Published : 02 Feb 2016 11:20 AM
Last Updated : 02 Feb 2016 11:20 AM

உங்கள் குரல்:அரசு மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாடு

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் கட்டிடத்தில் தினமும் 1 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருவதாக வாசகர் புகார் தெரிவித்துள்ளார்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை கட்டிடத்தின் 3-வது மாடியில் தினமும் 1 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருவதாக ‘தி இந்து’ உங்கள் குரல் மூலமாக சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த வாசகர் சரவணன் புகார் தெரிவித் திருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: “ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் நல்ல முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் புற்றுநோய் கட்டிடத்தின் 3-வது மாடியில் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் அவருடன் இருப்பவர்கள் அவதிப்படுகின்றனர். எல்லா நேரங்களிலும் தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, “புற்றுநோய் கட்டிடத்தில் நோயாளிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் தண்ணீர் விடுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

வெள்ளத்தால் பாதித்த பிஎஸ்என்எல் இணைப்புகளுக்கு கட்டணம்!

சென்னை ராமாபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிஎஸ்என்எல் இணைப்புகளுக்கு கட்டணம் ரத்து செய்யாதது ஏன்? என்று உங்கள் குரலில் வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ராமாபுரம் சிதம்பரம் நகரைச் சேர்ந்த எஸ்.சுப்ரமணியன் ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியதாவது:

கடந்த டிசம்பர் 1, 2 தேதிகளில் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னை ராமாபுரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பிஎஸ்என்எல் இணைப்புகள் முழுமையாக சேதமடைந்தன. சேதமடைந்த இணைப்புகள் அனைத்தும் கடந்த மாதம் 20-ம் தேதிதான் சரி செய்யப்பட்டன. எனவே, டிசம்பர் ஜனவரி மாதத்துக்கான கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பிஎஸ்என்எல் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கட்டணம் ஏதும் ரத்து செய்யப்படவில்லை. மாறாக அந்த மாதத்துக்கான கட்டணத்தை அனுப்பச் சொல்லி பில் அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டால் பிஎஸ்என்எல் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றார்.

இதுபற்றி பிஎஸ்என்எல் அதிகாரிகள் சிலரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “தொலைபேசி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நிறைய வாடிக்கையாளர்கள் கூறினர். இது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறினோம். ஆனால், பிஎஸ்என்எல் தலைமையகத்திலிருந்து இது தொடர்பான உத்தரவுகள் வராததால் அப்படி செய்ய முடியவில்லை. எனினும், வாடிக்கையாளர்களின் விருப்பத்தை தலைமையகத்திடம் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்” என்றனர்.

ஆதிதிராவிடர்நல நடுநிலைப் பள்ளிக்கு 30 ஆண்டுகளாக சுற்றுச்சுவர் இல்லை

திருக்கழுக்குன்றம் அடுத்த பரமசிவம் நகரில், ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியின் நிலத்தை அரசியல் பிரமுகர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதால், 30 ஆண்டுகளாக பள்ளிக்கு சுற்று சுவர் கட்ட முடியாத நிலை உள்ளதாக ‘தி இந்து’வின் உங்கள் குரல் பகுதியில் அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட பரமசிவம் நகரில், 5 ஏக்கர் பரப்பளவில், ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இதில், 143 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்கள் விளையாடுவதற்காக, பள்ளி கட்டிடத்தின் முன், 4 ஏக்கர் நிலம் காலியாக விடப்பட்டுள்ளது.

இதில், 15 அடி நிலத்தை அப்பகுதியில் குடியிருக்கும், அரசியல் பிரமுகர்கள் சிலர் ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் அமைத்துள்ளதாக, அப்பகுதிவாசிகள் ‘தி இந்து’வின் உங்கள் குரல் பகுதியில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

பள்ளியின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, அதிகாரிகளிடம் முறையிட்டோம். அதிகாரிகள் நேரில் வந்து நிலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை உறுதி செய்தனர். எனினும், அரசியல்வாதிகளுக்கு பயந்து அமைதியாக உள்ளனர்.

மேலும், ஆக்கிரமிப்பினால் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக, 4 முறை நிதி ஒதுக்கப்பட்டு, பணி மேற்கொள்ள முடியாமல், நிதி திரும்பி அனுப்பப்பட்டுவிட்டது என்றனர்.

மாவட்ட, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மனோகரனிடம் இதுகுறித்து கேட்டபோது, “திருக்கழுக்குன்றம் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் மேற்பார்வையில், பள்ளி நிலம் சர்வே செய்யப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... 044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x