Published : 26 Oct 2015 10:30 AM
Last Updated : 26 Oct 2015 10:30 AM

வாழ்வு இனிமையாக அமைய குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்குங்கள்: திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அறிவுரை

வாசகர் திருவிழா 2015 | காரைக்குடி

குடும்பத்தினருக்காக கொஞ்சநேரம் ஒதுக்குங்கள். அது உங்கள் வாழ்வை இனிமையாக்கும். எதிலும் லட்சியம் உறுதியாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்று திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்தார்.

`தி இந்து’தமிழ் நாளிதழின் இரண்டாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாகர்கோவில், கும்பகோணம், மதுரை, திருவண்ணாமலை, கோவை ஆகிய நகரங்களில் வாசகர் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான வாசகர் திருவிழா காரைக்குடியில் உள்ள கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது:

கடந்த 1878-ம் ஆண்டில் நான்கு சட்டக் கல்லூரி மாணவர்கள், இரண்டு ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட `தி இந்து’ நாளிதழ் இன்று ஆலமரம்போல் விருட்சமாக வளர்ந்துள்ளது. இப்பத்திரிகையை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருவது வரலாற்று சாதனை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களை எதிர்த்து ஆங்கிலத்தில் வெளிவந்த பத்திரிகை `தி இந்து’.

கவியரசர் கண்ணதாசன் நடத்திய தென்றல் பத்திரிகையில் நானும் பணியாற்றினேன். ஆனால், தொடர்ந்து அவரால் பத்திரிகையை நடத்த முடியாமல் போனது. பத்திரிகையை 137 ஆண்டுகள் தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய சாதனை.

`தி இந்து’ ஆங்கில பத்திரிகையின் வாரிசாக வந்துள்ள `தி இந்து’ தமிழ் நாளிதழ் பல நல்ல விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும், வாசகர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதனால் இப்பத்திரிகைக்கு வாசகர்களாகிய நாம் ஊக்கமும், உற்சாகமும் அளிக்க வேண்டும்

`தி இந்து’நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை வரும் `பெண் இன்று’ பக்கம் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. புதன் கிழமை நான் எழுதும் ‘சினிமா எடுத்துப்பார்’ என்ற கட்டுரையும் வெளிவருகிறது. அதற்கு வாசகர்களிடம் இருந்தும், எனது நண்பர்களிடம் இருந்தும் பாராட்டுகள் கிடைக்கின்றன. அந்த அளவுக்கு `தி இந்து’வில் வரும் செய்திகள் மக்களை சென்றடைகிறது. கிசுகிசு போன்றவற்றை தவிர்த்து `தி இந்து’வில் செய்திகள் மட்டுமே வருவது பாராட்டுக்குரியது.

நாளிதழை படித்துவிட்டு பாதுகாக்க வைக்கிறது. இது `தி இந்து’குழுமத்துக்கும், ஆசிரியருக்கும், அவரைச் சார்ந்துள்ள குழுவுக்கும் கிடைத்துள்ள வெற்றி. படிப்பதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி படித்த முன்னாள் பிரதமர் நேரு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், பேரறிஞர் அண்ணா, சட்டமேதை அம்பேத்கர் போன்றவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாகி உள்ளனர். பாடப் புத்தகங்கள் மட்டும் படித்தால் போதாது, பொது அறிவை வளர்ப்பதில் நாளிதழ்களின் பங்கு மிக முக்கிமானது. நாளிதழ் மட்டுமல்ல பாதுகாக்கப்பட வேண்டி பொக்கிஷம் `தி இந்து’.

காலம் உயிர் போன்றது. அதை இழந்துவிடக் கூடாது. நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் எதுவும் சாத்தியம். வாழ்க்கையில் கஷ்டம் இருக்கலாம். கஷ்டமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. குடும்பத்தினருக்காக கொஞ்சநேரம் ஒதுக்குங்கள். அது உங்கள் வாழ்வை இனிமையாக்கும். லட்சியம் உறுதியாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்றார்.

விழாவை `தி இந்து’குழுமத்தின் மூத்த பொது மேலாளர் (நிர்வாகம்) வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். மண்டல மேலாளர் (விற்பனை) சதீஸ்குமார் நன்றி கூறினார்.

விழாவை ஹார்லிக்ஸ் ஓட்ஸ், ராம் புராபெர்ட்டீஸ், லலிதா ஜுவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், வர்த்தமானன் பதிப்பகம், லியோ காபி, புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் கல்லூரி, தி பங்களா ஹோட்டல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x