Published : 11 Sep 2015 10:07 AM
Last Updated : 11 Sep 2015 10:07 AM

சொன்னது சொன்னபடி: கொசுக்கடியால் மக்கள் அவதி

கொட்டிவாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். மாதம் ஒரு முறை மட்டுமே இப்பகுதியில் கொசு மருந்து அடிக்கின்றனர். இதனால் கொசுக்கள் மீண்டும் உற்பத்தியாகிவிடுகிறது. அதனால் கொசுக்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் வாரம் ஒருமுறையாவது கொசு மருந்து அடிக்க வேண்டும்.

ஆர்.கே.திருப்பதி ரங்கன், கொட்டிவாக்கம்

நூலகத்தை மேம்படுத்த வேண்டும்

மடிப்பாக்கம் உள்ளகரம் பகுதியில் பல ஆண்டுகளாக அரசு கிராமப்புற நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. முன்பு கிராமமாக இருந்த இப்பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை இந்த நூலகம் மாநகரத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்படவில்லை. இப்பகுதியில் பள்ளிகள், பல்வேறு கல்லூரிகள் உள்ள நிலையில், இந்த நூலகத்தில் ஆங்கில நூல்கள் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், ஆங்கில வார இதழ்கள் இல்லை. இந்த நூலகத்தை மாநகர நூலகமாக மேம்படுத்தினால் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். அதனால் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனா.காஜா நஜிமுதீன், மடிப்பாக்கம்.

சாலையை சீரமைக்க கோரிக்கை

மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்குபவர்கள் மற்ற இடங்களுக்குச் செல்ல திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வந்துதான் பஸ்களை பிடிக்க வேண்டும். ரயில் நிலையத்தையும், நெடுஞ்சாலையையும் இணைக்கும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் வேகமாக சென்று ரயில்களை பிடிக்க முடிவதில்லை. அதனால் இந்த சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.சி.வெங்கடேஷ், பட்டமந்திரி.

தெருவில் தேங்கும் மழைநீர்

பெரம்பூர் திரு.வி.க.நகர், சாந்தி தெருவில் மழைக் காலங்களில் சிறிது மழை பெய்தாலும் ஒரு அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் சீருடையுடன் செல்லும் பள்ளி குழந்தைகள் அந்தச் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். வாகனங்களை ஓட்டிச் செல்வதும் சிரமமாக உள்ளது. அதனால் இப்பகுதியில் மழைநீர் உடனே வடிய மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.சந்தானம், திரு.வி.க.நகர்.

‘237’ பஸ் சேவை நிறுத்தம்

எண்ணூர்- வடபழனி இடையே ‘237’ என்ற எண் கொண்ட பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் சேவை சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால் எண்ணூரில் இருந்து வடபழனி செல்வோர், வள்ளலார்நகர் சென்று அங்கிருந்து வேறு பஸ் பிடித்து சென்று செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட எண்ணூர்- வடபழனி பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

கே.ஜெயச்சந்திரன், எண்ணூர்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு

வில்லிவாக்கம், முருகேசன் நகர் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. எனவே அதை குடிப்பதற்கு பயன்படுத்த முடியவில்லை. கேனில் அடைக்கப்பட்ட குடிநீரைத்தான் பணம் கொடுத்து வாங்கி குடிக்க வேண்டியுள்ளது.

இதனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதந்தோறும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதனால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

வாசகர், வில்லிவாக்கம்.

சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை

ஆற்காடு சாலையில் இருந்து சின்மயாநகர் செல்லும் காளியம்மன் கோயில் சாலையில் பலர் ஆக்கிரமித்து கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். அதனால் அந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, சாலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து பல மாதங்கள் ஆகின்றன. இதுவரை விரிவாக்கம் செய்யப்படவில்லை. அதை உடனே செய்ய வேண்டும்.

எஸ்.அனந்தநாராயணன், விருகம்பாக்கம்.



அன்புள்ள வாசகர்களே.. ‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x