Published : 04 Nov 2015 10:12 AM
Last Updated : 04 Nov 2015 10:12 AM

வெட்டுகூலிகூட கிடைக்காததால் மரத்திலேயே அழுகும் நாட்டுவாழை: ஒரு தார் விலை ரூ.20 ஆக குறைந்தது- வாங்க ஆளில்லாமல் விவசாயிகள் தவிப்பு

உற்பத்தி அதிகரித்ததால் சந்தைக ளில் நாட்டு வாழைத்தார் ரூ.20-க்குக் கூட வாங்க ஆளில்லாமல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள் ளது. அதனால், மதுரை மாவட்டத் தில் அறுவடைக்குத் தயாரான நாட்டு வாழைத்தார்களை விவசாயி கள் அறுவடை செய்யாமல் விட்டுள்ளதால் மரத்திலேயே அவை பழுத்து அழுகி வருகின்றன.

தமிழகத்தில் தேனி, கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழை சாகுபடி அதிகளவு நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் 2,500 ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 2,000 ஹெக்டேரில் ஒட்டுரக நாட்டு வாழை சாகுபடி செய்துள்ளனர். ரஸ்தாலி, கற்பூரவள்ளி, செவ் வாழை, மலை வாழை உள்ளிட்ட உயர்ரக வாழைப் பயிர்களில் அதிகளவு நோய் தாக்குதல், கூடுதல் பராமரிப்புச் செலவு இருப்பதால் விவசாயிகள் பெரும்பாலும், ஒட்டுரக நாட்டு வாழையையே சாகுபடி செய்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் உற்பத்தி யாகும் நாட்டு வாழைத்தார் கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அதிகளவில் அனுப்பப்படுகின்றன.

கடந்த ஆயுதபூஜை பண்டி கையையொட்டி, வாழைத்தார் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஆயுதபூஜை முடிந்த ஒரே வாரத்தில் தற்போது தமிழகம் முழுவதும் வாழைத்தார் விலை திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஆயுத பூஜையையொட்டி ரூ.150 முதல் ரூ. 300 வரை விற்ற நாட்டு வாழைத்தார், தற்போது ரூ.10 முதல் ரூ.30 வரையே விற்கிறது. வெட்டுக்கூலி, லாரி வாடகைக்குக்கூட கட்டுப்படி ஆகவில்லை. அதனால் மதுரை மாவட்டத்தில் நாட்டுரக வாழை சாகுபடி செய்த விவசாயிகள், அறுவடைக்கு தயாரான வாழைத் தார்களை வெட்டாமல் மரத்திலேயே விட்டுள்ளனர்.

இதுகுறித்து மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாரப் பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் காமாட்சி, பாலகுரு ஆகியோர் கூறியதாவது:

ஒரு வாழைத்தார் உற்பத்தி செய்வதற்கு ரூ.60 செலவாகிறது. ஆனால், இப்போது ஒரு வாழைத்தாருக்கு ரூ.10 முதல் ரூ.20 வரைதான் கிடைக்கிறது. ஒரு வாழைத்தார் வெட்டுக்கூலி 5 ரூபாய், லாரி வாடகை 3 ரூபாய் கொடுக்க வேண்டும். வாழை மண்டி கமிஷன் போக வெட்டுக்கூலி, போக்குவரத்துச் செலவுக்குக்கூட வருமானம் கிடைப் பதில்லை. அதனால், 3 ஏக்கரில் அறுவடைக்குத் தயாரான வாழைத் தார்களை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிட்டோம். மரத்திலேயே பழங்கள் பழுத்து அழுகிவிட்டன.

இப்போது வாழைத்தார் விவ சாயத்தில் எதிர்பாராத விலை உயர்வு, வீழ்ச்சி ஏற்படுவதால் வாழை விவசாயம் செய்வது கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையே உள்ளது. அதுபோல, ஹோட்டல்கள், திருமண விசேஷங் களில் தற்போது வாழை இலைக்குப் பதில் காகிதத் தட்டுகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதனால், ஒரு வாழை இலை ஒரு ரூபாய்க்குத்தான் விற்கிறது. ஒரு ஏக்கர் வாழைத்தார் சாகுபடி செய்ய ரூ.60,000 செலவாகிறது. ஆனால், ரூ.20 ஆயிரம் மட்டுமே கிடைப்பதால் ரூ.40 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மதுரை, திண்டுக் கல், ராமநாதபுரம் வாழைத்தார் மண்டி வியாபாரி தாமஸ் கூறிய தாவது: கடந்த ஆண்டு இதே நாட்டுரக வாழைத்தார் சாதாரண மாகவே ரூ.100 வரை விற்றது. விழா காலங்களில் ரூ.300 வரை விலைபோனது. 1,000 வாழைத்தார் சாகுபடி செய்தவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் முதல் ஓரிரு லட்சம் வரை லாபம் கிடைத்தது. ஒன்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்த விவசாயி களுக்கு பல லட்ச ரூபாய் லாபம் கிடைத்தது.

மேலும் நெல், கரும்பு சாகு படியில் பெரிய அளவில் லாபம் கிடைக்காததால், இந்த ஆண்டு விவசாயிகள் அளவுக்கு அதிக மாக வாழைத்தார் சாகுபடி செய்துவிட்டனர். அதனால், ஏலம் எடுக்க ஆளில்லாமல், விவசாயிகள் சந்தையிலேயே வாழைத்தார்களை போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

அதிகாரிகளே காரணம்

ரஸ்தாலி, மலை வாழை மற்றும் பச்சை வாழைத்தார் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டமில்லாமல் வரவுக்கும், செலவுக்கும் சரியாக விலை போகிறது. வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு, அறிவுரை வழங்காமல் விட்டதுதான் தற்போது வாழைத்தார் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x