Published : 22 Dec 2015 11:28 AM
Last Updated : 22 Dec 2015 11:28 AM

உங்கள் குரல்: பாதிக்கப்பட்ட தனி நபர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனி நபர்களுக்கும் (பேச்சுலர்) நிவாரணம் வழங்க வேண்டும் என்று வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த யாசர் அராபத் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் கூறியதாவது: நாங்கள் 3 பேர், கோட்டூர்புரம் பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளோம். மழை வெள்ளம் வந்தபோது, எங்கள் பகுதியில் முதல்தளம் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதனால், அறையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

வெள்ளத்தில் இருந்து தப்பி, தற்போது வேறு இடத்தில் தங்கியுள்ளோம். நாங்கள் வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில், வெள்ள நிவாரண கணக்கெடுப்பு நடந்துள்ளது. எங்களைப் போன்ற ‘பேச்சுலர்’களுக்கு ரேஷன் கார்டு இல்லாததால், கணக்கெடுப்பில் எங்களை சேர்க்கவில்லை. இதனால், எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு அரசுக்கு தெரியாமல் போய்விடும். எனவே, எங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘பேச்சுலர்களையும் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. சில இடங்களில், ஒரே வீட்டில் வசிப்பவர்கள்கூட தனித்தனி யாக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என ஆவணங்களைக் காட்டி பதிவு செய்வதை தடுக்க, பேச்சுலர்களை கணக்கெடுப்பதை தவிர்த்திருக்கலாம். ரேஷன் கார்டு இல்லாதவர்கள், அரசு அளித்துள்ள இதர ஆவணங்களான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை அளிக்கலாம். கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் தங்கள் பகுதி வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளரை அணுகலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x