Published : 22 May 2014 10:00 AM
Last Updated : 22 May 2014 10:00 AM
’’தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் அல்ல.. உள்நாட்டுக்குள்ளேயே யுத்தம் தொடங்கிவிட்டது. ஆனாலும், நாம் நீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் பியூஷ் மானுஷ்.
ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டது பியூஷ் மானுஷின் குடும்பம். பியூஷ் பிறந்தது சேலம் என்பதால் அவர் தமிழராகவே மாறிவிட்டார். முற்போக்கு சிந்தனை கொண்ட பியூஷ் கல்லூரியில் படிக்கும்போதே கல்வி தனியார் மயமாவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.
விளைவு, இரண்டாம் ஆண்டிலேயே வீட்டுக்கு வழியனுப்பப்பட்டார். படித்தது போதும் என முடிவுக்கு வந்தவர், மக்களைப் படிக்க ஆரம்பித்தார். அப்புறம் நடந்தவைகளை அவரே நம்மிடம் விவரிக்கிறார்.
’’குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் குடிநீர் ஆதாரங்களை பாதுகாப்பது குறித்து அக்கறை இல்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் தேசங்களை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. சேலத்தைச் சுற்றி கிரானைட், பாக்சைட் கம்பெனிகள் சுரங்கம் அமைத்து 28 சதுர கிலோ மீட்டர் ஏரியாவை செயற்கை பாலைவனமாக ஆக்கிவிட்டார்கள். இங்கு ஓடிய 5 ஆறுகளை காணவே இல்லை. ஒன்றிலிருந்து ஒன்று நிரம்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட 30 சங்கிலித் தொடர் ஏரி கட்டமைப்பை நாசம் பண்ணிவிட்டார்கள்.
இயற்கைக்கு எதிரான இந்த அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 10 வருடங்களாக போராடுகிறோம். போராட்டம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதால் ஏரிகளை தூர்வாரும் பணிகளையும் தொடங்கினோம். எங்களது ’சேலம் மக்கள் குழு’வில் சமூக ஆர்வலர்கள் 70 பேர் இருக்கிறோம். முதலில், 58 ஏக்கர் பரப்பளவுள்ள சேலம் மூக்கனேரியை தூர்வாரி ஏரிக்குள் 48 திட்டுக்களை அமைத்தோம். ஒவ்வொரு திட்டிலும் 300 மரக்கன்றுகளை நட்டோம். ஒரே வருடத்தில் மரங்கள் வளர்ந்து இப்போது அங்கே பறவைகள் சரணாலயமே உருவாகிவிட்டது. இப்போது அந்த ஏரிக்கரையில் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது.
இதேபோல், சுகாதாரச் சீர்கேட்டின் மொத்த உருவமாய் இருந்த சேலம் அம்மாபேட்டை ஏரியையும் சவாலாக எடுத்து தூர்வாரினோம். 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியில் 37 திட்டுக்களை அமைத்து சிறுவர்கள் பூங்கா, தியான மண்டபம் உள்ளிட்டவைகளை உருவாக்கினோம். அடுத்ததாக இஸ்மாயில்கான் ஏரியின் வரத்துக்காலை நாலரை கிலோ மீட்டருக்கு தூர் வாரி தண்ணீரை கொண்டு வந்து சேர்த்தோம்.
இந்தப் பணிகள் அனைத்துமே சேலம் மக்களிடமிருந்து சிறுகச் சிறுகச் சேர்த்த நிதியிலிருந்துதான் செய்து முடித்திருக்கிறோம். தண்ணீர் பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் மலைகள் மீது முருகனை உட்கார வைத்தோம். ஆனால், பணத்தாசை பிடித்தவர்கள் அந்த மலைகளையே உடைத்து விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் இருக்கிறது.
மாரியாத்தா கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். நீர்நிலைகள்தான் உண்மையான மாரி. அவைகளை சீரமைக்க எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழிக்கலாம். அதனால்தான் நாங்கள் தூர்வாரி செப்பனிட்ட ஏரிகளுக்கு ’மாரி ஸ்தலம்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இதைப்போல் ’மாரி ஸ்தலங்கள்’ எல்லா ஊர்களிலும் உருவாக வேண்டும்’’ என்று கூறி பிரமிக்க வைத்தார் பியூஷ் மானுஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT