Published : 01 Apr 2016 10:43 AM
Last Updated : 01 Apr 2016 10:43 AM

சொன்னது சொன்னபடி: 8 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

8 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு

திருவள்ளூர் மாவட்டம், தொழுதாவூர் ஊராட்சியில் சுமார் 800 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால், நீரேற்று நிலையத்தில் உள்ள மின் மோட்டார் அடிக்கடி பழுதாவதாக கூறுகின்றனர். இந்த பிரச்சினையால் இங்கு கடந்த 8 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே இங்கு நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

ஆர்.குமார், தொழுதாவூர்.



சிற்றுந்து சேவை நீட்டிக்க வேண்டும்

அயனாவரம்- அமைந்தகரை இடையே எஸ்-55 என்ற எண் கொண்ட சிற்றுந்து இயக்கப்பட்டு வருகிறது. இதை கோயம்பேடு வரை நீட்டிக்க வேண்டும். இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோயம்பேடு சென்றுவர வசதி கிடைக்கும். மேலும், இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம், என்.எஸ்.கே. நகர் பகுதி மக்களும் பயனடைவர். மேலும் இந்த வழித்தடத்தில் மக்கள் கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் சிற்றுந்துகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

மணிவண்ணன், அண்ணாநகர்.



எழும்பூர் பூங்கா சீரமைக்கப்படுமா?

சென்னை எழும்பூரில் சிஎம்டிஏ உள்ள கட்டிடத்துக்கு எதிரே காந்தி இர்வின் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சென்னையில் வெள்ளம் வருவதற்கு முன்புதான் சீரமைத்து இருந்தனர். ஆனால், இப்போது அதன் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. விளக்குகள் உடைந்துள்ளன, அங்குள்ள இருக்கைகள் சேதமடைந்துள்ளன. எனவே இவற்றை சீர்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவதும் தொடர்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.சிவக்குமார், சிந்தாதிரிப்பேட்டை.



கூடுதல் பஸ் வசதி வேண்டும்

திருவள்ளூர் மாவட்டம் தக்கோளம் பகுதியைச் சுற்றி 15 கிராமங்கள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தக்கோளம் - திருவாலங்காடு இடையே அதிகாலை 5 மணிக்கு ஒரு பஸ்ஸும் இரவு 7 மணிக்கு ஒரு பஸ்ஸும் மட்டுமே இயக்கப்படுகின்றன. போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

எஸ். சங்கர், தக்கோளம்.



சிமென்ட் சாலை அமைக்க எதிர்ப்பு

வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் தொடர்ந்து சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதால், சாலை உயரமாகிவிட்டது. வீடுகள் பள்ளத்தில் உள்ளன. இதனால் சிறிதளவு மழை வந்தாலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதால் இப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே இப்பகுதியில் இனி சிமென்ட் சாலை அமைக்க கூடாது.

வாசகர், வில்லிவாக்கம்.



மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு

திருவள்ளூர் மாவட்டம், அன்னனூர் ஊராட்சியில், பிள்ளையார் கோயில் தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை சிலர் ஆக்கிரமித்து, கழிவுநீர் செல்லாதவாறு அடைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி, சாலையில் வழிந்தோடுகிறது. எனவே கால்வாய் மீதுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசகர், அன்னனூர்.



ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு

“சிங்கப்பெருமாள்கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நியாய விலைக் கடையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுந்து போன்றவற்றை இரு மாதங்களுக்கு ஒரு முறைதான் கொடுக்கின்றனர். அதுவும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் குறைவான அளவிலேயே கொடுக்கின்றனர். இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டால், “எங்களுக்கு பொருட்கள் வந்தால்தானே கொடுக்க முடியும். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் கொடுங்கள்” என்று கூறுகின்றனர். எனவே ரேஷன் பொருட்களை மாதந்தோறும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசகர், சிங்கப்பெருமாள்கோவில்.



பயணிகளுக்கு சிரமமான நடை மேம்பாலம்

சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து பூங்கா ரயில் நிலையத்துக்கு செல்வதற்கு வசதியாக நடைமேம்பாலம் அமைத்துள்ளனர். அதில் ஒருபுறம் படிக்கட்டுகளும், மறுபுறம் எஸ்கலேட்டரும் உள்ளது. பூங்கா ரயில் நிலைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் நேரடியாக அமைக்காமல் சற்று வளைந்த நிலையில் அமைத்துள்ளனர். வளைவான பகுதியில் அகலம் குறைவாக இருப்பதால், காலை, மாலை நெரிசல் நேரத்தில் அந்த இடத்தைக் கடக்க பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். முன்பு இருந்ததுபோலவே நேரடியாக படிக்கட்டுகள் அமைத்துத் தர வேண்டும்.

ராகவேந்திரபட், காக்களூர்.



அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x