Published : 13 May 2016 10:49 AM
Last Updated : 13 May 2016 10:49 AM
இந்த வாரத்துக்கான தலைப்பு
ஆட்சிக்கு வந்தபிறகும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைவர்கள் / வேட்பாளர்கள் / கட்சிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என நினைக்கிறீர்கள்? நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகளைக் கூறுங்கள். |
ஜெயச்சந்திரன், ஸ்ரீ பெரும்புதூர்
அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப்பத்திரமாக தாக்கல் வேண்டும். ஜெயித்தபின் 5 ஆண்டுகளுக்குள் அதை நிறைவேற்றவில்லை எனில் தொகுதி மக்களிடம் அறிக்கை பெற்று அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் பறிக்கப்பட வேண்டும், வெற்றி பெற்றவர்கள் மீண்டும் எந்தத் தேர்தலிலும் போட்டியிட ஆயுட்காலத் தடை விதிக்க வேண்டும். அல்லது வாக்குரிமையை பறிக்கலாம்.
பாலகணேஷ் சுயம்புலிங்கம், திருவான்மியூர்
வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றவுடன் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றாவிட்டால் அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அரசு விதிகள் உள்ளவாறு சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் ஆகியோருக்காக சட்டவிதிகளை வகுக்க வேண்டும்.
எம்எல்ஏ என்பவர் மக்களின் உத்தரவுப்படி நடக்கும் அரசு ஊழியர் ஆவார். இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு கிடைப்பதுபோலவே மாதந்தோறும் சம்பளமும், 5 வருடங்கள் முடிந்தபிறகு ஓய்வூதியமும் பெறுகின்றனர். 30 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்களைவிட அதிக பலன்களை பெறுகின்றனர். எனவே அரசு ஊழியர்களுக்கு உள்ளதைப் போன்று தனிச்சட்ட வரைவு அமைக்க வேண்டும்.
சரியாக செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவல கங்களில் ஜமாபந்தி நடத்துவதுபோல், எம்எல்ஏக்களும் தாங்கள் செய்த பணிகளை மக்கள் மன்றத்தில் வைத்து விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். வருடாந்திர அறிக்கையை வெள்ளை அறிக்கையாக தினசரி பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றும் ஆணையிடலாம்.
கவுசல்யா, சிங்கப்பெருமாள்கோவில்
தேர்தலின்போது கட்சிகளும் வேட்பாளர்களும் கொடுக்கின்ற வாக்குறுதிகளின் அடிப்படையில்தான் பெரும்பாலானோர் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கின்றனர். ஆனால் தேர்தல் முடிவுற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு கட்சிகளிடமும், வெற்றி பெற்ற வேட்பாளர்களிடமும், ‘கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை?’ என்று எந்த வாக்காளரும் கேட்க முடியாது. தேர்தலில் தவறாமல் வாக்களியுங்கள், வேட்பாளர்கள் பணம் கொடுத்தால், புகார் தெரிவியுங்கள், தேர்தல் முறைகேடு நிகழ்ந்தால் தொலைபேசி மூலமாக புகார் தெரிவிக்கலாம் என்பன போன்ற வசதிகளை, தேர்தலின்போது வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் தருகிறது.
ஆனால், தேர்தல் முடிவுற்ற பின்னர், வாக்காளர்களுக்கு வசதி அல்லது அதிகாரத்தை தேர்தல் ஆணையம் செய்து தருவதில்லை. மாறாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளையும், வேட்பாளர்களையும் கேள்வி கேட்கின்ற அதிகாரத்தை, தேர்தலுக்குப் பின்னர் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டாயம் ஏற்படுத்தித்தர வேண்டும். இதன் மூலமாக, தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை கட்சிகளும் வேட்பாளர்களும் கொடுப்பதைத் தடுக்க முடியும்.
எஸ்.கார்த்தி, திருக்கழுக்குன்றம்
தேர்தல் நடத்துவதற்கான அதிகாரம் மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மாறாக, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், ஆட்சி அமைத்த கட்சிகள் என அனைவரையும் கண்காணித்து, மக்களாட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களை கண்டிக்கின்ற, தண்டிக்கின்ற அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும்.
இதில், முதலாவதாக, தேர்தலின்போது பதிவு செய்யப்படும் விதிமீறல் வழக்குகளுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டங்களை வகுக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்க, தனி நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். அதாவது, ஆட்சியில் இருப்பவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டது போல, தனி அதிகாரம் கொண்ட நீதிமன்ற அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
இந்த அமைப்பு வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து, வேட்பாளர்களையும் கட்சித் தலைவர்களையும் தண்டிக்கக் கூடிய அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும், தேர்தலுக்குப் பின்னர் சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளை கண்காணித்து, மக்களாட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களை தண்டிக்கும் நிரந்தர அமைப்பாக செயல்பட வேண்டும்.
மனோகரன், பீர்க்கங்கரணை
தேர்தல் வாக்குறுதிகளை ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றாத வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் பதவி நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் அத்தொகுதியில் 2-ம் இடம் பெற்றவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT