Published : 19 Oct 2015 11:08 AM
Last Updated : 19 Oct 2015 11:08 AM

இன்றைய குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் மட்டும் போதாது, நாளிதழ் வாசிப்பும் அவசியம்: சென்னை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை

வாசகர் திருவிழா 2015 | கோயம்புத்தூர்

இன்றைய குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் மட்டும் போதாது, நாளிதழ் வாசிப்பும் அவசியம் என உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார்.

‘தி இந்து' தமிழ் நாளிதழின் 2-ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாகர்கோவில், கும்பகோணம், மதுரை திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் வாசகர் திருவிழா நடைபெற்றது. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான ‘தி இந்து' வாசகர் திருவிழா கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பேசியதாவது:

‘தி இந்து’ நாளிதழ் நமது குடும்பத்தின் அங்கமாக இருப்பதால் சிறப்பு விருந்தினராக நான் இங்கு வரவில்லை. சிறுவயதிலும், பின்னாளில் நீதித்துறைக்குச் சென்ற பிறகும் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து சுமார் 50 வருடங்களாக இந்த நாளிதழைப் படிக்கிறேன்.

பாடப்புத்தகத்தை மட்டும் குழந்தைகள் படிப்பது போதாது. கூடுதலாக பல விஷயங்களை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கு நாளிதழ் வாசிப்பும் தேவை. அந்த வகையில் பெற்றோரின் பங்களிப்பை இந்த நாளிதழ் செய்து வருவது பாராட்டத்தக்கது.

நீதித்துறையும், செய்தித்துறையும் சமூக முன்னேற்றத்துக்கான பணியை முன்னெடுத்துச் செல்கின்றன. ஜனநாயக நாட்டில் இரண்டும் முக்கியமானவை.

இளைஞர்களின் எதிர்காலம் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு இணையாக உள்ள ‘தி இந்து’ போன்ற பத்திரிகைகளின் கையில் உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் இப்பத்திரிகையின் ஏதாவது ஒரு பகுதியை 5 நிமிடம் படிக்க நேரம் ஒதுக்க கற்றுக்கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், மனிதவள ஆலோசகர் டாக்டர் ஆர்.கார்த்திகேயன்,  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத் தலைவர் எம்.கிருஷ்ணன், விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநிலச் செயலாளர் எம்.எஸ்.செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுப் பேசினர்.

நிகழ்ச்சியின் போது ‘தி இந்து' வெளியீடான ‘மண் மணம் சொல்லும் மாவட்ட சமையல்கள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலை ஈரோடு வாசகி ருக்மணி, திருப்பூர் வாசகிகள் சுசீலா, நிர்மலா, அபிராமி ஆகியோர் வெளியிட  பாலாஜி கேட்டரிங் சர்வீசஸ் தலைமை சமையலர் தாமு பெற்றுக் கொண்டார்.

விழாவை ‘தி இந்து' குழுமத்தின் மூத்த பொது மேலாளர் (நிர்வாகம்) வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். மண்டல மேலாளர் (விற்பனை) வி.செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.

விழாவை, ஹார்லிக்ஸ் ஓட்ஸ், ராம் புராபர்ட்டீஸ், லலிதா ஜூவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், வர்த்தமானன் பதிப்பகம்,  பாலாஜி கேட்டரிங் சர்வீசஸ், இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளை, ஓட்டல் விஜய் எலன்ஸா, லியோ காபி, சபோல் குடிநீர், பனானா ஸ்லைஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x