Published : 05 Oct 2015 10:54 AM
Last Updated : 05 Oct 2015 10:54 AM
நம்மை தினமும் சிந்திக்க வைக்கும் செய்திகள் வந்து கொண்டிருந்தால் மட்டுமே நமக்கு எது வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும் என்றார் நடிகர் ரோஹிணி.
`தி இந்து’ தமிழ் நாளிதழின் 2-ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாகர்கோவில், கும்பகோணம் ஆகிய இடங்களில் வாசகர் திருவிழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கான `தி இந்து’ வாசகர் திருவிழா மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரை கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
விழாவில் நடிகர் ரோஹிணி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் என்.நன் மாறன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், காலச்சுவடு ஆசிரியர் எஸ்.கண்ணன், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் பேரன் ஷேக் சலீம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று பேசினர்.
விழாவில் நடிகர் ரோஹிணி பேசிய தாவது:
‘தி இந்து’வை சமீப காலமாக வாசிக்கிறேன். மனநிறைவை தரும் செய்திகள் நிறைய உள்ளன. சுற்றுச்சூழல் செய்திகள் மட்டுமின்றி, சினிமா, நாடகம், நமது ரசனைக்கு ஏற்ப பாட்டு, காட்சிகள், நல்ல நடிப்பு, தலைசிறந்த மனிதர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பு `தி இந்து’ மூலம் கிடைத்துள்ளது.
திரை விமர்சனங்களைப் பற்றி பேச வேண்டுமெனில், சாதாரணமாக எந்த ஒரு பத்திரிகையிலும் இந்த மாதிரியான விமர்சனத்தை நான் படித்ததில்லை. அக்கறையுள்ள எழுத்தாளரின் பதிவாக அதை நான் பார்க்கிறேன். பெண்களை அநாகரீகமாக ஆடை அணிய வைக்காதீர்கள் என்று குரல் கொடுக்க ஏன் ஆள் இல்லை. அதற்குதான் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும். தினமும் சிந்திக்க வைக்கும் செய்திகள் வந்தால் மட்டும்தான் எது நமக்கு வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். அதுபோன்ற தெளிவை கொடுப்பது இதுபோன்ற கட்டுரைகள்தான் என்றார்.
விழாவை `தி இந்து’ குழுமத்தின் மூத்த பொது மேலாளர் (நிர்வாகம்) வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். மதுரை பிராந்திய மேலாளர் (விற்பனை) ஆர்.பரதன் நன்றி கூறினார். `தி இந்து’ இணைப்பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன் ஏற்புரையாற்றினார்.
இந்த நிகழ்வை ஹார்லிக்ஸ் ஓட்ஸ், ராம் ப்ராபெர்டீஸ், லலிதா ஜுவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், ஹோட்டல் வெஸ்டர்ன் பார்க், வர்த்தமானன் பதிப்பகம், மதுரை கல்லூரி ஆகிய நிறுவ னங்கள் ‘தி இந்துவுடன் இணைந்து வழங்கின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT