Last Updated : 01 Sep, 2015 05:30 PM

 

Published : 01 Sep 2015 05:30 PM
Last Updated : 01 Sep 2015 05:30 PM

ரூ.1 லட்சம் கோடியை விழுங்கும் புகை- இந்தியாவின் மெத்தனம் ஏன்?

பீடி, சிகரெட்டுகளின் மீது செலவழிக்கப்படாத பணம், பொருளாதாரத்தில் இருந்து எங்கேயும் மறைந்துவிடாது.

மத்திய அரசு, பெருகி வரும் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய விதிகளை ஏற்படுத்த எண்ணியது.

புகைப் பிடிப்பதற்கான வயது வரம்பை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்துவது, சிகரெட் விற்பனையில் 70 சதவீத இடத்தைப் பிடித்திருக்கும் சில்லறை சிகரெட் விற்பனையைத் தடை செய்வது ஆகிய யோசனைகளை உள்ளிடக்கி, கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது.

மக்களும் ஆர்வத்துடன் பதிலளித்தனர், கிட்டத்தட்ட 45 ஆயிரம் இ-மெயில்களும், 10 ஆயிரம் கடிதங்களும் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு வந்து குவிந்தன. இன்னும் அரசு அவற்றை முழுமையாகப் படிக்காததால் மக்களின் கருத்துகள் வெளியிடப்படவில்லை என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய புகையிலைத் தொடர்பான நோய் குறித்த 2015-ன் ஆண்டின் அறிக்கை, இந்தியாவில் பெரிய அளவில் புறக்கணிக்கப் பட்டுள்ளது. ''புகையிலை வரியை அதிகப்படுத்துவதன் மூலம் புகைப்பிடித்தலைக் கட்டுப்படுத்தலாம்'' என்ற ஒற்றை வரிச் செய்தி அதில் தரப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இரண்டு முக்கியக் காரணங்களுக்காக புகை பிடித்தலைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது

1. ஒவ்வொரு வருடமும் புகை பிடித்தல் தொடர்பான நோய்களால், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறக்கின்றனர். மக்கள் அதிக அளவில் இறப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடிய முதல் மூன்று வழிகளில் இதுவும் ஒன்று.

2. புகையிலை விற்பனை அரசுக்கு பணத்தை ஈட்டிக்கொடுப்பதைக் காட்டிலும், பொது மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, கடைசியில் அவர்களையும் அழிக்கிறது.

35 வயது முதல் 69 வயது இந்தியர்கள் 2011-ம் ஆண்டில் மட்டும் புகையிலை தொடர்பான கேன்சர், சுவாச நோய்கள், காச மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு, சுமார் ரூ.104,500 கோடிகளை மருத்துவத்துக்காக மட்டுமே செலவழித்திருக்கின்றனர். இத்தொகை, அதே வருடத்தில் அனைத்து புகையிலை பொருட்களிலிருந்து வசூலான மொத்த சுங்க வரித் தொகையைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகம் என்கிறது இந்திய அரசு மற்றும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளை.

புகையிலால் ஏற்படும் உடல்நலக் குறைவால் ஏற்படும் செலவினத் தொகை, ஒட்டுமொத்த மாநில மற்றும் மத்திய அரசுகளின் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகையில் 12 சதவீதம் என்கிறது அரசு.

உலக சுகாதார அமைப்பின் இந்தியப் பிரதிநிதியான அருண் தபா, "வரிகளை அதிகப்படுத்துவது என்பது இருதரப்புக்கும் சாதகமாக அமையும்; தனி மனிதனின் உடல் நலத்தையும், நாட்டின் நிதி நலத்தையும் இது பாதுகாக்கும்" என்கிறார்.

கடந்த 19 வருடங்களில் இந்தியாவில், சிகரெட்டின் மீதான வரி 1,606 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் இது மட்டுமே போதாது. சிகரெட்டின் நீளம் மற்றும் ஃபில்டர்களைப் பொருத்து நிர்ணயிக்கப்படும் ஆறடுக்கு வரி அமைப்பு கடினமாக இருப்பதால், புகையிலை நிறுவனங்கள் சிகரெட்டை எளிதாகக் கையாளும் வகையில் தேவையை அதிகரித்து விற்கின்றன.

சிகரெட்டின் மீதான வரிகள் அதிகப்படுத்தப்படுவது மட்டுமே போதாது. பீடிக்களும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கை வகிக்கின்றன. அதே சமயம் வரியை அதிகரிக்கும்போது, விலையும் அதிகரிக்கும். மக்கள் வாங்கும் எண்ணிக்கை குறைந்து, தேவையும் குறையும். புகையிலை தொடர்பான நோய்களும் மட்டுப்படுத்தப்படும்.

புகையிலையைத் தடை செய்வதில் உள்ள முக்கியப்பிரச்சனை, எளிதாகக் கிடைக்கவல்ல, அதிக அபாயத்தை ஏற்படுத்தும் சிகரெட்டின் நண்பன் பீடிதான்.

சிகரெட் மீதான வரி, விற்பனை விலையில் 60 சதவீதமாக இருக்க, இன்னும் பீடியின் மீதான வரி, வெறும் 7 சதவீதமாக இருக்கிறது. உலகளாவிய அளவில் வயது வந்தோரிடம் எடுத்த புகையிலை மீதான ஆய்வுப்படி, உலகத்தின் 120 மில்லியன் புகை பிடிப்பவர்களில் 61 சதவீதம் பேர், பீடி பிடிப்பவர்கள். அதே நேரம், வேறு சில ஆய்வுகள் பீடி பிடிப்பவர்களின் தொகை 73 சதவீதம், அதிகபட்சமாக 85 சதவீதம் என்றும் தெரிவிக்கின்றன.

நீண்ட நாட்களாக பீடி பிடிப்பவர்களுக்கு, மற்ற நோய்களை விட 'நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்' ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கிறது. ஏனெனில் பீடிகளில்தான் புகையிலை அதிகளவில் அடைக்கப்படுகிறது. புகை பிடிப்பவர்கள், அதைக் கடுமையாக உள்ளிழுக்க வேண்டியிருக்கிறது.

ஆனாலும் பீடித்தொழிலுக்கே, அரசிடம் இருந்து அதிகப்படியான சலுகைகள் தொடர்ந்து கிடைக்கிறது.

கைத்தொழில் மூலம் உருவாக்கப்படும் பீடிகளில் (98 சதவீத பீடிகள் கையால் செய்யப்படுபவையே) இருபது லட்சத்துக்கும் குறைவானவைகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பீடி தயாரிப்பாளர்கள் கையால் செய்யப்பட்ட ஒவ்வொரு பீடிகளுக்கும் 1.6 பைசாவும், இயந்திரங்களால் தயாரிக்கப்பட்டவைக்கும் 2.8 பைசாவும் வரி செலுத்துகின்றனர். இது சிகரெட்டைப் பொறுத்தவரைக்கும் முறையே 1.28 ரூபாய் மற்றும் 3.37 ரூபாய்களாகவும் இருக்கிறது.

இந்தியா முழுக்கவும், கிட்டத்தட்ட 80 லட்சம் மக்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர் என்கிறார் அகில இந்திய பீடி தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதி. இந்த அமைப்பின் செயலாளர் சுதிர் இது குறித்து பேசும்போது,

"பீடி மீதான வரிகளை அதிகப்படுத்தியும், எச்சரிக்கைப் படங்களை அச்சிட்டும், பீடி மீதான தேவையைக் குறைக்கலாம். அதே நேரத்தில், பீடிக்கான தேவை குறையும்போது, பீடி சுற்றும் மக்களின் வேலை பறி போகும் அபாயம் ஏற்படும்; புகையிலையைப் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும்; ஆயிரக்கணக்கான பெட்டிக்கடைகளும் சேர்ந்து பாதிக்கப்படும்.

பீடியின் மீதான வரிகள் அதிகமாகும் போது, அவற்றுக்கான கள்ளச்சந்தைகள் தோன்றும். சட்டவிரோதமான முறையில் பீடி விற்பனை நடந்து, மத்திய மாநில அரசுகளுக்கு வரி இழப்பு ஏற்படும்" என்றார்.

ஆனால் இத்தகைய பேச்சுக்கே அர்த்தம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

2013-ம் ஆண்டு, இந்திய அரசின் மொத்த புகையிலைப் பொருட்களின் சுங்கவரித் தொகையில், பீடித்தொழிலின் மூலம் மூன்று சதவீதத்துக்கும் குறைவான தொகையே கிடைத்திருக்கிறது.

இந்திய பொது சுகாதாரத் துறையின் புகையிலைப் பிரிவுக் கட்டுப்பாட்டு அதிகாரி மோனிகா, "பீடிக்கான வரியை இரட்டை மடங்காக்கும்போது, பீடி பிடிப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாகக் குறையும், வரி வருவாய் 22 சதவீதம் உயரும்" என்கிறார்.

வரிகள் அதிகமாக இருப்பதால், நாட்டின் வருமானம் குறைந்துவிடாது. நல்ல பொருட்களை வாங்குவதன் மூலம் சங்கிலியமைப்பு தொடரும்.

"பீடி, சிகரெட்டுகளின் மீது செலவழிக்கப்படாத பணம், பொருளாதாரத்தில் இருந்து எங்கேயும் மறைந்துவிடாது. மற்ற அத்தியாவசியமான பொருட்களின் மீதே செலவிடப்படும். அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை, பீடித் தொழிலாளர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்குப் பயன்படுத்தலாம்" என்கிறார் டொரோண்டோ பல்கலைக்கழக, சுகாதாரத்துறை ஆய்வுக்கழக இயக்குநர் பிரபாத் ஜா.

சிகரெட் மீதான அரசின் கட்டுப்பாடு, புகையிலையைப் பயிரிடும் விவசாயிகளை, மாற்றுப் பயிர்கள் மீது கவனம் செலுத்த வைக்கும். ஆகவே ஏன் புகையிலை சார்ந்த அத்தனைப் பொருட்களிலும் வரி விதிக்கக்கூடாது? படிப்படியாக பீடித் தொழிலாளர்களை, வேறு தொழில் நோக்கி நகர்த்தக்கூடாது?

தமிழில்: க.சே. ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x