Last Updated : 07 May, 2014 10:57 AM

 

Published : 07 May 2014 10:57 AM
Last Updated : 07 May 2014 10:57 AM

பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து கட்டாயம்: தமிழக விமான நிலையங்களில் சிறப்பு குழுக்கள் அமைப்பு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட 8 நாடு களில் இருந்து வருபவர்களால் தமிழகத்தில் போலியோ நோய் பரவாமல் இருக்க விமான நிலை யங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை ஒழிக்க இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இரு தவணைகளாக போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. சுகாதாரத் துறையின் தீவிர முயற்சியால், இந்தியா போலியோ இல்லாத நாடாக மாறியுள்ளது.

அதே சமயத்தில் பாகிஸ்தான், கேமரூன், சிரியா, ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, சோமாலியா, நைஜீரியா, கென்யா ஆகிய நாடுகளில் போலியோ பாதிப்பு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக்குழு கூட்டம் கடந்த மாதம் ஜெனிவாவில் நடைபெற்றது. அப்போது இந்த 8 நாடுகளில் இருந்து வருபவர்களால் மற்ற நாடுகளுக்கு போலியோ எளிதாக பரவ வாய்ப்புள்ளது. எனவே போலியோ பாதிப்பு இருந்த நாடுகளுக்கு தேசிய சுகாதார அவசர நிலையை பிறப்பித்தும் மற்றும் சர்வதேச சுகாதார ஒழுங்கு முறையை உடனடியாக கட்டாயம் கடைப்பிடிக்கும்படியும் கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித் துள்ளது.

வருபவர்களுக்கு கட்டாயம்

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக் குநரும், தமிழக பொது சுகாதார சங்கத்தின் தலைவருமான டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:

உலக சுகாதார நிறுவனம் தெரி வித்த சர்வதேச சுகாதார ஒழுங்கு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்கள், நாட்டின் எல்லை களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வந்தாலும், அவர்களிடம் போலியோ தடுப்பு மருந்து போட்டதற்கான சான்றிதழ் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அவர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து போட்டு, அதற்கான அடையாள சான்றிதழை கொடுக்க வேண்டும். அதன் பின்னரே அவர்களை நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும். போலியோ தடுப்பு மருந்து போட மறுத்தால், அவர்களை திருப்பி அனுப்பிவிட வேண்டும். இந்த பணியை விமான நிலைய சுகாதார அதிகாரிகள் அல்லது மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டும் என சர்வதேச சுகாதார ஒழுங்கு முறை விதிமுறைகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றார்.

செல்பவர்களுக்கும் கட்டாயம்

தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளபடி பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளில் போலியோ மருந்து போட்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்களுக்கு, போலியோ சொட்டு மருந்து போட்டு சான்றிதழ் வழங்குவதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து அந்த 8 நாடுகளுக்கு வேலை மற்றும் படிப்பு நிமித்தமாக செல்பவர்களும் போலியோ தடுப்பு மருந்து போட்டதற்கான அடையாள சான்றிதழ் வைத்திருக்க வேண் டும். அதற்காக கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், மாநகராட்சி அலு வலகத்தில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு அடையாள சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதேபோல மாவட்டங்களில் துணை சுகாதார சேவை மையங் களிலும் போலியோ தடுப்பு மருந்து போட்டு அடையாள சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x