Published : 28 Sep 2015 03:00 PM
Last Updated : 28 Sep 2015 03:00 PM

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மக்களின் உரிமைகள், கடமைகளை ‘தி இந்து’ தமிழ் எடுத்துச்சொல்ல வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து வேண்டுகோள்

‘தி இந்து’ 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தருணத்தில் இனியதொரு கொண்டாட்டமாக நாகர்கோவிலில் நடைபெற்றதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கான ‘தி இந்து’ வாசகர் திருவிழா கும்பகோணத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

கும்பகோணம் லட்சுமி விலாஸ் சாலையில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் டாக்டர் அன்னிபெசன்ட் கலையரங்கில் நடைபெற்ற விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி, கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், ஆடிட்டர் டி.எஸ்.வெங்கடசுப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று உரையாற்றினர்.

விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து பேசியதாவது:

இன்றைக்கு இந்திய ஆட்சிப் பணிக்கு வரும் இளைஞர்களிடம், பொது அறிவு, விஞ்ஞான அறிவு, சமூக அறிவுத் தேர்வில் வெற்றிபெற எதைப் படித்தீர்கள் எனக்கேட்டால், 90 சதவீதம் பேர் சொல்லும் பதில், தினமும் ‘தி இந்து’ தமிழ் படித்தேன் என்பதுதான்.

1947-ல் சுதந்திரம் அடைந்தபிறகு, நமக்கான சட்டத்தை இயற்றிக்கொள்ள 3 ஆண்டுகாலம் நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் சிரமப்பட்டனர் என்பதை இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுக்கத் தவறிவிட்டோம். நாட்டில் வாக்குரிமை எதற்காக வழங்கப்பட்டுள்ளது என்பதைக் கூட தெரியாமல், வாக்குகளை விற்றுக்கொண்டிருக்கிறோம்.

இலக்கியம், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் ‘தி இந்து’ தமிழ் நல்லபடியாக பணியாற்றுகிறது. அரசாங்கம் செய்யத் தவறிய ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மக்களின் உரிமைகள், கடமைகளை மக்களுக்கு ‘தி இந்து’ தமிழ் எடுத்துச்சொல்ல வேண்டும். இதற்காக ஒவ்வொரு வாரமும் சிறப்பு பகுதி வெளியிட வேண்டும். அத்துடன் சுதந்திரப் போராட்ட வரலாறு, தலைவர்களின் அரும்பணி, நாட்டின் வளர்ச்சி குறித்தும் செய்திகளை வெளியிட்டால் அது இளைஞர்களை உத்வேகப்படுத்தும். நல்வழிப்படுத்தும்.

மக்களின் உரிமைகள் தொடர்பான செய்திகளை அதிகளவில் வெளியிட்டு, அவர்களிடம் அதுபற்றிய விழிப்புணர்வை கொண்டு சேர்க்க வேண்டும்.

ஒருவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை என்றால் அதற்கு வறுமை, படிப்பறிவின்மை, பயம், உதவியின்மை என பல காரணங்கள் இருக்கும். ஆகவே, நீதிமன்றத்துக்கு வந்தவர்களுக்குத்தான் நீதி வழங்குவோம் என்றால், அது நீதித்துறையின் மாண்பு ஆகாது. காலம் கனிந்துவிட்டது. ஏழைகளுக்கான நீதியை, அவர்கள் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவார்கள் என காத்திருக்காமல், அவர்களின் குடிசைக்கே சென்று தங்கத்தட்டில் வைத்து நீதியை அளிக்கும் காலம் வந்துவிட்டது.

முன்னோர்கள் சொன்ன கதைகள், பாட்டி சொன்ன கதைகள், நீதிபோதனைக் கதைகள், அறிஞர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ‘தி இந்து’வில் வெளியிட்டு, தற்போதுள்ள இளைஞர்கள், சிறுவர்களிடம் அதனைக் கொண்டுசேர்க்க வேண்டும். அது அவர்களின் ஒற்றுமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சியை மேம்படுத்தும் என்றார் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து.

விழாவில், தி இந்து வெளியீடுகளான 2 நூல்கள் வெளியிடப்பட்டன. பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘இந்தியாவும் உலகமும்’என்ற நூலை எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் வெளியிட, முதல் பிரதியை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து பெற்றுக்கொண்டார். ஜி.எஸ்.எஸ். எழுதிய ‘ஆங்கிலம் அறிவோமே’என்ற நூலை ஆடிட்டர் டி.எஸ்.வெங்கடசுப்பன் வெளியிட, முதல் பிரதியை எழுத்தாளர் சா.கந்தசாமி பெற்றுக்கொண்டார்.

‘தி இந்து’வுடன் இந்நிகழ்வை ஹார்லிக்ஸ் ஓட்ஸ், ஸ்ரீராம் ப்ராபெர்டீஸ், லலிதா ஜூவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், ஹோட்டல் கிரீன் பார்க், நடைவண்டி பயிற்சி மையம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

விழாவுக்கு வந்திருந்த வாசகர்கள் ‘தி இந்து’ குழும வெளியீடுகளை எளிதில் வாங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாசகர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் பங்கேற்ற வாசகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

குடும்ப விழாவைப் போல பெண்கள், குழந்தைகளுடன் பங்கேற்ற வாசகர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x