Published : 11 Dec 2015 11:32 AM
Last Updated : 11 Dec 2015 11:32 AM

ஆரணி ஆற்று வெள்ளத்தால் சாலை துண்டிப்பு: 10 நாட்களாக படகில் பயணிக்கும் மக்கள் - துரிதமாக சாலை அமைத்து தர கோரிக்கை

பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில் சாலை துண்டிக்கப்பட்டதால், ஏ.ரெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்து சுமார் 5 ஆயிரம் பேர், ஒரு வாரத்துக்கும் மேலாக படகு போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை அருகே ஆந்திராவின் பிச்சாட்டூர் ஏரியிலிருந்து வெளி யேற்றப்பட்ட உபரி நீரால், ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கடந்த 2-ம் தேதி பொன்னேரி அருகே உள்ள ஏ.ரெட்டிபாளையம் பகுதியில் ஆற்றின் கரை உடைந்தது.

200 மீட்டர் தூரத்துக்கு ஏற்பட்ட உடைப்பால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீர், பொன்னேரி-தத்தமஞ்சி சாலையினை 150 மீட்டர் தூரத்துக்கு துண்டித்ததோடு, பல

ஏக்கர் விவசாய நிலங்களை சேதப்படுத்திக் கொண்டே ஏ.ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குள் புகுந்தது.

தற்போது, கிராம பகுதிக்குள் புகுந்த வெள்ள நீர் வடிந்து விட்டது நிலையில், துண்டிக்கப்பட்ட சாலை, விவசாய நிலங்கள் என சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு, 15 அடி உயரத்துக்கு வெள்ள நீர் ஓடுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்நிலை தொடர்கிறது.

இதனால், ஏ.ரெட்டிபாளையம், சோமனஞ்சேரி, அத்திமாஞ்சேரி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தற்காலிகமாக அரசு ஏற்படுத்தி தந்துள்ள படகு போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

“ஏ.ரெட்டிபாளையம் பகுதியில் ஆரணி ஆற்றில் ஏற்கெனவே செயல்பட்ட மணல் குவாரியும், கரை பகுதி விவசாய நிலங்களில் செங்கல் சூளைக்காக ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டதும், அரசு ஆற்றின் கரையை பலப்படுத்தாதும்தான் வெள்ளப்பெருக்குக்கு காரணம்’’ என மக்கள் தரப்பில் கூறப்படுகிறது அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான படகு பயணம், குடிநீர் தட்டுப்பாடு என பல்வேறு இன்னல்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், துண்டிக்கப்பட்ட சாலையை துரிதமாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x