Published : 24 Aug 2015 08:21 AM
Last Updated : 24 Aug 2015 08:21 AM
பிரதமர் மோடியின் பிஹார் மாநிலத்துக்கான ரூ. 1.65 லட்சம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு அறிவிப்பு, அவருக்கு பிஹார் மக்கள் மீதான அக்கறையைக் காட்டிலும், பிஹார் தேர்தலை பாஜக எந்த அளவுக்கு முக்கியமானதாகக் கருதுகிறது என்பதையே காட்டுகிறது. ஆந்திரம், தெலங்கானா, காஷ்மீர் எனப் பல மாநிலங்கள் தங்களுக்குச் சிறப்பு வளர்ச்சித் தொகை தரப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிவந்த நிலையில், பிஹாருக்குக் கிடைக்கவுள்ள இந்த ஒதுக்கீடு முழுக்க முழுக்க அரசியல் கணக்குகளை அடிப்படையாகக்கொண்டது என்றாலும், அம்மாநில மக்களின் வாழ்வில் சின்ன அளவிலேனும் மாற்றங்களுக்கு வழிவகுக்கக் கூடியது. அந்த வகையில் வரவேற்புக்குரியது. அதேசமயம், பிஹார் தேர்தலை பிரதமர் மோடி அணுகும் விதம், இந்த அரசு செல்லும் சங்கடத்துக்குரிய பாதையைச் சுட்டிக்காட்டுகிறது.
பிஹாரில் 10 ஆண்டுகளுக்கு முன் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. வெற்றிக் கூட்டணியாக மாறிய இந்தக் கூட்டணி, இரு கட்சிகளுக்கும் ஏற்றம் தந்ததுடன் நிதிஷ்குமார் நாடு முழுவதும் கவனிக்கப்படும் முதல்வராகவும் வழிவகுத்தது. பிற்பகுதியில், நிதிஷ்குமாருக்கு மோடியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கூட்டணி உடைந்தது. இரு கட்சிகளும் கடும் பகையாளிகளாயின. மக்களவைத் தேர்தலில் நாடெங்கும் வீசிய மோடி ஆதரவு அலை பிஹாரையும் சுழன்றடிக்க, பாஜக கூட்டணி அம்மாநிலத்திலுள்ள 40-ல் 31-ஐ வென்றது. இதற்குப் பின் அரசியல் சூழல் அப்படியே மாறியது. ஜனதா கட்சியிலிருந்து உருவெடுத்து, பின் பிரிந்து வெவ்வேறு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா பரிவாரமாக உருவெடுத்தன. பிஹாரிலும் இதுவரை எதிரெதிரே இருந்த லாலு பிரசாத் யாதவும் நிதிஷ் குமாரும் கை கோத்தனர். இப்போது ஜனதா பரிவாரத்தின் களப் பரிசோதனைக் கூடமாக பிஹார் மாறியிருக்கிறது. ஜனதா பரிவாரத்தோடு காங்கிரஸும் கை கோத்திருக்கிறது. பெரிய பிணக்குகள் இன்றி தொகுதிப் பங்கீடும் முடிந்திருக்கிறது. முன்பு தனித்தனியே கையாண்ட மூன்று எதிரிகளை இப்போது ஒருசேர பாஜக எதிர்கொள்வது நிச்சயம் அதற்குக் கடுமையான சவால். மேலும், மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடந்த ஏனைய எல்லா தேர்தல்களிலும் மாநிலங்களில் பாஜக வாக்குவீதம் குறைந்திருக்கும் நிலையில், பிஹாரின் தற்போதைய சூழல் பெரும் நெருக்கடி.
இதெல்லாம் சரிதான். ஆனால், ஒரு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எந்த அளவுக்கு ஒரு பிரதமர் முக்கியத்துவம் கொடுக்கலாம் என்பதற்கு ஓர் எல்லை இருக்கிறது. பிஹாரில் பாஜக ஆளும்கட்சி இல்லை. அது எந்த வகையிலும் மோடியின் ஆட்சி தொடர்பான நேரடி மதிப்பீட்டுக் களமும் இல்லை. ஆனால், பாஜக வலிய இதை வாழ்வா - சாவா யுத்தமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்த மோடி, அதையே தள்ளிவைக்க இப்போது தயாராக இருக்கிறார் என்றால், பிஹார் எந்த அளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்பது புரியாமல் இல்லை. என்ன விலை கொடுத்தேனும் பிஹாரைத் தனதாக்கும் முயற்சியில் அது இருக்கிறது.
இந்தியா போன்ற 29 மாநிலங்களைக் கொண்ட ஒரு நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது சில மாநிலங்களில் தேர்தல்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். பிரதமரின் பிரதான கவனம் மத்திய அரசின் ஓட்டத்தில்தான் இருக்க வேண்டுமே தவிர, மாநிலங்களின் தேர்தல்களில் அல்ல!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT