Published : 09 Feb 2016 10:44 AM
Last Updated : 09 Feb 2016 10:44 AM

உங்கள் குரல்: அயப்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதால், ஏரி மாசுபட்டுள்ளதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூரைச் சேர்ந்த எஸ்.சரவணன் என்ற வாசகர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக தெரிவித்ததாவது:

அயப்பாக்கம் ஏரி, அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. பலத்த மழை காரணமாக இந்த ஆண்டு அயப்பாக்கம் ஏரி நீர் நிறைந்து காட்சி யளிக்கிறது. ஆனால் அந்த நீர் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை. அப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நேரடியாக அயப்பாக்கம் ஏரியில் விடப்படுகிறது. இதனால் ஏரியில் உள்ள நீர் மாசுபட்டுள்ளது.

அந்த ஏரியின் அருகில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ஏற்படுத்தப்பட்ட குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், அங்குள்ள நிலத்தடி நீரை பயன் படுத்த முடியாமல் வெளியில் இருந்து கொண்டுவரப்படும் நீரை, விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தொழிற் சாலைகளில் இருந்து கழிவுநீர் இந்த ஏரியில் விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது, “ஏரியில் ஆய்வு செய்து, கழிவுநீர் கலப்பு இருந்தால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து சைதைக்கு சிற்றுந்து வசதி தேவை

மேற்கு சைதாப் பேட்டை பகுதி களில் இருந்து சைதாப்பேட்டை பேருந்து நிலை யத்துக்கு செல்லும் வகையில் சிறிய பேருந்து இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக வாசகர் ஆர்.எத்திராஜன் ‘தி இந்து’வின் உங்கள்குரலில் கூறியிருப்பதாவது:

மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு பணியின் காரணமாக ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அண்ணாசாலை வழியாக பிராட்வே செல்ல 18கே மாநகர பேருந்து வசதி இருக்கிறது.

ஆனால், சைதாப்பேட்டை ரயில் நிலையம் மற்றும் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் பேருந்து வசதி இல்லை. இதனால், சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

எனவே, மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து சைதாப் பேட்டை பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் சிறிய பேருந்து இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பொதுமக்களின் தேவை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இருப்பினும் அப்பகுதி மக்கள் மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கலாம்’’ என்றார்.

வெள்ளத்தில் சேதமான வாகனங்களுக்கு இழப்பீடு தாமதம்

வெள்ளத்தால் சேதம் அடைந்த வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குவதில்லை என வாசகர் ஒருவர் உங்கள் குரல் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த வாசகர் ஜி.எம்.ராமசந்திரன் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி சேவை மூலம் தெரிவித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

சென்னையில் அண்மையில் பெய்த மழையின்போது என்னுடைய கார் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந் தது. காரை பழுது பார்ப்பதற்காக வாகன காப்பீடு செய்துள்ள காப்பீட்டு நிறுவனத்தில் தெரிவித்தேன். ஆனால், காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் உடனடியாக வந்து என்னுடைய காரை பார்த்து ஆய்வு செய்யவில்லை. ஒரு மாதம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், ஏற்கெனவே மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த கார் மேலும் பழுதடையத் தொடங்கியுள்ளது. என்னைப் போல ஏராளமானோர் சேதம் அடைந்த வாகனங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இவ்வாறு ராமசந்திரன் கூறினார்.

இதுகுறித்து காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மழை வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த வாகனங்களை எங்கள் நிறுவன களப் பணியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து இழப்பீடு எவ்வளவு என்று கணக்கெடுக்க வேண்டியுள்ளது. இதனால் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், முடிந்த அளவுக்கு விரைவாக இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x