Published : 02 Feb 2016 09:58 AM
Last Updated : 02 Feb 2016 09:58 AM

நம்மைச் சுற்றி: வருகையும் பதவியும்!

கேரள அரசியலில் இந்த வாரம் புயல் மையம் கொள்வதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. பாஜகவின் தேசியத் தலைவராக மீண்டும் பொறுப் பேற்றிருக்கும் அமித் ஷா, இந்த வாரம் கேரள மாநிலம் கோட்டயத்துக்கு வரத் திட்டமிட்டிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசத் தயாராக இருப்பதாக கேரள காங்கிரஸ்(எம்) கட்சித் தலைவர் கே.எம். மாணி கூறியிருந்தார். ஆம், பார் உரிமம் வழங்க லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின்பேரில், நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகிய அதே மாணிதான். “கோட்டயம் அரசு விருந்தினர் மாளிகையில் அவரைச் சந்திக்க நேர்ந்தால் அவரை நான் வரவேற்பேன்” என்று அவர் கூறியிருந்தார்.

இதை இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி (எல்.டி.எஃப்.) கடுமையாக விமர்சித்திருந்தது. அமைச்சரவையில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் தலைமை யிலான ‘ஐக்கிய ஜனநாயக முன்னணி’ (யூ.டி.எஃப்.)க்கு நெருக்கடி கொடுக்கவே இப்படிப் பேசுகிறார் என்று எல்.டி.எஃப். கூறியது. இதற்கிடையே, அமைச்சரவையில் சேர்ந்துகொள்ள மாணிக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால், அமித் ஷாவை அவர் சந்திக்க மாட்டார் என்று பேசப்படுகிறது. அமைச்சர் பதவி, அமித் ஷா வருகை என்று இரு விஷயங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

மூன்று மாதக் கெடு!

குஜராத்தில் இடஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்தும் போராட்டம் பிரதமர் மோடிக்கு நெருக்கடி ஏற்படுத்தியதோ இல்லையோ, அம்மாநில முதல்வர் ஆனந்திபென் படேலுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு மூன்று மாதங்களுக்குள் தீர்வு காண வேண்டும்; அல்லது பதவி விலக வேண்டும் என்று அவருக்குக் கட்சி மேலிடம் உத்தரவிட்டிருப்பதாகப் பேசப்படுகிறது. குஜராத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்த தோல்வி கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத் திருக்கிறது. பாஜக கோட்டை என்று கருதப்படும் குஜராத் தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வசமிருந்த 31 மாவட்டப் பஞ்சாயத்துகளில் 23-ஐயும், 193 தாலுக்கா பஞ்சாயத்துகளில் 113-ஐயும் காங்கிரஸ் கைப்பற்றி விட்டது. கட்சியின் செல்வாக்கு கடுமையாகச் சரிய, படேல் சமூகத்தின் போராட்டங்களும் அவற்றைக் கட்டுப் படுத்த அரசு தவறியதால் குஜராத் மக்களிடம் எழுந்தி ருக்கும் அதிருப்தியும் முக்கியக் காரணம் என்று பாஜக தலைமை கருதுகிறது. எனவே, ஆனந்திபென்னுக்கு அக்னிப் பரீட்சை வைத்திருக்கிறது கட்சித் தலைமை!

போட்டோ போட்டி!

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களுடன் அவர்களுடைய புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. ஒரே பெயருடைய வேட்பாளர்களால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க இந்த ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதேபோல், மேற்கு வங்கம் மற்றும் இதர மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் இந்த முறையைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. அதே சமயம், இவ்விஷயத்தில் பிஹார் வேட்பாளர்கள் ஏற்படுத்திய குழப்பத்தைத் தவிர்க்கவும் முடிவுசெய்யப் பட்டிருக்கிறது. வெள்ளை உடையுடன் புகைப்படம் எடுக்கச் சொன்னால், கட்சிக் கொடியைப் போர்த்திக் கொண்டு, கட்சிச் சின்னம் அச்சிடப்பட்ட சட்டைகளை அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்து ஏகக் குழப்பங்களைச் செய்துவிட்டார்களாம். அரசியல் என்றாலே ரகளைதான் போலும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x