Published : 21 Dec 2015 08:32 AM
Last Updated : 21 Dec 2015 08:32 AM
வைகுண்ட ஏகாதசி விழாவை யொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வைகுண்ட ஏகாதசியை யொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வரக்கூடும் என்பதால், முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டன. பகல் பத்து நிகழ்ச்சிகள் முடிந்து இராப்பத்து நிகழ்ச்சியின் தொடக்க நாளான வைகுண்ட ஏகாதசி விழா இன்று அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. நேற்று இரவு முதலே கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்க வாசலை தரிசித்தனர்.
இதைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் இரவு 11.30 வரை வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பக்தர்கள் நெரிசலின்றி வரிசையில் செல்வதற்கு ஏற்ப கோயிலைச் சுற்றி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு குடிதண்ணீர், மருத்துவ வசதி உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புறநகர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. இராப்பத்து நிகழ்ச்சியின் 2-ம் நாள் நிகழ்வாக நாளை வேணுகோபாலன் திருக்கோலம் நடக்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT