Published : 04 Aug 2015 11:12 AM
Last Updated : 04 Aug 2015 11:12 AM
சித்தூர் மாவட்டத்தின் நெல்லிமந்தா கிராமம் அன்று பரபரத்துக் கிடந்தது. காரணம் தென்னாப்பிரிக்காவில் இருந்து பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு வரும், தனது பூர்வகுடி மணிர்மினி நாயுடுவுக்காகக் காத்திருந்ததுதான்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தின் புங்கனூரின் வடகிழக்குப் பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், முன்னூறுக்கும் குறைவான மக்களைக் கொண்டிருக்கிறது நெல்லிமந்தா கிராமம். அங்கே, கிராமத்தினர் அனைவரும், அங்கு வசிக்கும் வெங்கட்ரமணாவின் வீட்டுக்கு வரப்போகும் வெளிநாட்டு விருந்தினருக்காகக் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் நடுத்தர வயதில், ஜீன்ஸ் அணிந்து, அங்கு வசிப்பவர்களின் நடை, உடைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு பெண் வந்திறங்கினார். சுமார் ஒரு நாற்றாண்டுக்கு முன்னரே, அவ்விடத்தை விட்டுப் புலம்பெயர்ந்த ரங்கையா நாயுடுவின் பேத்திதான் மணிர்மினி.
ரங்கையாவின் பெயரே, நெல்லிமந்தா கிராமத்தின் நினைவிடுக்களில் இருந்து, கிட்டத்தட்ட அழிந்து போயிருக்கிறது, வெகு சிலரைத் தவிர. வெங்கட் ரமணாவின் குடும்பத்திலிருந்து யாரோ ஒருவர் பஞ்சத்தினால் புலம்பெயர்ந்து, கடல் தாண்டி வெகுதூரம் சென்றார் என்பதே அங்கு வசிக்கும் மூத்தவர்களின் மிச்சமிருக்கும் ஞாபகத்தின் எச்சமாக இருந்தது.
இந்திய சுதந்திரத்துக்கு முன்னால் ஆந்திராவின் மிக முக்கியமான ஜமீன்தாரி நகரமாக, புங்கனூர் விளங்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் புங்கனூர், பேரழிவு மற்றும் பஞ்சங்களால் பீடிக்கப்பட்டிருந்தது. 1900-ம் வாக்கில் புங்கனூர் ஜமீன்தாரைச் சேர்ந்த கிராம மக்கள், வாழ இடம் தேடி பல்வேறு இடங்களுக்குப் புலம்பெயரத் தொடங்கினர். சிங்கப்பூர், பினாங்கு மற்றும் பர்மா போன்ற காலனிய நாடுகளுக்கு மக்கள் இடம்பெயர்ந்தனர். அக்காலத்தில், தென்னாப்பிரிக்கா மக்கள் புலம் பெயர்வதற்கான சிறந்த இடமாக விளங்கியது. கோலார் தங்க வயல்கள் அதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தன.
அப்படிப் புலம்பெயர்ந்தவர்களில் ரங்கையாவும் ஒருவர். ஒரு வெளிநாட்டு முகவரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட இளம் வயது ரங்கையா நாயுடு, இரண்டே ஆடைகளோடு, நெல்லிமந்தாவை விட்டுச் சென்றார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டிஷ் பண்ணையாளர்களிடம் ஒப்பந்தக் கூலியாக வேலை பார்க்க
ஆரம்பித்த ரங்கையாவின் ஆரம்ப வாழ்க்கை, சிறப்பாக இல்லை. ஒப்பந்த வேலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ரங்கையா நாட்கள் செல்லச்செல்ல, தன் கடின உழைப்பால் முன்னுக்கு வரத்தொடங்கினார். தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த தென்னிந்தியர்களிடமும் அவருக்கு நன்மதிப்பும் கிடைக்க ஆரம்பித்தது.
தன் மகன்களை நன்கு படிக்க வைத்தார். வயதான காலத்தில், தனது நெல்லிமந்தா கிராமத்தைப் பற்றியும், தென் இந்தியாவுக்கும் தனக்குமான நெருக்கத்தையும், தன் மகன்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் தெரிவிக்கலானார். தங்கள் சொந்த வாழ்க்கையின் பரபரப்பிலேயே மூழ்கிப் போன ரங்கையாவின் மகன்களால் இந்தியாவைப் பற்றி யோசிக்கக்கூட முடியவில்லை. ரங்கையாவின் பேத்தியான மணிர்மினி நாயுடு (மனோரமணி?), அப்படி இல்லை. தன் தாத்தா பிறந்த ஊரான நெல்லிமந்தாவைப் பார்க்க ஆவலாக இருந்தார்.
வணிக நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் மணிர்மினி, ஒரு முறை தென்னாப்பிரிக்கத் துறைமுகமான கேப் டவுனில் உள்ள பல்கலைக்கழக நூலகத்துக்குச் சென்றார். அங்கே, ஹைதராபாத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகையொன்றில் வெளியான, "ஆந்திரா ஜமீன்தாரியில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் இடர்துடைப்பு நிகழ்வுகள்: புங்கனூர் 1800 - 1948" என்னும் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. தன் சொந்த கிராமமான நெல்லிமந்தாவோடு நெருக்கமான ஊர்தான் புங்கனூர் என்பதை அறிந்தார்.
அந்தக் கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொண்ட மணிர்மினி, மெயில் வழியாக தகவல்களை சேகரித்தார். கடின முயற்சிக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குக் கப்பலில் வந்திறங்கியவர்களின் ஆவணங்களைக் கண்டுபிடித்தார். நெல்லிமந்தாவைச் சேர்ந்த 27 வயது ரங்கையா, 1903-ம் ஆண்டு மெட்ராஸில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு வந்த செய்தியும் அதில் இருந்தது. தன் தாத்தா பயணித்த கப்பலில் பெயரும் அவருக்குக் கிடைத்தது. ரங்கையாவின் இயல்பான இடப்பெயர்தலை ஒரு வரலாற்று உண்மையாக்கினார் மணிர்மினி.
அடுத்த சில நாட்களிலேயே, தன் பயண ஏஜெண்டோடு சென்னை வந்திறங்கிய, மணிர்மினி, ஒரு வாடகைக்காரை அமர்த்திக்கொண்டு, 250 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நெல்லிமந்தாவை நோக்கிப் பயணமானார். எதிர்ப்பார்த்துக் காத்திருந்த தனது நீண்டகால விருப்பம் ஈடேறும் ஆவலில், தொலைத்த தன் உறவுகளைத் தேடி, உணர்வுகளோடு காத்திருந்தார்.
தெலுங்கு பேசக்கூடிய ஏஜண்ட் ஒருவரோடு, வெங்கட் ரமணாவின் வீட்டை அடைந்தார் மணிர்மினி. நிச்சயம் அவரால் தன் பாட்டனின் நெடிய வாழ்க்கைப் பயணத்தை கற்பனை செய்து பார்த்திருக்க முடியும். மொழி தடையாக இருந்தாலும், சிறிது நேரத்திலேயே, அங்கிருந்த பெண்கள் கூட்டத்துடன் ஐக்கியமாகிவிட்டார் மணிர்மினி. புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை எடுக்கப்பட்டன. குடும்ப உறுப்பினர்கள், அவர்களுக்கிடையேயான உறவுமுறைகளை ஆர்வமாய் விளக்கினர் லிராம மக்கள். சில மணி நேரங்களில், வெங்கட் ரமணாவின் வீட்டை விட்டுக் கிளம்பினார் மணிர்மினி. நெல்லிமந்தா கிராமத்தின் எளிய மக்களைச் சந்தித்த பின்னால் மணிர்மினி இவ்வாறு கூறினார்.
"இந்த அரிய, மனநிறைவான தருணத்துக்கு முன்னால், நான் எடுத்த முயற்சிகளும், ஆன செலவும், ஒரு பொருட்டே இல்லை. நெல்லிமந்தாதான் எங்கள் ஊர். எங்கள் குடும்பத்தின் ஆரம்பம் இங்கேதான் இருந்திருக்கிறது. நாங்கள் காலத்தின் கட்டாயத்தால் உறவுகளைத் தொலைத்திருந்தாலும், உறவுகளின் வேர்களைத் தொலைக்கவில்லை!"
தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT