Published : 25 Nov 2015 11:03 AM
Last Updated : 25 Nov 2015 11:03 AM
உலகப் புகழ் பெற்ற பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டை ஒட்டி அவரது நினைவைப் போற்றும் விதமாக ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழ், மியூசிக் அகாடமியில், கடந்த வாரம் நடைபெற்ற நவம்பர் ஃபெஸ்ட் விழாவில் நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது.
‘காற்றினிலே’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், பிரபல பாடகிகளான எஸ். செளமியா, நித்ய, பிரியா சகோதரிகள் ஆகியோர் இணைந்து பாடியது புதுமையாக இருந்தது. எம்.எஸ். பாடிய பிரபலமான பாடல்களை இவர்கள் தங்களது பாணியில் பாடி சிறப்புச் செய்தார்கள். இந்த நிகழ்ச்சியை எழுதி வடிவமைத்தவர், கவுரி நாராயண்.
முதல் பாடலே ‘பாவயாமி ரகுராமம்’. இதில் முழுமையாக எம்.எஸ். பாணியை கொண்டு வந்திருந்தார்கள் பாடகிகள். தியாகராஜரின் பஞ்ச ரத்ன கிருதிகளை, வித்வான்கள் இணைந்து பாடுவது போல, இது அமைந்திருந்தாலும், ரசிகர்களின் காதுகளுக்கு இனிமையைச் சேர்த்தது.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலை, மிமிக்ரி செய்ய முயலாமல், பாடகிகள் தங்கள் குரலிலேயே பாடியது சிறப்பாக இருந்தது. மீனாட்சியைக் கொண்டாடும் ‘மீனாட்சி மேமுதம்’, மகாலட்சுமியைப் போற்றும் ‘நீ இரங்கா எனில்’, காமாட்சியை துதிக்கும் ‘ஹிமகிரி தனயே’, ஆகிய மூன்று தேவிகளின் கீர்த்தனைகள் ரசிகர்களை மயக்கியது.
ஒவ்வொரு பாடகருக்கும் ஏதேனும் ஒரு ராகம் ஆத்மார்த்தமாக இருக்கும். அவ்வகையில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் ஆன்ம ராகம் கரகரப்பிரியா என்று சொல்லலாம். இந்த ராகத்தை செளம்யா மற்றும் நித்திய ஆலாபனை செய்து பாடியது சிறப்பாக இருந்தது.
எம்.எஸ். பிரபலப்படுத்திய `பிருந்தாவனத்தில்`, ரேவதி ராகத்தில், `நானாட்டி படுகு`, `குறை ஒன்றும் இல்லை` ஆகிய கீர்த்தனைகள் எப்பொழுதும்போல் இருந்தாலும், மழைச் சூழலும், எம்.எஸ். நினைவுகளால் மனம் மகிழ்ந்திருந்த நிலையும், அந்தப் பாடல்கள் தந்த சுகானுபவத்தை அதிகரிக்கச் செய்தன.
எம்.எஸ். சுப்புலட்சுமி ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய காஞ்சி மகா பெரியவர் இயற்றிய ‘மைத்ரீம் பஜத’ என்னும் பாடலை நிகழ்ச்சியின் இறுதிப் பாடலாக அமைத்திருந்தார் கவுரி நாராயண். மேடையில் நால்வர் மட்டுமல்ல, அரங்கமே இப்பாடலைப் பாடியது எனலாம்.
அன்று உலக அமைதி கோரி பூமித் தாயிடம் வேண்டுவது போன்று இப்பாடல் எழுதப்பட்டது. இந்தப் பாடலுக்கு ஆங்கிலத்தில் பொருள் எழுதப்பட்டு, அதன் பிரதிகள் பன்னாட்டு தலைவர்களுக்கும் வழங்கப்பட்டன. எம்.எஸ். பாடிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் அனைவரும் அதனைப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் இது அமைந்துவிட்டது. அவர் பாடி முடித்தபின் அங்கிருந்த பல நாட்டுத் தலைவர்களும் எழுந்து நின்று பலத்த கரகோஷம் எழுப்பினர்.
இப்போதும் மியூசிக் அகாடமியில் அப்பாடலுக்குப் பெரும் கரகோஷம் கிடைத்ததற்கு, அப்பாடலின் பொருளாகவே வாழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி குறித்த நினைவலைகள்தான் காரணம் என்றால் மிகையில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT