Published : 05 Aug 2015 10:30 AM
Last Updated : 05 Aug 2015 10:30 AM

நம்மைச் சுற்றி... ஆங்கிலமும் அரசியலும்!

* திறமையின் துணிவு!

பிரகாஷ் ராஜ் இயக்கிய ‘தோனி’, கார்த்தி நடித்த ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ போன்ற படங்களில் நடித்தபோது கவனிக்கப்படாத ராதிகா ஆப்தே, 14 நிமிட வங்க மொழிக் குறும்படமான ‘அகல்யா’வில் நடித்த பின்னர் பரபரப்பாகப் பேசப்படும் நடிகையாகிவிட்டார். அடுத்து, ‘பர்சேத்’ திரைப்படம், டொரன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது. “பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில் வெவ்வேறு வகையான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, குறிப்பிட்ட காரணங்களுக்காகப் படங்களைத் தடை செய்வது சரியல்ல” என்று துணிச்சலாகப் பேசுகிறார்!

* தேதிச் சிக்கல்!

இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தில் வாக்களிக்க மறுப்புத் தெரிவித்த இந்தியா மீது பாலஸ்தீனம் அதிருப்தியடைந்திருப்பது தெரிந்த விஷயம். தற்போது இந்தியா மீது இஸ்ரேலும் சற்று அதிருப்தியடைந்திருக்கிறது, முற்றிலும் வேறு காரணத்தின் அடிப்படையில். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாகச் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால், சமீபத்தில் தனது அக்கா காலமானதால் துக்கத்தில் இருந்த இஸ்ரேல் அதிபர் ரியுவென் ரிவ்லினுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவரின் வருகை பற்றிய செய்தி அத்தனை உவப்பளிக்கவில்லையாம். முன்பே எங்களிடம் ஆலோசித்திருந்தால் தேதி ஒதுக்குவது தொடர்பாக முடிவெடுத்திருப்போமே என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அதிகாரிகள் முணுமுணுக்கிறார்களாம்.

* வெள்ளித்தேர் விவகாரம்!

அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகளை உருவாக்கப் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் பெருமளவில் வெள்ளியைப் பயன்படுத்தி சுமார் ரூ. 5 கோடி செலவில் ஒரு தேரை உருவாக்கியிருக்கிறது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ. அதுவும், புணேயில் உள்ள கோயில் ஒன்றுக்காக இந்தத் தேர் உருவாக்கப்பட்டிருக்கிறது. தேரை இழுத்துச் சென்ற காளை மாடு ஒன்று உயிரிழந்ததை அடுத்து, பேட்டரியிலேயே இயங்கும் தேரை உருவாக்க முடிவெடுத்ததாக டிஆர்டிஓ தரப்பில் சொல்லப்பட்டது. தற்போது இவ்விவகாரம் தொடர்பாக மத்தியப் புலனாய்வு ஆணையத்துக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் புகார்கள் பறந்திருக்கின்றன.

* ஆங்கிலமும் அரசியலும்!

ஆங்கில செய்தி சேனல்களில் நடத்தப்படும் விவாதங்களில் சரளமாக ஆங்கிலம் பேசுபவர்களே கலந்துகொள்ள வேண்டும் என்று அந்தந்தக் கட்சிகள் விரும்புவதில் ஆச்சரியமில்லை. சந்திரபாபு நாயுடு இதில் தனிக் கவனம் செலுத்துகிறார். அமர ராஜா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் குண்டூர் எம்.பி-யுமான ஜெயதேவ் கல்லாவை இவ்விஷயத்தில் முழுமையாகச் சார்ந்திருக்கிறாராம். அவரது மகன் லோகேஷுக்கும் ஊடக ஆலோசகர் பரக்காலா பிரபாகருக்கும் நல்ல ஆங்கிலப் பரிச்சயம் உண்டு. ஆனால், அவர்கள் ஊடகங்களில் பேசுவதற்கான பிரதிநிதிகள் அல்ல. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்த ஜெயதேவ் கல்லா பேசும் ஆங்கிலத்தைப் பலரும் வியந்து பார்ப்பதுண்டு. வாய்ப்பு அவருக்குப் போவதில் வியப்பில்லைதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x