Published : 12 Oct 2015 01:29 PM
Last Updated : 12 Oct 2015 01:29 PM

எந்த சார்பும் இல்லாமல் நடுநிலையான செய்திகளை நாளிதழ்கள் வழங்க வேண்டும்: பேராசிரியர் அப்துல் காதர் வேண்டுகோள்

எந்த சார்பும் இல்லாமல் நடுநிலையான செய்திகளை நாளிதழ்கள் வழங்க வேண்டும் என பேராசிரியர் அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் 2-ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாகர்கோவில், கும்பகோணம், மதுரை ஆகிய நகரங்களில் வாசகர் திருவிழா நடை பெற்றது. இதன் தொடர்ச்சியாக வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங் களுக்கான ‘தி இந்து’ வாசகர் திருவிழா, திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

விழாவில், பேராசிரியர் அப்துல் காதர், திரைப்பட இயக்குநர் ஜனநாதன், எஸ்கேபி கல்விக் குழுமத் தலைவர் கு.கருணாநிதி, எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுப் பேசினர். முன்னதாக, பாகேஸ்வரி, பாலகணேசன் ஆகியோரின் நாதஸ்வர இசை கச்சேரி நடந்தது.

விழாவில், பேராசிரியர் அப்துல் காதர் பேசியதாவது:

‘தி இந்து’ நாளிதழ் வாசகர் திருவிழாவை ஊர் ஊராக வலம் வந்து நடத்துகிறார்கள். இப்போதுதான் வலம் வரும் ஊருக்கு வந்துள்ளார்கள். நடிகர்கள் ஹெலிகாப்டர் போல ஒரே படத்தில் செங்குத்தாக உச்சத்துக்கு போய்விடுவார்கள். அதன் பிறகு அவர்களை நிலைநிறுத்துவது ஹெலிகாப்டர் விசிறி போன்ற ரசிகர்கள்தான். அதேபோன்று, நல்ல நாளிதழுக்கு வாசகர்கள்தான் விசிறிகள். அவர்கள்தான் நாளிதழை உச்சத்தில் நிலைநிறுத்த வேண்டும்.

கால்டுவெல் எழுதிய ‘திராவிட ஒப்பிலக்கணம்’ என்ற நூல் முன்னுரையில், அகிலத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கலாம். ஆனால் வாழ்த்துவதற்கு உரியது வண்ணத் தமிழ் ஒன்றுதான் என தெரிவித்துள்ளார். அதேபோல வாழ்த்து வதற்கு உரிய சிறப்பு பெற்ற ‘தி இந்து’ தமிழ் குழந்தையை வாழ்த்துகிறேன்.

‘நறுமண இதழ் பெண்ணே உன் நலம் காணார் ஞாலம் காணார்’என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்கிறார். பூவின் மொழியே வாசம்தான். நாளிதழ் என்ற பூவுக்கு வாசகர்கள் வாசம். அந்த வாசகர் பலம் மற்ற பத்திரிகைக்கு இருப்பதைவிட இந்து பத்திரிகைக்கு மிக அதிகமாக இருக்கிறது. உயிர் வாழ்க்கை என்பது நடுநிலை சார்ந்து தான் இருக்கிறது. நாளிதழ்கள் எந்த சார்பும் இல்லாமல் செய்திகளை நடுநிலையோடு வழங்க வேண்டும்.

நிலா ஒளியோடு வரும்போது லட்சக்கணக்கான நட்சத்திரங்களையும் கொண்டு வருவதைப் போல ‘தி இந்து’ செய்தித்தாள் வெளிவருகிறது. வாசகர்கள் நட்சத்திரங்களைப் போல ஒளிபெற்று வருகிறார்கள் என்றார்.

விழாவை ‘தி இந்து’ குழுமத்தின் மூத்த பொது மேலாளர் (நிர்வாகம்) வி.பாலசுப்பிர மணியன் தொகுத்து வழங்கினார். மண்டல மேலாளர் (விற்பனை) ராம் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வை ஹார்லிக்ஸ் ஓட்ஸ், ராம் ப்ராபெர்டீஸ், லலிதா ஜூவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், வர்த்தமானன் பதிப்பகம், எஸ்கேபி பொறியியல் கல்லூரி, ஹோட்டல் அருணாச்சலா இணைந்து வழங்கின.

ஆசிரியை மகாலட்சுமி: ஜமுனாமரத்தூர் உண்டு உறைவிடப் பள்ளியின் பிரச்சினை குறித்து ‘உங்கள் குரல்’ பகுதியில் பதிவு செய்தேன். ‘தி இந்து’ செய்தியால் அரசு அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். ‘தி இந்து’ நாளிதழை இளைஞர்கள் தொடர்ந்து 4 ஆண்டுகள் படித்தால் போட்டித் தேர்வுகளில் நிச்சயம் வெற்றிபெற்று நல்ல வேலையில் அமரலாம்.

ஏ.சி.வெங்கடேசன்: ‘தி இந்து’வில் வெளியான நதிகள் கட்டுரை பாதுகாக்க வேண்டிய ஒன்று. பாலாறு குறித்த கட்டுரை, பிரச்சினைக்கு தீர்வை விளக்காமல் சுருக்கமாக முடிந்துவிட்டது. வடபெண்ணை நதி குறித்தும் எழுத வேண்டும்.

வீரபத்திரன்: கட்டுரையில் இருக்கும் தகவல்களைக் காட்டிலும் தலையங்கத்தில் இன்னமும் ஆழமான தகவல்கள் கொடுக்க வேண்டும். ஃபிரன்ட்லைன் ஆங்கில மாத இதழ் கட்டுரைகளை தமிழில் வெளியிட வேண்டும்.

கி.ப.ராமலிங்கம்: நான் சிறு வயதாக இருந்தபோது படித்த கலைமகள், மஞ்சரி போன்ற மிக தரமான பத்திரிகைகளை, இப்போது நாளிதழ் வடிவத்தில் செய்திகளாக படிப்பது போன்ற மகிழ்ச்சியை ‘தி இந்து’ ஏற்படுத்துகிறது.

ஆசிரியர் அண்ணாதுரை: எனது பள்ளிக்கு தினமும் ‘தி இந்து’ நாளிதழை வாங்கிச் செல்கிறேன். குக்கிராமத்தில் பிறந்த நான் தமிழில் ‘தி இந்து’ நாளிதழ் வருமா? என ஏங்கினேன். அது நிறைவேறிவிட்டது.

சரவணன்: ‘தி இந்து’-வின் இரண்டாம் ஆண்டு வாசகர் திருவிழாவில் கலந்து கொள் வதில் மகிழ்ச்சி. (ஆன்மிகம் முதல் அஞ்சரைப் பெட்டி வரை வரலாற்று தகவலோடு வரும் செய்தி குறித்து கவிதையை வாசித்தார்.)

குப்புலிங்கம்: எங்கள் பகுதியில் நிலவும் குறைகள் குறித்து ‘உங்கள் குரல்’ பகுதியில் சுட்டிக்காட்டினேன். பல குறைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைத்தது பெருமையாக இருக்கிறது.

நிலவளம் கதிரவன்: ‘தி இந்து’ செய்தியால் கூட்டுறவு பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. நாட்டார் வழக்காற்றியல், உளவியல் குறித்த கட்டுரைகளை வெளியிட வேண்டும்.

செல்வராஜ்: சில தமிழ் வார்த்தைகளை எளிமைப்படுத்தி கொடுத்தால் இன்றைய இளைஞர்கள் படிக்க ஏதுவாக இருக்கும்.

தட்சிணாமூர்த்தி: ஈழத் தமிழர் குறித்த கட்டுரைகள், செய்திகள் அதிகமாக வெளியிட வேண்டும். அறிவியல் தொடர்பான கேள்வி பதில் பகுதி வெளியிடலாம்.

படங்கள்: விஎம்.மணிநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x