Last Updated : 30 Oct, 2015 10:26 AM

 

Published : 30 Oct 2015 10:26 AM
Last Updated : 30 Oct 2015 10:26 AM

மியூசிக் அகாடமியில் இசை ஜுவாலை

காரசாரமான காய்ந்த மிளகாய்களைக் கை நிறைய அள்ளித் தனது சட்டைப் பையில் போட்டுக்கொள்வார். அதன் பின்னரே தன் இசைப் பயணத்தைத் தொடங்குவார். உலகப் புகழ் பெற்ற இந்திய இசை மேதை ஜூபின் மேத்தாவின் வழக்கம் இது. சிறுவயதிலேயே மும்பையிலிருந்து பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்தாலும் தனது 79-ம் வயதிலும் பழைய இந்திய நாவோடுதான் இருக்கிறார். ஒருவேளை அவருடைய இசையும் காரசாரமாக இருக்குமா என்றால், இல்லவே இல்லை. தேனாய் இனிக்கிறது! சென்னை மியூசிக் அகாடமியில் 28-ம் தேதி மாலை பொழிந்த அவரது இசை மழை, ரசிகர்களைக் குளிரவைத்தது.

தனது சுவையான, சுருக்கமான அறிமுக உரையால் பார்வையாளரின் கவனத்தை முதலில் ஈர்த்தார் பியானோ இசைக் கலைஞர் அனில் நிவாசன். அவரைத் தொடர்ந்து டென்னிஸ் புகழ் விஜய் அமிர்தராஜின் வரவேற்பு உரையோடு நிகழ்ச்சி தொடங்கியது.

சலனமற்ற நீரோடைபோன்ற மெல்லிய இசை கோவையை ஜூபின் மேத்தாவின் இயக்கத்தில் ஆஸ்திரேலியா வேர்ல்ட் ஆர்கெஸ்ட்ரா இசைக் குழுவின் வயலின் இசைக் கலைஞர்களும் புல்லாங்குழல் கலைஞர்களும் செல்லோ கலைஞர்களும் முதலில் இசைத்தனர்.

இதையடுத்து பெருக்கெடுத்தது குற்றாலப் பேரருவி போன்றதொரு இசைக் கோவை. அதுதான் மேற்கு உலகின் இசைக் கடவுளாகக் கொண்டாடப்படும் மொஸார்டின் ‘தி மேரேஜ் ஆஃப் பிகாரோ’. 1786-ல் மொஸார்டே மெடை ஏறி நேரடியாக அரங்கேற்றிய அதி அற்புதமான அந்த இசைக் கோவையானது இந்திய மண்ணில் இசைக்கப்பட்டபோது மெய்சிலிர்த்தது.

அதிலும் பாடகி கிரேடா பிராட்மேன் வருகைக்கு பின்னர் ஒட்டுமொத்த அரங்கமும் வேறு பரிமாணத்துக்கு நகர்த்தப்பட்டது. ஒலி வாங்கியோ ஒலிபெருக்கியோ இல்லாமலேயே அனைவரையும் அவர் குரல் கட்டிப் போட்டது. மொஸார்டின் ‘மேஜிக் ஆஃப் தி ஃபிலூட்’ பாடலை அவர் பாடிய போது அவர் எது அவருடைய குரல் எது, புல்லாங்குழல் எது என பிரித் தறிய முடியாத மாயாஜாலம் நிகழ்ந்தது. அதேபோல வயலினாகவே அவர் குரல் மாறிய தருணங்களும் நிகழ்ந்தன. தன் பாடலுக்கேற்ப அபிநயம் பிடித்த அவரின் உடல் மொழி எல்லோரையும் கவர்ந்தது.

உச்ச ஸ்தாயிலும் வெவ்வேறு தாளக்கட்டிலும் அனாயாசமாக பாடிப் பறந்த கிரேட்டாவின் குரல் அரங்கத்தை நிறைத்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரேட்டாவுக்கு கிட்டத்தட்ட 1000 மேடைக் கச்சேரிகள் செய்த அனுபவம் உண்டு. 2013-ல் ‘பெர்ஃபாமன்ஸ் ஆஃப் தி இயர்’ விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் பல விருதுகளைப் பெற்ற அவர் சோனி மியூசிக், ஏபிசி கிளாசிக் போன்ற முன்னணி இசைப் பதிவு நிறுவனங்களுக்கு இசை ஆல்பங்களும் பாடியுள்ளார்.

50-க்கும் அதிகமான வயிலின் இசைக் கலைஞர்கள் அருமையாக இசைத்தபோதும் டானியல் வூட்ஸ் மற்றும் டொபியாஸ் லே ஆகிய இருவரும் தங்கள் வயலினை தொட்டபோதுதான் மொஸார்டின் இசை கோவைகள் மழையாக பொழிந்தன. வயலின், செல்லோ, டபுள் பாஸ், ஹாரன், கிளாரினெட், டிரம்பட், டூபா என கிட்டத்தட்ட நூறு இசைக் கலைஞர்கள் வாசித்தபோதும் ஒரு புல்லாங்குழல் கலைஞரின் தனித்துவம் பல இடங்களில் மிளிர்ந்தது.

இறுதியாக, 1877-ல் ஜான் பிராம்சன் இசையமைத்த ‘சிம்ஃபனி நம்பர் 2’ இசைக் கோவை வாசிக்கப்பட்டது. இதைக் கேட்டவர்கள் இன்னும் சில நாட்களுக்கு ஜூபின் மேத்தா என்ற இரு வார்த்தைகளைத் தவிர வேறு எதையுமே உச்சரிக்க முடியாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x