Published : 10 Feb 2016 09:33 AM
Last Updated : 10 Feb 2016 09:33 AM

நம்மைச் சுற்றி: தூரிகையே பேராயுதம்

அந்தக் கேலிச்சித்திர ஓவியரைத் தவிர்த்துவிட்டு, 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழை யாரும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்தியக் கேலிச்சித்திர ஓவியர்களின் பொற்காலம், அதன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. அந்தப் பொற்காலத் தலைமுறையின் கடைசிக் கொழுந்துகளில் ஒருவர்தான் சுதிர் தைலங். ‘சங்கர்ஸ் வீக்லி’யில் வந்த அரசியல் கேலிச்சித்திரங்களே, தேசிய அளவில் முதலில் பிரபலமடைந்த கேலிச்சித்திரங்கள். சங்கருக்கும் நேருவுக்கும் இடையிலான நட்பும், அதேநேரம் சங்கரின் கேலிச்சித்திரங்களில் நேருவுக்கு எந்தச் சலுகையும் காட்டப்படாதது பற்றியும் இன்றளவும் பேசப்பட்டுவருகிறது. சுதிர் தைலங்குக்கும் இந்த அம்சங்கள் பொருந்தும்.

‘என்னையெல்லாம் வரைய மாட்டீர்களா சுதிர், நான் அவ்வளவு பிரபலமில்லையா?” என்று கேட்கும் அளவுக்கு, சுதிர் தைலங்கின் முதல் ரசிகர்களாக இருந்தவர்கள் அரசியல்வாதிகள்தான். 1990-களில் மத்திய மனித வளத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, திடீரென ஒரு நாள் சுதிரைக் கூப்பிட்டார். “என்ன சுதிர், கொஞ்ச நாளா எந்தக் கார்ட்டூனையும் காணோமே, என்ன ஆச்சு?” என்று. அதுதான் சுதிர் தைலங். தான் விமர்சிப்பவர்களாலேயே ரசிக்கப்பட்ட கேலிச்சித்திர ஓவியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அரிய வரிசையில் ஒருவர் சுதிர்.

எல்லா அதிகார மையங்களையும் சந்தேகிப்பதே அவருடைய கேலிச்சித்திரங்களின் அடிப்படை. அதேநேரம், அதிகார மையங்களின் செல்வாக்கைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அவர் வரைந்து தள்ளிக்கொண்டிருந்தார். அவர் தனி முத்திரை பதிப்பதற்கு, அதுவே முக்கியக் காரணமாக அமைந்திருந்தது.

அவருடைய கேலிச்சித்திரங்கள் கொஞ்சம் குத்திக்காட்டும், நிறைய இடித்துரைக்கும். ஆனால், எந்தத் தருணத்திலும் எதிராளியின் கழுத்தை அறுத்துவிடும் ஆக்ரோஷத்தைக் கொண்டிருக்காது. தன் தூரிகையை ஆயுதமாகப் பயன்படுத்திய கேலிச்சித்திரக்காரர் சுதிர். ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் சேர்ந்த பிறகு மேலும் பிரபலமானார்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் பிறந்த சுதிர், கேலிச்சித்திரம் வரைவதற்கு யாரிடமும் முறைப்படி கற்கவில்லை. எல்லாம் சுயகற்றல்தான். அதற்கு அவருக்கு உத்வேகம் அளித்தது வேதாளர் (Phantom), டின்டின், பிளாண்டி போன்ற காமிக்ஸ் புத்தகங்கள். அவருடைய முதல் கேலிச்சித்திரம் 10 வயதிலேயே வெளியாகிவிட்டது.

இந்தியாவின் இதழியல் முன்னோடிகளுள் ஒன்றான ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’யில் தன் 22-வது வயதிலேயே சேர்ந்தார். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியில் தொடங்கி, அதன் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 10 பிரதமர்களையும் தன் கேலிச்சித்திரங்களால் ஆட்டிப்படைத்தார். கடந்த 35 ஆண்டுகளில் அவருடைய கேலிச்சித்திரக் கோடுகளுக்கு எந்த அரசியல்வாதியும், எந்த சமூகப் பிரச்சினையும் தப்பியதில்லை.

இறக்கும் நேரத்தில் ‘ஏசியன் ஏஜ்’, ‘டெக்கான் கிரானிக்கிள்’ இதழ்களில் இணை ஆசிரியர் - கேலிச்சித்திரக்காரர் பொறுப்பிலிருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றிய கேலிச்சித்திரங்களின் தொகுப்பான ‘நோ, பிரைம் மினிஸ்டர்’ உட்பட, அவருடைய ஏழு கேலிச்சித்திரப் புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

மரணத்தையும் கூட அவர் ஒரு கேலிச்சித்திரமாக வரைந்திருக்கக்கூடும். அது நம் பார்வைக்கு வரும் முன்பே மரணம் அவரை அவசரப்பட்டு அழைத்துக்கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x