Last Updated : 15 Dec, 2015 04:15 PM

 

Published : 15 Dec 2015 04:15 PM
Last Updated : 15 Dec 2015 04:15 PM

மழை முகங்கள்: வீடு பாதித்தாலும் நிவாரணக் களத்தை விட்டு நகராத பொறியாளர் குமார்!

'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

பி.டி.லீ. செங்கல்வராயன் நாயக்கர் என்ஜினீயரிங் கல்லூரியில் 2013ல் முடித்தவர் குமார். தற்போது ரிலையன்ஸ் 4ஜி புராஜெக்டில் டெலிகாம் என்ஜினீயராக நந்தனத்தில் பணிபுரிந்து வருகிறார். தான் பணியாற்றும் நிறுவனத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு நிவாரண முகாமுக்கு அவர் ஒரு தவம்போல நாள்தவறாமல் வந்துகொண்டிருக்கிறார்.

''அப்பா, அம்மா, நான் 2 தங்கைகள், இவ்வளவுதான் எங்க குடும்பம். குரோம்பேட்டை எங்க வீட்டுக்கு அருகே 4 தெரு தள்ளி பல்லாவரம் பெரிய ஏரி உள்ளது. 2வது மழையில வீட்டில் முழங்கால் அளவு சாலையில் இடுப்பளவு தண்ணீர். விடியக்காலை 5 மணிக்கு ஏரி உடைந்தது.

இதனால வீட்டுக்குள்ள தண்ணீர் அதிகம் வர ஆரம்பிச்சது. சமைக்க முடியலை. வீட்டில் உள்ள பொருள்கள் எல்லாம் கட்டில் மேல வைத்தோம். பீரோ மீதிருந்த பொருள் மேல் செல்ஃபில் வைத்தோம். நாங்க ரெண்டுபேரும் வீட்ல இருக்கோம். நீங்க போங்கன்னு அப்பா அம்மா சொல்லிட்டாங்க. அப்புறம் ஒரு தெரு தள்ளியுள்ள உறவினர் (மாமா, அத்தை) வீட்டில் வாசல் வரைக்கும் தண்ணீர்.

அங்கேயே இரவு தங்கிட்டோம். அவர்கள் வீட்டில் ஏற்கெனவே 4 பேர். நாங்க 3 பேர். ஆக அந்த சிறிய வீட்டில் 7 பேர் அட்ஜஸ் பண்ணிகிட்டோம். நான் இரண்டுமணிவரை வீட்டுக்கு போன் பேசி நிலைமையை தெரிஞ்சிகிட்டிருந்தேன். காலைல அங்கே போனோம். வீட்டுக்குள்ள முழங்கால் தண்ணியில அப்பா அம்மா ரெண்டுபேரும் ராத்திரி முழுக்க தூங்காம கட்டிலிலேயே உட்கார்ந்திருக்காங்க.

எங்கள் தெருவைத் தவிர மற்ற 3 தெருவிலும் இன்னும் தண்ணீர் வடியவில்லை. வீட்ட சுத்திலும் சூழ்ந்த பள்ளத்தில் இருந்த நீரை அருகிலுள்ள கால்வாயில் ஊற்றி அப்புறப்படுத்தினோம். மின்சாரம் வந்தபிறகுதான் சென்னையில் நம்மை சூழ்ந்துள்ள பிரச்சனை புரியத் தொடங்கியது. வீட்டில் இருந்த பைக் என்ஜின் ஸ்பாயில் ஆகிவிட்டது.

பக்கத்துல இருக்கற எஸ்.டி.என்.பி. வைஷ்ணவ் காலெஜ்ல மீட்பு முகாம்ல எங்கள் 4 தெரு மக்கள் 1000 பேரும் அங்கே போய் தங்கினோம். முதல் மதியம் சாப்பிட்டதோட சரி. அதோட முகாம்ல மறுநாள் காலைல 11 மணிக்குத்தான் சாப்பாடு. நான் கூட வீட்டுக்கு போன்செய்து விசாரிச்சிகிட்டே இருந்தேன், இரவு இரண்டரை மணி வரை.

நமக்காவது பரவாயில்லை. மத்தவங்களுக்கு இன்னும்மோசம்னு கேள்விப்படும்போது ரொம்ப கஷ்டமா இருந்தது.நம்மால ஏதாவது உதவ முடியுமான்னு யோசித்தபிறகு, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் போன திங்கக்கிழமை இந்து நிவாரண முகாம்ல இணைஞ்சிகிட்டேன்.

நான் உள்ளே வரும்போது இங்கே மீட்டிங் நடந்தது. எப்படி ரெஸ்கியூ செய்யணும். எப்படிஎப்படியெல்லாம் டீம் பிரிக்கப் போறோம்னு சொன்னாங்க. மீட்டிங் பாக்கும்போதே தெரிஞ்சது இது கிளியர் சிஸ்டமேடிக்குனு. நான் இருந்த கடந்த 9 நாளும் இந்த சிஸ்டமேடிக்குல எந்த மாற்றமும் இல்லை.

உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்லணும். நாலாவது நாள்னு நெனைக்கறேன். பூபதின்னு ஒருத்தர் 5,000 ரூபாய் பணமா கொண்டுவந்தார். பணமா வாங்க முடியாது. பொருளா வாங்கிட்டு வந்துருங்கன்னு என்னை அவர் கூட அனுப்பினாங்க. நான் அவரோட பாரீஸ் போய் 15 பெட்ஷீட், 30 பாய் ஆட்டோவுல எடுத்துகிட்டு வந்தோம். இங்க வந்து டோனர் பேர்ல பதிவு செஞ்சிகிட்டு அப்புறம் அதை நிவாரண முகாமுக்கு கொண்டுபோனோம். அவரைப் பாத்தா பெரிய பணக்காரர் மாதிரி தெரியல.

பழைய பஜாஜ் பைக் வச்சிருக்கற அவரு சாதாரண மிடில் கிளாஸ்தான். அவரே முன்வந்து தன்னோட பணத்தைக் கொடுக்கறாருன்னு தெரிஞ்சப்போ தினமும் வந்து இங்கே வேலை செய்யணும்னு முடிவு செஞ்சேன். நாள் தவறாம வந்துகிட்டிருக்கேன். என்ஜின் கெட்டுப்போன என்னோட பைக் இப்போரெடியாயிடுச்சி. அந்த பைக்கிலதான் தினமும் வர்றேன்.

நிவாரணப் பொருட்கள் கொடுக்கறது, லோடிங் அன்லோடிங்னு தினமும் வந்து எத செய்யணுமோ அதுல என்னை ஈடுபடுத்திக்கறேன். நம்ம நிவாரண முகாமுக்கு இந்தமாதிரி நல்ல மனிதர்கள் நிறைய பேரோட எஃபோர்ட்டைப் பாக்கறேன். அதனால நிச்சயம் விரைவில் சென்னை திரும்பும் சார்'' என்றவரின் வார்த்தைகளில் மீண்டும் சரியான அவரது பைக் என்ஜினைவிட பலமடங்கு நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x