Published : 22 Mar 2016 06:05 PM
Last Updated : 22 Mar 2016 06:05 PM
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் அரவிந்தாக் ஷனுக்கு முதல் பரிசு கொடுத்தது சர்ச்சைக்குரிய விஷயம் இல்லை. தொடர்ந்து இதே மாதிரி நல்ல குரலை தேர்ந்தெடுப்போம் என்று விஜய் டிவி நிகழ்ச்சி தலைமை பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 5 – ன் இறுதிப் போட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விஜய் டிவியில் வெளிவந்த சிறந்த குரல் தேடலுக்கான போட்டியின் இறுதிச் சுற்றில் ஆனந்த் அரவிந்தாக் ஷன் முதலிடம் பெற்றார். இவர் இந்தப்போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பே ‘ஆரோகணம்’, ‘நீர்ப்பறவை’, ‘பத்து எண்றதுக்குள்ள’ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியவர். அதை மறைத்துவிட்டு தமிழகமெங்கும் உள்ள இசை ஆர்வலர்கள் வாக்களித்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் முதலிடம் பெற்று வெற்றிபெற்றதாகவும் அறிவித்துள்ளதாக கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து விஜய் டிவி நிகழ்ச்சி தலைமை பொறுப்பாளர் பிரதீப்பிடம் கேட்டபோது, "சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருபவர்கள் பலரும், ‘நான் கோரஸ் பாடியிருக்கேன். ஆல்பம் வெளியிட்டிருக்கேன். ஒரு பாட்டு பாடியிருக்கேன். அது வெளிவருமா? வராதா? எனத் தெரியல’ என்றும் வருகிறார்கள்.
நிகழ்ச்சிக்கு வருபவர்கள் இதுவரைக்கும் ஒரு பாட்டுக்கூட பாடியிருக்கக்கூடாது என்று எங்களது விதிமுறைகளில் இல்லை. பங்கேற்பாளர்கள் ஏற்கெனவே பாடியிருந்தால் அது நடுவர்கள், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சக திறமைசாலிகள் வரைக்கும் தெரியும். எப்படியும் மூடி மறைக்க முடியாது. நிகழ்ச்சி முன்னோட்டத்தில்கூட செல்லக் குரலுக்கான தேடல் என்றுதான் அறிவிக்கிறோம்.
புதிய குரலுக்கான தேடல் என்று அறிவிப்பு வெளியிடவில்லை. இதை இங்கே மறைக்க ஒன்றுமே இல்லை. பங்கேற்பாளர்கள் ஒரு சீசனுக்குள் வந்த பிறகு அந்த சீசன் முடியும் வரைக்கும் வெளியே சென்று பாடக்கூடாது என்றுதான் விதிகள் வைத்திருக்கிறோம். அதைத் தவிர மற்ற எதுவும் இல்லை. நல்ல குரலை தேர்வு செய்கிறோம் என்பதுதான் எங்கள் எண்ணம்.
ஆனந்த் அரவிந்தாக் ஷன் கூறும்போதுகூட, ‘நான் இந்த மேடைக்கு சீனியர்தான். வெளியே எனக்கு இதுவரைக்கும் கிடைக்காத அடையாளத்தை இந்த மேடை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றே உள்ள வருகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ஆகவே, இது எங்களைப் பொறுத்தவரைக்கும் சர்ச்சைக்குரிய விஷயம் இல்லை. தொடர்ந்து இதே மாதிரி நல்ல குரலை அடையாளப்படுத்துவோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT