Published : 21 Apr 2016 02:05 PM
Last Updated : 21 Apr 2016 02:05 PM

அன்பாசிரியர் நெகிழ்ச்சி: அரசுப் பள்ளிக்கு லேப்டாப் தந்த வாசகி

மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.

இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'தி இந்து' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

>அன்பாசிரியர் 16 - சிலம்பரசி: பிளாஸ்டிக் மறுசுழற்சி வித்தகர்! அத்தியாயத்தில் யாராவது எங்களின் கணினி வழிக் கற்றலுக்கான தொடக்கத்தை விதைத்துச் செல்வார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதாகச் சொல்லியிருந்தார் ஆசிரியர் சிலம்பரசி.

இந்நிலையில், இந்த தொடரைப் படித்த பெயரை வெளியிட விரும்பாத 'தி இந்து' வாசகி, பள்ளிக்கு தேவையான மடிக்கணினியை வாங்கி, சோழங்கநத்தம் அரசுப்பள்ளிக்கே கொண்டு சென்று கொடுத்திருக்கிறார். இதற்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் செலவாகி இருக்கிறது. திருச்சியைச் சேர்ந்த இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார்.

மடிக்கணினியை அளித்தது குறித்துப் பேசிய வாசகி, ''பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போதெல்லாம், எனக்குள் ஒரு விதமான குற்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். நம் பாரத்தோடு, இயற்கைக்கு இந்த அழுத்தங்களையும் தந்துகொண்டிருக்கிறோமே என்று தோன்றும். அன்பாசிரியர் சிலம்பரசி தொடரைப் படித்தவுடன், பிளாஸ்டிக் பொருட்களை வைத்தே ஓர் ஆசிரியர் எப்படியெல்லாம் தனது மாணவர்களுக்கு உதவுகிறார் என்று ஆச்சரியமாக இருந்தது.

உடனடியாக ஆசிரியர் சிலம்பரசியைச் சந்திக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவரைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டு, மடிக்கணினியோடு அவர்களின் பள்ளிக்கு சென்றேன். அவர்களைப் பார்த்தபின்னர், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதுதான் இந்த உலகத்துக்குச் செய்கின்ற நல்லதாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

என்னுடைய பெயரை இந்த உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பவில்லை. கொடுக்கும் நிலைமையில் எங்களை இறைவன் வைத்திருக்கிறார். உண்மையிலேயே சேவை செய்யும் ஆசிரியர்கள்தான் உயர்ந்தவர்கள்'' என்றார்.

இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x