Published : 25 Mar 2016 10:15 AM
Last Updated : 25 Mar 2016 10:15 AM
ஊரப்பாக்கம் மேற்கு, சக்தி விநாயகர் கோயில் தெருவில், எம்.ஜி.நகர் பேஸ் 1 பகுதியில், குடியிருப்பு ஒன்றில் கழிவுநீர் தொட்டி நிரம்பி, கழிவுநீர் தெருவில் விடப்படுகிறது. இதனால் அந்த தெருவில் தொடர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. பொதுமக்கள் அவ்வழியாக செல்வதை தவிர்த்து, மாற்று வழியில் செல்கின்றனர். கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே கழிவுநீர் தெருவில் விடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர், ஊரப்பாக்கம்.
முடிக்கப்படாத சாலை பணி
போரூர் மதனந்தபுரத்தில், சந்தோஷ்நகர் பகுதியில் சாலை சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடைபெற்றது. அப்போது சாலையைத் தோண்டி, அதில் சிமென்ட், மணல் கலவையை கொட்டினர். அதன் பிறகு பணிகளை நிறுத்திவிட்டதால், சாலையெங்கும் தூசி பறக்கிறது. அதனால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. புழுதி பறப்பதால் எதிரே வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்து நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலை அமைக்கும் பணியை துரிதமாக முடிக்க வேண்டும்.
பி.சண்முகவேல், மதனந்தபுரம்
வேகத்தடை அமைக்க வேண்டும்
பெரம்பூரில் 44-வது வார்டு பகுதியில் ஞானோதயா பெண்கள் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அதன் அருகில் உள்ள மேல்பட்டி பொன்னப்பமுதலி தெருவில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அதனால் பள்ளி மாணவிகள், தெருவை அச்சத்துடன் கடக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே அந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
என்.ராமலிங்கம், பெரம்பூர்.
கழிப்பறை வசதி இல்லை
திருவான்மியூர் பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி இல்லை. அதனால் பலர் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். எனவே அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும், கழிப்பறைகள் இல்லாததால் பெண்கள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே அப்பகுதியில் உடனடியாக கழிப்பறை அமைக்க வேண்டும்.
எல்.அய்யனார், கொடுங்கையூர்
கோயிலை சீரமைக்க வேண்டும்
நங்கநல்லூர் மார்க்கெட் பகுதியில் பனச்சியம்மன் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் மேல் தளம் உரிய பராமரிப்பின்றி, இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனால் அந்த கோயிலுக்கு பக்தர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. அதன் அருகில் உள்ள குளக்கரையின் சுற்றுச் சுவரும் சேதமடைந்துள்ளது. எனவே அக்கோயிலை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளக்கரையில் சுற்றுச் சுவரையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.உமா, நங்கநல்லூர்.
பிளாட்ஃபார்ம் டிக்கெட் கவுன்ட்டர் தேவை
எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்க முன்பக்க வாசலுக்கு செல்ல வேண்டியுள்ளது. ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்க வேண்டுமென்றால், முன்வாசலுக்குதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்புறத்திலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கவுன்ட்டர் திறக்க வேண்டும்.
வாசகர், புரசைவாக்கம்.
ஏரியில் கழிவுநீர் கலப்பு
திருமுல்லைவாயலில் இருந்து செங்குன்றம் செல்லும் வழியில் வெங்கடாச்சலம் நகர் உள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக செங்குன்றம் ஏரியில் விடப்படுகிறது. சென்னைக்கு முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் இந்த ஏரியில் விடப்படும் கழிவுநீரால், ஏரி மாசடைகிறது. தொடர்ந்து கழிவுநீர் கலந்து மாசு அதிகரித்தால் குடிநீர் மூலமாக நோய் பரவும் ஆபத்தும் உள்ளது. எனவே ஏரியில் கழிவுநீர் விடப்படுவதைத் தடுக்க வேண்டும்.
ஜி.மோகன், திருமுல்லைவாயல்.
சாலை பழுதால் பஸ் சேவை பாதிப்பு
டன்லப்பில் இருந்து அயப்பாக்கம் செல்லும் சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளது. அதனால் அயப்பாக்கத்துக்கு வந்துகொண்டிருந்த பஸ்கள், மாற்று வழியில் இயக்கப்பட்டு, பயணிகள் தூரத்தில் இறக்கிவிடப்படுகின்றனர். அங்கிருந்து சில கி.மீ. தூரம் நடந்து வீட்டுக்கு வர வேண்டியுள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
பி.சி.மணிகண்டன், அயப்பாக்கம்.
அன்புள்ள வாசகர்களே.. ‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... 044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT