Published : 28 Aug 2015 11:40 AM
Last Updated : 28 Aug 2015 11:40 AM
தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:
தெருவில் ஓடும் கழிவுநீர்
மடிப்பாக்கம், ராம்நகர் வடக்கு பகுதியில், ராமலிங்கம் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் மழைக் காலங்களில் ஏற்படும் அடைப்பு நீக்கப்படுவதில்லை. அதனால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி தெருவில் வழிந்தோடுகிறது. துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே கழிவுநீர் வாய்க்காலை தூர் வாரி, அடைப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர், மடிப்பாக்கம்.
*******************
பூங்காவை பராமரிக்க வேண்டும்
கொடுங்கையூர், வாசுகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு மரம் ஆகியவை உடைந்து கிடக்கின்றன. இதனால் குழந்தைகள் விளையாட முடிவதில்லை. பூங்காவில் முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் நடைபாதை பெயர்ந்த நிலையில் பழுதடைந்துள்ளது. அதனால் முதியவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பூங்காவை முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.சரவணன், கொடுங்கையூர்.
*******************
வேகத்தடை அமைக்க வேண்டும்
பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து அய்யப்பன்தாங்கலுக்கு செல்ல நூம்பல் சாலை குறுக்கு வழியாக உள்ளது. பெரும்பாலானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருவதால், இச்சாலையில், அதிக போக்குவரத்து இருந்து வருகிறது. அச்சாலைகளை ஒட்டி வசிக்கும் குடியிருப்புவாசிகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே நூம்பல் சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும்.
வி.ராமாராவ், அய்யப்பந்தாங்கல்.
*******************
பழுதான சாலையால் அவதி
ராமாபுரம், அன்னை சத்யா நகரில் உள்ள சாலைகளில் குடிநீர், கழிவுநீர் குழாய்களை பதிப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் பள்ளங்களைத் தோண்டியிருந்தது. தற்போது குழாய்கள் பதிக்கப்பட்டு பள்ளங்களை முறையாக மூடாததால், அப்பகுதியிலுள்ள தெருக்கள் மேடு, பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. மழைக் காலங்களில் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர். அதனால் அப்பகுதியிலுள்ள சாலைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை வேண்டும்.
எம்.லதா, ராமாபுரம்.
*******************
அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை
திருமுல்லைவாயல், விவேகானந்தர் நகர், சூரியகாந்தி தெருவில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் வெளியேற்றும் வசதி ஆகியவை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மழை காலங்களில் தெருவில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. அதனால் இப்பகுதி வாழ் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே இப்பகுதிக்கு அரசு சார்பில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
எம்.சிவநேசன், திருமுல்லைவாயல்.
*******************
தார் சாலையாக மாற்ற வேண்டும்
ஆவடி, ஜெ.பி.எஸ்டேட், சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மண் சாலைகளாக உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் வெளியேறும் வசதிகளை ஆவடி நகராட்சி ஏற்படுத்தித் தராததால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. அதனால் இப்பகுதியில் கழிவுநீர் வெளியேற கால்வாய் அமைக்க வேண்டும். மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும்.
டி.மரகதவேல், ஆவடி.
*******************
ரயில் நிலையத்துக்கு படிக்கட்டு வசதி
பட்டாபிராம் ரயில் நிலையத்தில் வடக்கு- தெற்காக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் இரு புறங்களிலும் கிழக்கு மேற்காக படிக்கட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை. ரயில் நிலைய மேம்பாலத்தின் மீது செல்லும் பஸ்களை அங்கேயே நிறுத்த ஏற்பாடு செய்து, அங்கு இறங்கும் பயணிகள் நேரடியாக ரயில் நிலையத்துக்குள் வரும் வகையில் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும்.
எம்.வேம்புநாதன், பட்டாபிராம்.
*******************
இடையூறாக பிளாஸ்டிக் குப்பைகள்
மறைமலைநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. இந்த மழை நீரை வாய்க்கால்களிலும் மண்ணுக்குள்ளும் செல்ல விடாமல் பிளாஸ்டிக் குப்பைகள் தடுத்துவிடுகின்றன. அதனால் பிளாஸ்டிக் புழக்கத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
கே.எஸ்.சிவக்குமார், மறைமலைநகர்.
அன்புள்ள வாசகர்களே...
'தி இந்து' தமிழ் நாளிதழ் உங்களோடு இன்னும் நெருக்கமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. வழக்கமாக நீங்கள் எழுதும் கடிதங்கள், மின்னஞ்சல்கள், 'தி இந்து' அலுவலகத்துடனான தொலைபேசி தொடர்புகள் இவற்றையும் தாண்டி, இந்தத் தொழில் நுட்பம் நமக்குள்ளே கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் நீங்கள் தரும் தகவல்களை செய்தியாளர்கள் மூலம் சரி பார்த்து செய்தியாக்க காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...
044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறுமுனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் எண்ணங்களையோ... அளிக்க நினைக்கும் புதிய தகவலையோ பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் பதிவில் உள்ள தகவல்கள் போதாதபட்சத்தில், நாங்களே உங்களைத் தொடர்புகொள்வோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT