Published : 03 Nov 2015 11:07 AM
Last Updated : 03 Nov 2015 11:07 AM

உங்கள் குரல்: தாம்பரம் ரயில் நிலையத்தில் விசாரணை கவுன்ட்டர் வேண்டும்

தாம்பரம் ரயில் நிலையத்தில் தனியாக விசாரணை கவுன்ட்டர் அல்லது விசாரணை மையம் அமைக்க வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் எஸ்.ரவி கூறியதாவது:

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பா லான விரைவு ரயில்கள் தாம்பரம் வழியில் தான் இயக்கப்படுகின்றன புறநகர் பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரயில் நிலையத்தை அதிகளவில் பயன்படுத்து கின்றனர். ஆனால், விரைவு ரயில்களில் புறப்பாடு மற்றும் வந்தடையும் நேரம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள இங்கு தனியாக விசாரணை மையம் இல்லாமல் இருக்கிறது.

ரயில்களின் நேரம் குறித்து அறிந்துகொள்ள நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே, பயணிகளின் நலன்கருதி தாம்பரத்தில் புதிதாக விசாரணை மையம் அமைக்க வேண்டும். அல்லது டிக்கெட் வாங்கும் இடத்தில் விசாரணைக்கு என தனி கவுன்ட்டர் திறக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் இருக்கும் இடத்தில் விசாரணைக்கு என தனி கவுன்ட்டர் இருக்கும். அதன்மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இதுதவிர, தனியாக விசாரணை மையம் அமைக்க வேண் டிய தேவை தற்போது இல்லை. மேலும் இது குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றனர்.



வில்லிவாக்கம் ராஜாஜி நகரில் பிஎஸ்என்எல் சிக்னல் கிடைக்கவில்லை

சென்னை

வில்லிவாக்கம் ராஜாஜி நகரில் பிஎஸ்என்எல் மொபைல் சேவைகளுக்கு சரி வர சிக்னல் கிடைக்கவில்லை என்று உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஜி.நாகராஜன் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியதாவது:

வில்லிவாக்கம் ராஜாஜி நகரில் உள்ள பழனி தெருவில் வசித்து வருகிறேன். பல ஆண்டு காலமாக பிஎஸ்என்எல் மொபைல் சேவையை பயன்படுத்தி வருகிறேன். எனது வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு போன்றவற்றுக்கு எனது பிஎஸ்என்எல் மொபைல் எண்ணைத்தான் தொடர்புகொள்ள கொடுத்திருக்கிறேன்.

ஆனால், எனது மொபைல் போனுக்கு எப்போதுமே சிக்னல் கிடைப்பதில்லை. இதற்கு முன்பாக நான் கொரட்டூரில் இருந்தேன். அங்கு நல்ல முறையில் சிக்னல் கிடைத்தது. ஆனால், இங்கு எனக்கு சரிவர சிக்னல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனது சிம்மிலோ, போனிலோ பிரச்சினை இருக்கலாம் என நினைத்து வேறொரு பிஎஸ்என்எல் சிம்மை வேறொரு மொபைல் போனில் பொருத்தி பார்த்தேன், அதற்கும் சிக்னல் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கேட்டபோது, “செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சுகளால் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், தகவல் தொழில்நுட்பத்துறை அனுமதித்துள்ள அளவுக்குத்தான் பிஎஸ்என்எல் சிக்னல் வெளியாகிறது. இதனால் அதிக தூரத்துக்கு சிக்னல் கிடைப்பது கடினம். மேலும் ஜன சந்தடி மிக்க தெருக்கள், கட்டிடங்கள் போன்ற இடங்களிலும் சிக்னல் கிடைக்காது. ஆனால், தனியார் நிறுவனங்கள் இந்த விதிமுறையை முறையாக பின்பற்றுவது உறுதி செய்யப்படவில்லை” என்றனர்.



பாடி- லூகாஸ் பஸ் நிறுத்தப் பகுதியில் சாலை விதிகளை மீறும் வாகனங்கள்

திருவள்ளூர்

அம்பத்தூர் அருகே உள்ள பாடி-லூகாஸ் பஸ் நிறுத்தப் பகுதியில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்லும் வாகனங்களால், சாலையை கடப்பது மிகவும் ஆபத்தாக உள்ளது என்று வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ’தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு வாசகர் ஒருவர் தெரிவித்ததாவது:

பாடி-லூகாஸ் அருகே 200 அடி சாலை சந்திக்கும் பகுதியில் பாடி மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு கீழே 200 அடி சாலையின் இரு பக்கங்களிலும் பஸ் நிறுத்தங்கள் உள்ளன.

அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி, வில்லிவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பாடி மேம்பாலம் மற்றும் அணுகுசாலை வழியாகச் சென்று வரும் வாகனங்களில் பெரும்பாலானவை இங்கு உள்ள போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் வேகமாக செல்கின்றன. இப் பகுதியில் வேகத்தடைகளும் இல்லை. இதனால், சாலையை கடக்க மக்கள் மிகவும் சிரமப்படுவதோடு, விபத்துகளும் ஏற்படுகின்றன என்றார்.

இதுகுறித்து, அம்பத்தூர் போக்குவரத்துக் காவல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “அம்பத்தூர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் உள்ள காவலர் பற்றாக்குறையால், அப்பகுதியில் காவலர்களை பணியில் அமர்த்த முடியவில்லை. விரைவில், மாற்று ஏற்பாடுகள் மூலம் பாடி-லூகாஸ் பஸ் நிறுத்தப் பகுதியில் போக்குவரத்துக் காவலர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கிறோம். அதுமட்டுமல்லாமல், பாடி- லூகாஸ் பஸ் நிறுத்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பல தடவை முறையிட்டும் பலனில்லை. எனவே, தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன், வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x