Published : 28 Nov 2015 09:38 AM
Last Updated : 28 Nov 2015 09:38 AM
சென்னை, மியூசிக் அகாடமியில் கடந்த வாரம், `தி இந்து’ நவம்பர் கலை விழாவில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர்கள் கார்த்திக், ஸ்வேதா மோகன், சக்தி கோபாலன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது. 60, 70-களில் தமிழ்த் திரைப்படங்களில் ஒலித்த பிரபல பாடல்களைப் பாடி ரசிகர்களை அந்தக் கால நினைவுகளில் இவர்கள் மிதக்கவைத்தனர். நவநீத், ராஜீஸ் (கீபோர்ட்), விக்ரம் (பர்கஷன்), ஸ்ருதி சாகர் (தபேலா), குமார் (காற்று வாத்தியங்கள்), கீத் பீட்டர் (பேஸ் கிடார்) உள்ளிட்ட கலைஞர்களால் அன்றைய மாலை, இசை மாலையானது.
வீட்டில் ஓய்வாக ரேடியோ கேட்டுக் கொண்டிருக் கிறார் கார்த்திக். `சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி…’ பாடல் ஒலிக்கிறது. ‘அடடா... என்னமா பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.’ என்று சிலாகிக்கிறார். ரேடியோ பெட்டியிலிருந்து அடுத்த பாடலுக்கான அறிவிப்பு இப்படி வருகிறது: ‘அடுத்து, `குடியிருந்த கோயில்’ படத்திலிருந்து ஒரு பாடலை கார்த்திக் பாடுவார்’. இதைக் கேட்டு திடுக்கிடும் கார்த்திக், சுதாரித்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்புகிறார்.
அடுத்த நொடியில், ஒளிவட்டம் வழிநடத்த மேடையில் தோன்றும் கார்த்திக் `என்னைத் தெரியுமா’ பாடலைத் தொடங்கியபோது, ரசிகர்களின் ஆரவாரம் பிய்த்துக்கொண்டது. நிஜமான ராக் அண்ட் ரோல் பாடலையும் `விஸ்வநாதன் வேலை வேண்டும்…’ பாடலையும் கார்த்திக் இணைத்துப் பாடியது விஷுவல் ட்ரீட்டாக இருந்தது.
பியானோவின் தொடக்க இசை, அதைத் தொடர்ந்து ட்ரம்பெட், சாக்ஸஃபோன் இசையுடன் இணையும் ட்ரம்ஸின் ரிதம். ஜாஸ் இசையின் வடிவம் இது. தமிழ்த் திரைப்படங்களில் இந்த வடிவத்தில் இசையமைக்கப்பட்ட மிகவும் பழைய பாடல் (இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி) எல்.ஆர். ஈஸ்வரி பாடிய `வர வேண்டும் ஒரு பொழுது…’ . இந்தப் பாடலை சக்தி கோபாலன் பாடி, ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளினார்.
`நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ பாடியபோது இறுக்கமும், `சிங்கார வேலனே தேவா’ பாடலை அதீத உற்சாகத்துடனும் ஸ்வேதா மோகன் பாடினார். டெல்லியிலிருந்து வந்திருந்த புகழ்பெற்ற கலைஞரான அஸ்ரத் கான், எஸ்ராஜ் வாத்தியத்தில் வாசித்த `மலர்ந்தும் மலராத’ ட்யூன் எல்லோரையும் மயக்கியது.
சில பாடல்களுக்கென அமைந்திருக்கும் முத்திரை வாத்தியங்களின் இசையை ஒலிக்காமல் விட்டதும், ஓரிரு பாடலின் வார்த்தையை மாற்றிப் பாடியதும், பழைய பாடல்களில் தோய்ந்த ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. பாடல்கள் வழங்கப்பட்ட விதம், பழைய பாடலின் சில வரிகளை ரசிகர் களையே பாடவைத்த கார்த்திக்கின் உத்தி ஆகியவை மழைநாளையும் பொருட்படுத்தாமல் ரசிகர்களை இரவு 10 மணி கடந்தும் அரங்கில் அமர வைத்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT