Published : 16 Nov 2015 12:53 PM
Last Updated : 16 Nov 2015 12:53 PM

‘தி இந்து’ நாளிதழ் ஒரு பல்கலைக்கழகம்: கவிஞர் பழநிபாரதி புகழாரம்

வாசகர் திருவிழா 2015 | சேலம்

அனைத்து தரப்பு வாசகர்களையும் கவரும் வகையில் `தி இந்து' நாளிதழ் ஒரு பல்கலைக் கழகமாக விளங்குகிறது என கவிஞர் பழநிபாரதி தெரிவித்தார்.

‘தி இந்து’ நாளிதழ் மக்களின் நன்மதிப்பை பெற்று வாசகர்களின் அமோக ஆதரவுடன் 2-ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. ‘தி இந்து’ 3-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ள தருணத்தில் இனியதொரு கொண்டாட்டமாக வாசகர் திருவிழா நடைபெற்றது.

வாசகர்களின் அமோக ஆதரவுடன் நாகர்கோவில், கும்பகோணம், மதுரை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், காரைக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் வாசகர் திருவிழா நடந்தது.

இதை தொடர்ந்து சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வாசகர்களுக்கான ‘தி இந்து’ வாசகர் திருவிழா சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள சோனா கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவில், கவிஞர் பழநிபாரதி பேசியது:

இந்தியா இன்று முரண்பாடுகளின் மூட்டை யாக மாறிக் கிடக்கிறது. சாதி, மதத்தால் பிரிக்கப்பட்டு கிடக்கிறது. இந்தச் சூழலில் ஜனநாயகமும், ஊடகங்களும் மக்களுக்கான தாக இல்லை என்ற வருத்தம் உள்ளது. இருப்பினும் ‘தி இந்து’ நாளிதழ் ஆரோக்கிய மான சிந்தனைகளை வளர்க்கும் மாறுபட்ட இதழாக உள்ளது. சிறந்த தொடர்கள் நாளிதழ்களில் வருவது அபூர்வம். அதையும் ‘தி இந்து’ இதழ் சாத்தியமாக்கி உள்ளது.

கடல்புரத்து மக்களின் வாழ்வு நிலை பற்றிய தொடர், மதுவின் பாதிப்பு குறித்த ‘மெல்லத் தமிழன் இனி’ உள்ளிட்ட தொடர்கள் பலரும் மறந்த தகவல்களை கவனப் படுத்தியது. வெள்ளப்பெருக்கு சேதம் போன்ற வற்றுக்கு மனித சமூகத்தின் அலட்சியமே காரணம் என்ற தகவலை தொடர் மூலம் அழுத்தமாகக் கூறி வருகிறது. விவசாயம், சூழல், பண்பாடு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்தையும் ‘தி இந்து’ நாளிதழ் பேசி வருகிறது.

‘தி இந்து’ நாளிதழை மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் வாதிகள் என அனைத்து தரப்பினர் கையிலும் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் அனைத்து தரப்பு வாசகர்களையும் கவரும் வகையில் இந்த நாளிதழ் ஒரு பல்கலைக்கழகமாக விளங்குகிறது. மலர் பறிக்கவும், ஊற்று நீரை பருகவும், தாயின் பாதம் வணங்கவும் என 3 காரணங்களுக்கு தான் தலை குனிய வேண்டும் என்பார்கள். நான்காவதாக, தமிழ் மக்களின் ஏற்றத்துக்காக இயங்கி வரும் ‘தி இந்து’ நாளிதழ் மற்றும் அதில் எழுதுபவர்களை வணங்கவும் தலை குனியலாம் என்பது என் கருத்து. கர்னாடக இசை மற்றும் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது போன்று தமிழ் இசை மற்றும் கலைஞர்கள் குறித்தும் எழுத வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

‘திருக்குறளை போல் தமிழர்களின் வழிகாட்டி’

விழாவில் ஓவியர் வீரசந்தானம் பேசியதாவது: மது பழக்கம் குறித்த கட்டுரையை படித்த பின்பு தான், ‘தி இந்து’ நாளிதழ் மீதான வாசிக்கும் ஆர்வம் எனக்கு அதிகரித்தது. மது குறித்த கட்டுரையைப் படித்தவர்கள், மதுவை மீண்டும் தொட மாட்டார்கள். ‘தி இந்து’ தலையங்கம் மூலம் பல தகவல்களை அறிய முடியும். குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய பெண்ணிடம், ஊடகங்கள் கேட்க கூடாத கேள்விகளை கேட்டுள்ளதை தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது ‘தி இந்து’.

குழந்தைகளுக்கு உணவில் சத்தான பொருட்களை சேர்த்து சிறிது சிறிதாக வழங்குவது போல், கட்டுரைகளை பெரிய அளவில் இல்லாமல் சுருக்கி வெளியிட வேண்டும். முழு பக்க கட்டுரைகளை விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகளில் வெளியிட வேண்டும். தமிழர்களின் வழிகாட்டி நூலாக திருக்குறள் இருப்பது போல், தமிழர்களின் வழிகாட்டி நாளிதழாக ‘தி இந்து’ உள்ளது. நம்மை முன்னேற்றி கொள்ள, வளர்த்துக்கொள்ள ‘தி இந்து’ நாளிதழ் படிக்க வேண்டும். அனைத்து குழந்தைகளின் கைகளில் இருக்க வேண்டிய நாளிதழ் ‘தி இந்து’ என்றார்.

இணைப்பிதழ் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் ஏற்புரை வழங்கினார்.

இந்நிகழ்வை ‘தி இந்து’வுடன் இணைந்து ஹார்லிக்ஸ் ஓட்ஸ், ராம் ப்ராபெர்டீஸ், லலிதா ஜூவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், வர்த்தமான் பதிப்பகம், சேலம் நியூரோ ஃபவுண்டேசன் மருத்துவமனை, லியோ காஃபி, மில்கா ஒண்டர்கேக், சேலம் இன் அமுது உணவகம், ஓட்டல் கோல்டு ரே சரோவர் போர்டிகோஆகிய நிறுவனங்கள் வழங்கின.

விழாவுக்கு வந்த வாசகர்கள் ‘தி இந்து’ குழும வெளியீடுகளை எளிதில் வாங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

படங்கள்: எஸ்.குரு பிரசாத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x