Published : 13 Nov 2015 09:54 AM
Last Updated : 13 Nov 2015 09:54 AM
அய்யப்பன்தாங்கலில் இருந்து குமணன்சாவடி செல்லும் சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. அச்சாலையுடன், துர்க்கை அம்மன் கோயில் தெரு இணையுமிடத்துக்கு எதிரில் 2 பெரிய பள்ளிக்கூடங்கள் உள்ளன. அங்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோர் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டியுள்ளது. எனவே அங்கு போக்குவரத்து சிக்னலை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து போலீஸாரையாவது நிறுத்த வேண்டும்.
வாசகி, அய்யப்பன்தாங்கல்.
மின் விளக்குகள் எரிவதில்லை
கோட்டூர்புரம் ரயில் நிலையம் மற்றும் அந்த ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் மின் விளக்குகள் இருந்தும் எரிவதில்லை. அதனால் இரவு நேரங்களில் ரயில் நிலையத்துக்குச் செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மேலும் கோட்டூர்புரம் பெருமாள் கோயில் தெருவிலும் மின் விளக்குகள் எரியாததால், சில தினங்களுக்கு முன்பு அங்கு வழிப்பறியும் நடந்துள்ளது. அதனால் அப்பகுதிகளில் மின் விளக்குகளை எரியச் செய்ய வேண்டும்.
வாசகி, கோட்டூர்புரம்.
பழுதடைந்த சாலையால் விபத்து
திருநின்றவூரில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் திருப்பாச்சூர் வரையிலான 16 கி.மீ. நீளச் சாலை பழுதடைந்துள்ளது. இருளில் எந்த இடத்தில் பள்ளம் உள்ளது என்பதே தெரிவதில்லை. சாலையெங்கும் பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அந்த சாலையை அரசு உடனடியாக சீரமைக்க வேண்டும்.
என்.ரவி, திருநின்றவூர்.
தடுப்பு சுவரால் ஆபத்து
மூலக்கடை- மாதவரம் சாலையில் அகலப்படுத்தப்பட்ட சாலை முடியுமிடத்தில், சாலை நடுவில் தடுப்புச் சுவர் உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் இந்த தடுப்புச் சுவர் தென்படுவதில்லை. அதனால் தடுப்புச் சுவர் மீது மோதி பலர் படுகாயமடைகின்றனர். எனவே அந்த தடுப்பு சுவர்களின் மீது பிரதிபலிப்பான்களை ஒட்ட போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.சேவியர் ஜெயபாலன், மாதவரம்.
எழும்பூருக்கு பஸ் வசதி இல்லை
முகப்பேர் மேற்கு பகுதியிலிருந்து அண்ணா சாலை வழியாக 8 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அங்கிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக ஒரு பஸ் கூட இயக்கப்படவில்லை. அதனால் முகப்பேர் மேற்கு பகுதியிலிருந்து எழும்பூர் செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே முகப்பேர் மேற்கிலிருந்து அண்ணா சாலை வழியாக இயக்கப்படும் பஸ்களில் சிலவற்றை எழும்பூர் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.பலராமன், முகப்பேர் மேற்கு.
வேகத்தடை அமைக்க வேண்டும்
கிண்டியிலுள்ள ஐஐடி வளாகத்தின் நுழைவு வாயிலில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர். அதனால் அப்பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் போலீஸாரை நிறுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
வாசகர், கிண்டி.
சாலை சீரமைக்கப்படுமா?
வளசரவாக்கத்திலிருந்து போரூர் செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் அதிக பள்ளங்களுடன் உள்ளது. காலை, மாலை வேளைகளில் பள்ளிக்கு குழந்தைகளை வாகனத்தில் அழைத்துச் செல்லும் பெற்றோர் அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர். அவ்வப்போது பள்ளங்களில் செம்மண் கொட்டப்படுகிறது. அவை அடுத்த மழையிலேயே காணாமல் போய்விடுகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
டி.மகேந்திரன், போரூர்.
மின் விளக்கு வசதி தேவை
பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தை பழுது பார்க்கும் பணி நடைபெறுகிறது. இதனால் அடுத்த நடை மேடைக்கு செல்ல நடை மேடை முடியும் இடத்துக்கு சென்று தண்டவாளத்தை கடக்க வேண்டியுள்ளது. அப்பகுதியில் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே அப்பகுதியில் போதிய மின் விளக்கு வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.
எஸ்.சத்தியமூர்த்தி, பெரம்பூர்.
அன்புள்ள வாசகர்களே..
‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... 044-42890002
என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT