Published : 20 May 2014 10:37 AM
Last Updated : 20 May 2014 10:37 AM
‘‘அம்மாவுக்கு காலில் குண்டடிபட்டு ஆபத்தான நிலையில் அகதியாக தமிழகம் வந்த எங்களை அரவணைத்துக் காப்பாற்றியது தமிழ் மக்கள். அந்த அன்புக்கு கைமாறு செய்யவே ரத்த, கண் தான சேவை செய்ய ஆரம்பிச்சேன்’’ - நன்றிப் பெருக்குடன் சொல்கிறார் ஜீவன்.
இலங்கை முல்லைத் தீவு மாவட்டம் மல்லாவி கிராமத்தைச் சேர்ந்தது ஜீவன் குடும்பம். 1990-ல் ராணுவத் தாக்குதலில் ஜீவன் அம்மாவின் காலில் குண்டடிபட்டது. அதற்குமேல் அங்கிருக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் ஜீவனின் குடும்பம் அகதியாக தமிழகம் வந்தது. மதுரை அருகே உச்சப்பட்டி அகதிகள் முகாமில் இவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. பிறகு நடந்ததை ஜீவன் சொல்கிறார்.
என் அம்மாவைக் காப்பாற்ற முடியுமா என்கிற சந்தேகத்துடன்தான் தமிழ் மண்ணை மிதித்தோம். இலங்கையில் அவசரத் தேவைக்கு மருத்துவ வசதியோ, மருந்தோ கிடைக்காது. இங்கே கிடைத்த வசதிகளைப் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன். அரசாங்கத்தைவிடவும் இங்குள்ள மக்கள் எங்களை நல்லாவே பாத்துக்கிட்டாங்க. கஷ்டப்பட்டு அம்மாவையும் சுகப்படுத்தியாச்சு.
காப்பாற்றிய மக்களுக்கு கைமாறு
எங்களை அரவணைச்ச தமிழ் மக்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சேன். பண உதவி செய்ய என்கிட்ட வலு இல்லை. அதனால, ரத்த தானம், கண் தானம் பற்றி பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சேன். நான் தனி ஆளாகப் போய் பேசியபோது பெரியவங்க யாரும் என் பேச்சை நின்னுகூட கேட்கல. அப்புறம்தான், பள்ளிகளில் 10-லிருந்து 12-ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் மத்தியில் பிரச்சாரத்தை தொடங்கினேன்.
அந்தப் புள்ளைங்க ரத்த தானம் செய்ய முடியாது. ஆனா, அதோட முக்கியத்துவத்தை அவங்க மனசுல விதைச்சா, அவங்க பல பேரை தானம் குடுக்க வைப்பாங்கன்னு நம்புனேன். அதுல வெற்றியும் கிடைச்சுது.
மதுக்கடையிலும் பிரச்சாரம்
நான் இலங்கை அகதிங்கிறதால பள்ளிக்கூடங்கள்ல விழிப்புணர்வு பிரச்சாரம் பண்ண அதிகாரிகள் ஒப்புக்கல. மூணு மாசம் அலைஞ்சு சென்னையில் மறுவாழ்வுத் துறை அதிகாரிகளிடம் அனுமதிக் கடிதம் வாங்கி வந்து கொடுத்து பிரச்சாரத்தை தொடர்ந்தேன். ஆரம்பத்துல டெய்லர் கடையில வேலை பார்த்தேன். நடுவுல 2 மணி நேரம் பர்மிஷன் வாங்கிட்டுப் போய் பள்ளிக் குழந்தைகள்ட்ட பேசிட்டு வருவேன். என் பணத் தேவைக்காக டீத்தூள் வியாபாரம் பண்ணேன், கீரை விற்றேன், ஒயின் ஷாப்புலகூட வேலை பார்த்தேன். ஒயின் ஷாப்புக்கு வர்றவங்களிடம் மதுவின் தீமை, ரத்த தானம் குறித்து பேசினதால, அந்த வேலையில நிலைக்க முடியல. இப்ப, கொசு வலை, ஃப்ளோர் மேட் போடும் வேலை செய்கிறேன். எங்கள் முகாமைச் சேர்ந்த 7 பேர் உள்பட இதுவரை மொத்தம் 14 பேரை கண் தானம் செய்ய வச்சிருக்கேன். 45 பேரை வழக்கமாக ரத்த தானம் செய்யும் குருதிக் கொடையாளரா மாத்தியிருக்கேன்.
ரத்த தானம் செய்யும் 265 பேர் பட்டியல் என் செல்போனில் இருக்கிறது. அவர்களது எண்ணை அழுத்தினாலே அவர்களது ரத்த வகை தெரியுமாறு பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
தமிழகம் முழுவதும் 117 அகதி முகாம்கள் இருக்கு. முகாமுக்கு 5 பேரையாவது குருதிக் கொடையாளரா மாத்தணும்கிறது என் ஆசை, கனவு. ‘ஈழம் ரத்ததான கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கும் திட்டமும் இருக்கு. ஒருவருக்கு ரத்தம் தேவை என்றால், தானம் கொடுக்க 10 பேர் பறந்தோடி வரணும். அந்த நிலையை உருவாக்குவதுதான் லட்சியம் என்று நெகிழவைத்தார் ஜீவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT