Published : 23 Nov 2015 09:31 AM
Last Updated : 23 Nov 2015 09:31 AM

மானுட சேவையே மாதவ சேவை: மனிதகுலத்துக்கு தொண்டாற்றும் சத்ய சாய் சேவா நிறுவனங்கள்- இன்று சத்ய சாய்பாபா பிறந்தநாள்

‘‘நான் மிகவும் விரும்பும் வேலை ஒன்று உள்ளது. ஏழை எளியவர்களின் துன்பத்தை நீக்கி அவர்களுக்கு எது இல்லையோ அதைத் தருவது’’ என்று 1947-ல் அறிவித்தார் சத்ய சாய்பாபா. அப்போது, அவர் பிறந்த ஊரான புட்டபர்த்தியில் குடிநீர், பள்ளிக்கூடம், தார்ச்சாலை, மருத்துவம் என எந்த அடிப்படையும் கிடையாது. ஆனால், இன்று புட்டபர்த்தியில் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிலையங்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை, ஒரு பொது மருத்துவமனை, ஒரு விமான நிலையம் உள்ளன.

ஆந்திரப் பிரதேசத்தின் 1,500 கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி, மாநில அரசிடம் ஒப்படைத்தார் பாபா. சென்னைக்குக் கண்டலேறுவில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து புழல் ஏரியில் சேர்க்க அதிநவீன கால்வாய்க் கட்டுமானத்தை ரூ.200 கோடியில் செய்துகொடுத்தார். பெங் களூருவிலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை ஏற்படுத்தினார்.

அவரது 90-வது ஜெயந்தி விழாவை உலகமே இன்று கொண் டாடுகிறது. இத்தருணத்தில் 150 நாடுகளில் இருக்கும் அவரது அன்பர்களும் அவர்மீது கொண்ட அன்பை மனிதகுலத்துக்கு சேவை செய்வதன்மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உயர்ந்த தரத்திலான கல்வி, மருத்துவ சிகிச்சையை அனைத்து தரப்பினருக்கும் கட்டணமின்றித் தரவேண்டும் என்பது பாபாவின் விருப்பம். அதை செயலாக்கிக் காட்டினார். ‘மானுட சேவையே மாதவ சேவை’ என்பதை பாபா ஒரு கோஷமாக அல்லாமல் அன்றாட வழிமுறையாகவே மாற்றிக்காட்டினார்.

கல்விக் கோயில்கள்

அவர் தொடங்கி வைத்த கல்விக்கூடங்களில் தொடக்க நிலைக் கல்வி தொடங்கி, முனைவர் பட்ட ஆய்வு வரை இலவச மாக வழங்கப்படுகிறது. பண்பில் சிறந்தவர்களாக இந்த மாணவர் கள் உயர்கின்றனர். புட்ட பர்த்தி, பெங்களூருவில் ஆண்களுக் கும், அனந்தப்பூரில் பெண்களுக் கும் சிறந்த கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன.

பாபா 2010-ல் தமது 85-வது பிறந்த நாளின்போது ‘வித்யா வாஹினி’ என்ற சிறந்த கல்வித் திட்டத்தை தொடங்கிவைத்தார். இசை, நாடகம் போன்ற நுண்கலை கள், யோகம், தியானம் போன்ற மனவளக் கலைகள், உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற உடல்வளக் கலைகளும் இங்கு கற்றுத்தரப்படு கின்றன. சமூகநலப் பணிகளிலும் மாணவர் கள் ஈடுபடுகின்றனர்.

தேசிய அளவிலான 86 பல் கலைக்கழகங்களில், தேசிய அங்கீ கார கவுன்சிலிடம் ‘A' கிரேடு அங்கீ காரம் பெற்ற 10 பல்கலைக்கழ கங்களில் சத்ய சாய் உயர்கல்வி நிறுவனமும் ஒன்று. தமிழகத்தில் உள்ள 10 பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் 103 சத்ய சாய் பள்ளிகள் இயங்குகின்றன.

பள்ளிக்கல்வியைத் தொடராத இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கப்படுகிறது. செக்யூரிட்டி பயிற்சி, பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கும் பயிற்சி நிறுவனங்களும் செயல்படுகின்றன.

நோய் அகற்றும் கோயில்கள்

புட்டபர்த்தி சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையைப் பார் வையிட்ட டாடா குழும நிர்வாகி ரத்தன் டாடா, ‘‘இதற்கு இணை யான வசதிகள் கொண்ட மருத்துவ மனை, நியூயார்க்கில் உள்ள மேயோ கிளினிக். ஆனால், புட்டபர்த்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மட்டும்தான் பணம் வசூலிக்கும் கவுன்ட்டர் கிடையாது’’ என்று வியந்தார்.

இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர் கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகின்றனர். சிகிச்சைக் காக வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.

சென்னையில் நடமாடும் மருத் துவமனை சேவை 2014 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இது சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 12 கிராமங்களுக்கு சென்று மருத் துவ சேவையை வழங்குகிறது. மருத்துவ வசதியே இல்லாத பகுதி களுக்குச் சென்று கண், பல், மகப் பேறு, இதயவியல் உட்பட பல துறைகளிலும் நோய்களைக் கண்டறிந்து மருந்துகளும் வழங்கப் படுகின்றன. கடந்த ஜூலை வரை இதன்மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளனர்.

பேரிடர் நிவாரணம்

ஒடிசாவில் வெள்ளம், தமிழகத் தில் சுனாமி, புயல் , உத்தராகண்டில் பெருவெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது, சத்யசாய் நிறுவனம் விரைந்து சென்று நிவார ணப் பணிகளை மேற்கொண்டது. எல்லா மாநிலங்களிலும் சத்யசாய் அமைப்பில் நன்கு பயிற்சி பெற்ற இயற்கைப் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் உள்ளன. காவல் துறை, பேரிடர் மீட்புக்குழுவினருக்குகூட பயிற்சி அளிக்கும் அளவுக்கு இவர்கள் திறன்பெற்றவர்கள். கல் லூரிகள், தொழில் நிறுவனங் களுக்கு சென்று பேரிடர் விழிப் புணர்வு, செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்கின்றனர். ஒடிசா வெள்ளத் தில் வீடு இழந்தவர்களுக்கு 1,000 வீடுகளை சாய் நிறுவனம் கட்டித் தந்தது குறிப்பிடத்தக்கது.

பாபா எழுதிய உயில்

மனிதகுல சேவைக்காக பல அமைப்புகளை சத்ய சாய்பாபா நிர்மாணித்துள்ளார். ‘‘இந்த சொத்துக்கள் எல்லாமே எனது அன்பர்கள் கொடுத்தவை. இவை பொதுநலப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இளம் வயதிலேயே குடும்பத்தை துறந்தவன் நான். அதனால் இவற்றின் மீது உறவினர் எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது’’ என்று சாய்பாபா திட்டவட்டமாக உயில் எழுதி வைத்துள்ளது பலர் அறியாத செய்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x