Published : 16 Sep 2015 10:05 AM
Last Updated : 16 Sep 2015 10:05 AM

அன்பு வாசக நெஞ்சங்களே!

நமது பந்தம் உருவாகி, முத்தான மூன்றாம் ஆண்டு தொடக்கம் இன்று!

எதிலுமே முதல் ஆண்டைத் தேனிலவு என்று சொல்லலாம். குறைகள் இருந்தாலும் பொறுத்துப் போகும் மோகம் இருக்கும் அப்போது. இரண்டாம் ஆண்டுதான் யாருக்குமே நிஜமான சோதனைக் காலம். கொடுத்த வாக்குறுதியில் நிலைத்திருக்க முடிகிறதா? கொண்ட கொள்கையில் மேலும் உறுதி சேர்க்க முடிகிறதா என்றெல்லாம் கவனமாகப் பார்க்கப்படும் காலம் இரண்டாம் ஆண்டு. அந்த வகையில், ‘தி இந்து’ தமிழ் உங்களுக்கு எத்தகைய நிறைவை ஏற்படுத்தியது என்பதற்கு கடந்த சில நாட்களாக எங்கள் அலுவலகம் வந்துகொண்டிருக்கும் எண்ணற்ற வாழ்த்துக் கடிதங்களும் மின்னஞ்சல்களும் தொலைபேசி அழைப்புகளுமே சான்று!

‘தி இந்து’ தமிழில் பிறந்த முதல் நாளே நாங்கள் அளித்த முக்கியமான உறுதிமொழி ‘குடும்பம் முழுமைக்குமான நாளிதழாக இது இருக்கும்’ என்பது. அதனாலேயே, குழந்தைகளின் உள்ளத்தைச் சலனப்படுத்திக் கெடுக்கக் கூடிய, அவநம்பிக்கைக்கு அடிபோடக் கூடிய செய்திகள் அனைத்தையும் கவனமாகத் தவிர்த்தோம்... தவிர்க்கிறோம்.

தனி மனித அந்தரங்கத்தில் தலையிடும் வகையிலான செய்திகளையும்தான். உள்ளூரில் இருந்து உலகளாவிய செய்திகள் வரையில் எதைத் தரும்போதும், ‘இது அறிவும் ஆற்றலும் மிக்கவர்களுக்கான உலகம்; மனிதநேயம் மேலோங்கி நிற்பவர்களின் உலகம்’ என்பதை வலியுறுத்திக்கொண்டே வரும் எங்கள் அணுகுமுறைதான், நாளுக்கு நாள் உங்கள் ஆதரவு பெருகிக்கொண்டே வருவதன் முக்கியக் காரணம் என்பதை நாங்கள் நன்கறிவோம்.

வாசகர்கள் ஒவ்வொருவரின் ரசனைக்கும் தேவைக்குமாக - வாரம் முழுவதும் வெளியாகும் 9 இணைப்பு இதழ்களின் கட்டுரைகளை வடிவமைக்கும்போதும்கூட, உங்கள் குடும்பத்தின் ஓர் அங்கத்தினரைப் போலவே பொறுப்போடு சிந்தித்துச் செயல்படுகிறோம்.

தட்டிக்கொடுக்கும் அதேசமயம், சறுக்கல்கள் எங்கேனும் தென்பட்டால், உரிமை கலந்த உறவோடு அதைச் சுட்டிக்காட்டி - குட்டு வைத்துத் திருத்துவதும் நீங்கள்தான். இதற்காகவே இயங்கும் எமது ‘உங்கள் குரல்’ செல்பேசி சேவை வழியே எத்தனையோ புதிய எண்ணங்களுக்கும் செய்திகளுக்கும் நீங்கள் அச்சாரம் போட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். துல்லியமாகச் சொல்வதானால், செப்டம்பர் 15-ம் தேதி (நேற்று) மாலை வரை பதிவாகியுள்ள ‘உங்கள் குரல்’ அழைப்புகளின் எண்ணிக்கை - 1 லட்சத்து 41 ஆயிரத்து 380. இந்தப் பதிவுகளின் மூலம் தகவல் கிடைக்கப் பெற்று, கடந்த ஓராண்டில் எங்கள் செய்தியாளர்கள் எழுதிய சிறப்புச் செய்திகள் மற்றும் கட்டுரைகளின் பட்டியலைப் பார்த்தாலே எவருக்கும் புரியும் - இது வெறும் புகழ்ச்சி இல்லை என்று!

நாளிதழ் கலாச்சாரம் என்பதற்குப் புத்தம் புது அர்த்தம் கொடுக்கும் வகையில், நடுப்பக்கங்களிலும், மற்ற சில பக்கங்களிலும் தொடர்ந்து வெளியாகும் தொடர்கள் பலதும் உங்கள் யோசனையின்பால் உதித்தவையே. குறிப்பாக, மதுவிலக்குக்கு எதிராக மாநிலமே கொதிக்கத் தொடங்கியபோது, ‘மெல்லத் தமிழன் இனி’ தொடரின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கச் சொல்லிக் குரல் கொடுத்தீர்கள். முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கோணத்தில் அலசச் சொல்லி முத்து முத்தான எண்ணங்களை எடுத்துக் கொடுத்ததும் நீங்கள்தான். இரண்டாம் பாகம் வெளியாகத் தொடங்கியதும், எமது இணையதளம் வழியே, அன்றாடம் பல நூறு வாசகர்கள் உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்த கருத்துகளின் வாயிலாக அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு வலுவான கோணம் கிடைத்த உத்வேகத்தை என்னவென்று சொல்ல!

பூமித் தாயின் தாய்ப்பாலாகப் பொங்கிப் பாய்ந்த நதிகளின் இன்றைய அவலநிலை குறித்து ஒரு கட்டுரையை நாங்கள் வெளியிட... ‘போதாது இந்த விழிப்புணர்வு! தமிழகத்தின் வளத்துக்கும் பெருமைக்கும் காரணமான அத்தனை நதிகளின் நிலவரம் பற்றியும் தொடர் கட்டுரைகள் தேவை’ என்று வலியுறுத்தி, எங்கள் செய்தியாளர்களை புதிய புனித வேள்விக்குள் இறக்கிவிட்ட பெருமையும் வாசகர்களையே சேரும். எல்லாவற்றையும்விட முக்கியமானது, ‘தி இந்து’வில் வரும் முக்கியமான கட்டுரைகள், தொடர்களைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்று நீங்கள் தெரிவித்த யோசனை. ஒரு புதிய பதிப்பகத்துக்கே அடிக்கல் நாட்டிவிட்டீர்களே!

உள்ளூர் தமிழர்களோடு உலகத் தமிழ் வாசகர்களுக்கும் நன்றி சொல்லும் நேரமிது. எமது இணையதளத்தை அதிவேகமாக முன்னணிக்குக் கொண்டுவந்ததோடு... வீடியோ தயாரிப்புகளை, ‘யு டியூப்’ வழியே ஒரு கோடிக்கும் மேலான தடவை பார்த்து ரசித்ததன் மூலம், தமிழ் ஊடகத் தளத்தில் ‘தி இந்து’வைத் தனிப்பெரும் சாதனைக்கு உரித்தாக்கி உள்ளீர்கள். ‘தி இந்து’ தமிழின் அதிகாரபூர்வமான ‘முகநூல்’ பக்கத்தை 14 லட்சம் லைக்குகள் தாண்டச் செய்திருக்கிறீர்கள், மிகக் குறுகிய காலத்தில்!

மொத்தத்தில், வாசகர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இல்லாமல், பங்கேற்பாளராகவும் இருக்க வேண்டும் என்ற எங்களின் விருப்பத்தை அபாரமாக நிறைவேற்றிக் காட்டிவிட்டீர்கள். அந்த நெகிழ்ச்சியையும் நன்றியையும் நேரில் வந்து தெரிவிக்கும் வாய்ப்பாக, மீண்டும் அமைக்கிறோம் ‘வாசகர் திருவிழா’ மேடையை!

ஆம், அன்பு வாசகர்களே... ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு, எங்கள் ஆசிரியர் குழுவினர் மீண்டும் உங்கள் முன் நேரில் வந்து நிற்கப்போகிறார்கள்.

தமிழகத்தின் தென்கோடியாம் குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலில் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது ‘வாசகர் திருவிழா’. அடுத்தடுத்து வரும் ஞாயிறுகளில், தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களில் நாம் இந்தக் குடும்ப விழாவில் சந்தித்து மகிழ்வோம். அதுகுறித்த விவரங்கள் உங்கள் ஊர் பதிப்பில் விழாத் தேதியையொட்டி வெளியாகும்.

தொடரட்டும் நமது அன்பான பந்தம். கடந்து வந்த பயணத்தைச் சுகமாக அசை போட்டபடியே, சிகரங்களை நோக்கி நடை போடுவோம் திடமாக!

என்றென்றும் வேண்டும் உங்கள் ஆதரவு. எப்போதும் தமிழால் இணைந்திருப்போம்!

- கே. அசோகன்,

ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x