Published : 07 May 2014 09:56 AM
Last Updated : 07 May 2014 09:56 AM

‘வசூல் மேளா’வாக மாறும் மொய் விருந்து வைபவங்கள்: கடனாளியாகும் குடும்பங்கள்

தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இது மொய் விருந்து சீசன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த மொய்விருந்து வைபவங்கள் இப்போது, ஒன்றுக்கு இரண்டாய் வசூலிக்கும் ‘வசூல் மேளா’வாக மாறிவிட்டது.

குறிப்பிட்ட சாதியில் மட்டுமே இருந்து வந்த இந்த மொய் விருந்து கலாச்சாரம் இப்போது பல சாதிகளுக்கும் பரவிவிட்டது. மற்றவர்களுக்கு செய்த மொய் பணத்தை வட்டியும் முதலுமாய் வசூலிப்பதற்காகவே இப்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொய் விருந்து வைக்கிறார்கள்.

ஃபிளக்ஸ் போர்டு, பத்திரிகை

ஃபிளக்ஸ் போர்டு வைத்து, பத்திரிகை கொடுத்து மொய் விருந்துக்கு அழைக்கிறார்கள். அழைப்பிதழின் அடியில், ‘என்னால் சிலபேருக்கு இரண்டு மூன்று தடவைகள் மொய் செய்யப்பட் டுள்ளது. எனவே இதையே எனது நேரடி அழைப்பாக ஏற்று விருந்துண்டு மொய் செய்து விழாவை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று நினைவூட்டல் வேறு.

ஆட்கள் அனுப்பி ‘அசிங்கம்’

திருமணத்துக்கு பத்திரிகை வைத் தால்கூட போகாமல் இருந்துவிடலாம். ஆனால், மொய் விருந்து பத்திரிகையை வாங்கி வைத்துவிட்டு போகாமல் இருந்தால் அசிங்கப்பட வேண்டியிருக்கும். ஒருவர் நமக்கு ஏற்கெனவே 1000 ரூபாய் மொய் செய்திருந்தால் திருப்பி அதை இரண்டு மடங்காகச் செய்யவேண்டும். மொய் விருந்துக்கு போகாமல் இருந்துவிட்டால், நமக்காக சமைத்த சாப்பாட்டை மறுநாள் காலையில் கூலி ஆட்கள் மூலம் கொடுத் தனுப்பி மொய் பணத்தை திருப்பிக் கேட்டு அசிங்கப்படுத்திய சம்பவங்களும் ஒரு காலத்தில் நடந்ததுண்டு.

நாசூக்காக ‘அசிங்கம்’

இப்போது அதுபோல ‘தரை ரேட்டுக்கு’ அசிங்கப்படுத்தாமல் கொஞ்சம் நாசூக்காக அசிங்கப்படுத்துகிறார்கள். மொய் விருந்து முடிந்த 5-வது நாள், சம்பந்தப்பட்டவரே நேரடியாக வீட்டுக்குப் போய், ‘‘உங்களுக்கு இன்னின்ன தேதிகளில் இவ்வளவு மொய் செய்திருக்கிறேன். அதை முறையாக திருப்பிக் கொடுங்கள்’’ என்று கறாராக கேட்டு வாங்கிப் போய்விடுவார்.

தனி ஆவர்த்தனம் போதாதென்று கோஷ்டி கானம் வேறு. ஐந்தாறு பேர் சேர்ந்து மண்டபம் பிடித்தும் கூட்டாக மொய் விருந்து கொடுத்து அவரவருக்கு வர வேண்டிய வருமானத்தை தனித் தனியாக பாகம் பிரித்துக்கொள்கிறார்கள்.

‘இதில் என்ன தவறு?’

மொய் விருந்துக்கு எதிராக விமர்ச னங்கள் கிளம்பினாலும் அதை நியாயப் படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பேராவூரணி தாலுகா கல்லூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, ‘‘நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள் மொத்தமாக ரெண்டு லட்சம் மூணு லட்சத்தை பார்ப்பது கஷ்டம். அவர்கள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியைச் சிறுகச் சிறுக பலருக்கும் மொய்யாக எழுதுகிறார்கள். தங்களுக்கு மொத்தமாக ஒரு தொகை தேவைப்படும்போது மொய் விருந்து வைத்து வசூலித்துக் கொள்கிறார்கள். இதுவும் ஒருவகை சேமிப்பு. வசூலுக்காக நடத்துவதுபோலத் தெரிந்தாலும், மொய் விருந்துகள் பல குடும்பங்களில் விளக்கேற்றிக் கொண்டிருக்கிறது’’ என்றார்.

‘தேவையா இந்த அவலம்?’

இதை மறுத்துப் பேசிய பட்டுக்கோட்டை நகர மார்க்சிஸ்ட் செயலாளர் கந்தசாமி, ‘‘வீட்டில் பிள்ளைகள் இருந்தால் காதுகுத்து, சடங்கு, கல்யாணம் போன்ற திருவிழாக்கள் மூலம் மொய்ப் பணம் வசூலாகிவிடும். பிள்ளை இல்லாதவர்கள் மொய்ப் பணத்தை திரும்பப் பெறுவதற்கும் ஏழைகளுக்கு கைகொடுக்கவும்தான் ஆரம்பிக்கப்பட்டது இந்த மொய் விருந்து பழக்கம். இப்போது காரண காரியம் இல்லாமல் நடக்கிறது. ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் மொய் செய்யப்பட்டிருந்தால், அதை ரூ.20 ஆயிரமாக திருப்பித் தரும் நிலையில் அவர் இருப்பாரா? வீண் கவுரவத்துக்காக கடன் வாங்கி மொய்யை திருப்பிச் செலுத்துவார். இப்படி மொய் விருந்துக்காக கடன் வாங்கிவிட்டு பல குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. இனியும் மொய் விருந்துகள் தேவையா என்று சம்பந்தப்பட்டவர்கள்தான் யோசிக்கவேண்டும்’’ என்றார்.

சங்கமே இருக்கு!

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பாலான சாதிகளுக்கு மொய்விருந்து சங்கமே இருக்கிறது. மொய்விருந்து வைக்க நினைப்பவர்கள் இந்த சங்கத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த தேதியில் மற்றவர்கள் மொய்விருந்து வைக்காமல் இருக்க இந்தத் தகவலை சங்கமே அனைத்து ஊர்களுக்கும் தெரியப்படுத்திவிடுமாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x