வாரத்துக்கான தலைப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் தங்களை மிகவும் கவர்ந்த வாக்குறுதி/திட்டம் எது? எந்த வகையில் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறீர்கள்.

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

அனிதா, சென்னை

தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் எங்களை மிகவும் கவர்ந்தது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்துவரும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பும், செவிலியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பும்தான். ஏனெனில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் எந்தவித மருத்துவ விடுப்போ, மகப்பேறு விடுப்போ இல்லாமல் தினசரி 12 மணி நேரத்துக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம். எனவே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

மாரி, திருமுல்லைவாயில்

மதுவிலக்கு, சென்னைக்கு புறவழிச்சாலை, விவசாயத்துக்கு முன்னுரிமை, அணையில் இருந்து ஆறு, குளங்களை இணைப்பது, நெல்லுக்கு ஆதார விலை நிர்ணயம் போன்ற வாக்குறுதிகள் வரவேற்கத்தக்கவை. கடந்த 18 ஆண்டுகளாக மதுவிலக்கு குறித்து பேசிவரும் ஒரு முக்கிய கட்சியின் அறிவிப்பு ஏற்கக்கூடியதாக இருக்கிறது.

கோ.கனிமொழி, பெரம்பூர்

மதுவிலக்கு, விவசாய கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம் ரத்து, கல்விக் கடன் தள்ளுபடி ஆகியன வரவேற்கும் விதமாக உள்ளன. நகரங்களில் அதிகப்படியான டாஸ்மாக் கடை திறந்துள்ளதால் பலரும் பல்வேறு விதங்களில் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள், மாணவர்கள், நடுத்தர மக்கள் பயன்படும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதேபோல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. ஏன் என்றால் புதிய பென்ஷன் திட்டத்தால் ஏமாற்றத்தில் இருந்த அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

பொன்னரசி, வில்லிவாக்கம்

விவசாயிகளையும், ஆடு மாடு மேய்ப்பவர்களையும் அரசு ஊழியராக்க வேண்டும் என்ற தேர்தல் அறிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. எல்லா கட்சியினரும் மேல்மட்டத்தில் உள்ளவர்கள், நடுத்தர மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். ஆனால், வறுமையில் இருக்கும் விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்காமல் இருக்கிறது. அவர்களைப் பற்றிய தேர்தல் அறிக்கை ஆச்சரியமாகவும் விவாதிக்கக் கூடியதாகவும் உள்ளது. அதேபோல, பால் விலை குறைப்பு, விவசாய கடன் தள்ளுபடி ஆகியவை பாராட்டும்படியாக அமைந்துள்ளன.

ரவி, அரக்கோணம்

பூரண மதுவிலக்கு, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி, முதியோர் உதவித் தொகை உயர்வு, வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என்பதை வரவேற்கிறேன். குறிப்பாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அவசியமாக இருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது. எனவே, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும்.

பொன்.வள்ளுவன், கே.கே.நகர்

குழந்தைகளுக்கு சத்துணவுடன் பால், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு, விவசாய கடன் தள்ளுபடி, நீர் பாசனத்துக்கு தனி அமைச்சர் என்ற அறிவிப்பு பாராட்டும்படியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் திட்டத்தால் விவசாயிகளிடம் இருந்து அதிகப்படியான பால் கொள்முதல் செய்யப்படும். கால்நடை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வருவாய் கிடைப்பதன் மூலம் புதிய வெண்மைப் புரட்சி ஏற்படும். மாதந்தோறும் மின்சாரத்தை கணக்கிடுவதால் நடுத்தர குடும்பத்தில் செலவு மிச்சமாகும். இந்த நடைமுறை கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது. அதேபோல, நீர் பாசன திட்டத்துக்கு தனி அமைச்சர் என்ற அறிவிப்பால் சீரழிக்கப்பட்ட நீர் நிலைகளின் வழித்தடங்கள் மீட்கப்படும். நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

ராஜகுரு, ராஜாஅண்ணாமலைபுரம்

பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சில கட்சிகள் ஒரே மாதிரியாக அறிவித்திருப்பது சிறப்பானது. இலவசக் கல்வி, இலவச மருத்துவம், அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம் ரத்து என்பன ஏற்றுக்கொள்ளக் கூடியவை. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதை அனைத்து கட்சியினரும் வாக்குறுதியாக கொடுத்திருப்பதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது.

கா.இளங்கோவன், அண்ணாசாலை

தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள, படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித் தொகை என்ற திட்டம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x