Published : 26 Feb 2016 10:11 AM
Last Updated : 26 Feb 2016 10:11 AM

சொன்னது சொன்னபடி: சிலிண்டர் விநியோகிக்க ரூ.40 வசூல்

ஊரப்பாக்கம் பகுதியில் எந்த எண்ணெய் நிறுவனத்தின் கீழ் காஸ் இணைப்பு வைத்திருந்தாலும், வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகிக்க வருவோர், ரூ.40 செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். கொடுக்க மறுத்தால், சிலிண்டரை விநியோகிக்காமல் சென்றுவிடுகின்றனர். இதனால் வேறு வழியின்றி, ரூ.40 செலுத்தி சிலிண்டர்களை பெற்று வருகிறோம். இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசகி, ஊரப்பாக்கம்.



விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்

நுங்கம்பாக்கம் வீட் கிராப்ட் சாலை ஒருவழிப் பாதையாக உள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பொருட்படுத்தாமல், பலர் எதிர் திசையில் வந்து, முறையாக செல்வோர் மீது வாகனங்களை மோதி விபத்து ஏற்படுத்துகின்றனர். எவ்வித குற்ற உணர்வும் இன்றி, முறையாக வந்தவர்களிடம் தகராறிலும் ஈடுபடுகின்றனர். எனவே அந்த சாலையில் போக்குவரத்து போலீஸார் பணியமர்த்தப்பட்டு சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.கே.இ.உமர் அப்துல் காதர், நுங்கம்பாக்கம்.



அடையாற்றில் கலக்கும் கழிவுகள்

அனகாபுத்தூர் வழியாக செல்லும் அடையாற்றில் முன்பு சுத்தமான நீர் ஓடிக்கொண்டிருந்தது. தற்போது, பம்மல், நாகல்கேணி போன்ற பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவுகள் அடையாற்றில் விடப்படுவதால், ஆற்றில் ஓடும் நீர் கருப்பு நிறத்தில் உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அடையாற்றில் தோல் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.

ஆர்.ஏமகுமார், அனங்காபுத்தூர்.



நவீன சாலைகளை அமைக்க வேண்டும்

நெடுஞ்சாலைகளை அமைக்கும்போது, நவீன இயந்திரங்களை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கிராமப்புற சாலைகள் அவ்வாறு அமைக்கப்படுவதில்லை. இதனால் கிராமச் சாலைகள் மேடு, பள்ளங்களாக உள்ளன. மழை காலங்களில் அதில் நீர் தேங்கி, சாலைகள் விரைவாக சேதமடைகின்றன. எனவே கிராமப்புற சாலைகளையும் நவீன இயந்திரங்களைக் கொண்டு தரமான முறையில் அமைக்க வேண்டும்.

டி.ரவிச்சந்திரன், செய்யாறு.



வழிகாட்டு நெறிமுறை தேவை

சென்னையில் இருந்து புதுச்சேரி, விழுப்புரம் நோக்கி செல்லும் அரசு பஸ்களை கூவத்தூரில் தனியார் உணவகத்தில் நிறுத்துகின்றனர். அங்கு கிடைக்கும் உணவு, உண்ண உகந்ததாக இல்லை. இத்தகைய உணவகங்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களே நிர்வகிக்கின்றனர். உணவின் விலையும், கழிப்பறை கட்டணமும் அதிகமாக உள்ளது. எனவே, உணவுக்காக அரசு பஸ்கள் நிறுத்தப்படுவது குறித்து சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

ஆண்ட்ரூ, தரமணி.



சாலையில் ஓடும் கழிவுநீர்

மேடவாக்கம் ஜல்லடையான்பேட்டை, காயிதேமில்லத் தெரு, மசூதி தெரு ஆகியவற்றில் கழிவுநீர் செல்ல வசதி இல்லை. வீடுகளில் இருந்து கழிவுநீர் சாலையில் விடப்படுகிறது. அதனால் அங்கு துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. எனவே இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.பிரமீளா, மேடவாக்கம்.



பழுதான போக்குவரத்து சிக்னல்

என்எஸ்கே நகர் பஸ் நிறுத்தம் அருகில், என்எஸ்கே சாலையில் போக்குவரத்து சிக்னல் பழுதாகி ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இதுவரை சரி செய்யப்படவில்லை. அங்கு நிறுத்தப்பட்டுள்ள போலீஸார், விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை மட்டுமே செய்கின்றனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்லை. அதனால் அங்கு விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க, அங்கு பழுதான சிக்னலை சரி செய்ய வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.



ரயில் நடுவில் மாற்றுத்திறனாளி பெட்டி

வெளியூர்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் ரயிலின் முன் பகுதியிலோ, கடைசியிலோ இடம்பெறுகிறது. இதனால் மாற்றுத் திறனாளிகள் அப்பெட்டிகளில் ஏறவும், குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இறங்கிய பிறகு, ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்லவும் அதிக தூரத்தை கடக்க வேண்டியுள்ளது. அதனால் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியை, ரயிலின் நடுவில் இடம்பெற செய்ய வேண்டும்.

ஆர்.பாலசுப்பிரமணியன், வில்லிவாக்கம்.



அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x