Published : 10 Aug 2015 10:30 AM
Last Updated : 10 Aug 2015 10:30 AM
ஆளுங்கட்சியை அலறவைத்திருக்கிறது ‘வியாபம்’. மத்தியப் பிரதேசத் தொழில்முறைத் தேர்வு வாரியமான ‘வியாபம்’ நடத்திய நுழைவுத்தேர்வுகளை வைத்து நடத்தப்பட்ட பல கோடி முறைகேடுகளும், அதன் தொடர்ச்சியாக நடந்த கைதுகளும் தொடரும் மர்ம மரணங்களும் மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக முதல்வர் சௌகானைவிட, இன்று பிரதமர் மோடியை அதிகம் துரத்துகின்றன. அவருடைய பிம்பத்தை உலுக்குகிறது. இத்தகைய சூழலில், நம்மூரில் ‘வியாபம்’ ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு என்ன?
* ரத்தினக்குமார், பேராசிரியர்
சிபாரிசு, லஞ்சம் என ஆரம்பித்த விஷயம் இன்று தொடர் கொலைகள் எனும் அளவுக்கு வந்துவிட்டதை நினைத்தால் பயமாக உள்ளது. ஒரு ஆசிரியராகப் பார்க்கும்போது, இன்று முறைகேடுகளோடு வாழ்வதே முறை என நம்பும் தலைமுறை உருவாகிவிட்டது எனத் தோன்றுகிறது. எப்படியாவது வெல்ல வேண்டும், அதற்குக் குறுக்கு வழியில்கூடப் போகலாம் எனும் நிலை வந்துவிட்டதைத்தான் ‘வியாபம்’நமக்குக் காட்டுகிறது.
* விஜயா, ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்
ஏதோ நுழைவுத்தேர்வுகள் தொடர்பான ஊழல் என்பதுபோல இதைப் பாவிக்க முடியவில்லை. இவ்வளவு உயிர்களைப் பலிவாங்கிய ஊழல் ஏதும் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. என்ன மாதிரியான நாட்டில் இருக்கிறோம் என்ற கவலையை இது உருவாக்குகிறது. ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, முதலில் தன் கட்சியை ஊழலற்ற கட்சியாக மாற்ற வேண்டும்.
* கார்ட்டூன் கதிர், கேலிச்சித்திரக்காரர்
நன்றாகப் படித்தாலும் பொறியியல், மருத்துவம் படிக்க வசதியில்லாத ஏழை மற்றும் நடுத்தர இளைஞர்கள் பெரும்பாலானோரின் கனவே அரசு வேலைதான். நானும் என் தம்பியும் இந்தக் கனவோடுதான் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து அரசு வேலைக்கான பல தேர்வுகளை எழுதியிருக்கிறோம். எதிலும் தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால், எங்களைவிடவும் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சொல்லப் போனால், என் நண்பர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு கள் மீது நம்பிக்கையே போய்விட்டது. ‘வியாபம்’என்கிற வார்த்தை மற்றவர்களிடம் என்ன மாதிரியான எண்ணங்களை உருவாக்குகிறதோ, எனக்கு ஏமாற்றத்தையும் வயிற்றெரிச் சலையும்தான் உருவாக்குகிறது.
ஒரு கேலிச்சித்திரக்காரனாக ‘வியாபம்’பற்றி படம் போடச் சொன்னால், இப்படி வரைவேன். ஒரு சிபிஐ அதிகாரி கையில் எலிப்பொறி வைத்திருக்கிறார். பொறியில் ஒரு எலிகூட இல்லை. ஆனால், அவரைச் சுற்றிலும் ஏராளமான எலிகள்!
* நவீனா, முதுகலை இலக்கிய மாணவி
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்காக எனது தோழிகள் பலர் இரவு பகல் பார்க்காமல் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். கடுமையாக உழைத்துத்தான் அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள். ஆனால், லட்சக்கணக்கில் பணம் கொடுத்தே அரசுப் பணிகளில் சேரலாம் என்று மத்தியப் பிரதேசத்தில் நடந்திருக்கும் வியாபம் ஊழல் வழிகாட்டியிருப்பது மோசமான முன்னுதாரணம். சரியாகப் படிக்காமல் அரசுப் பணிகளுக்கு வருபவர்கள், எப்படி அரசு நிர்வாகத்தில் பணிபுரிய முடியும்?
* நிஷா சாகுல், உதவிப் பேராசிரியை
சின்னச் சின்ன தேர்வுகளில் அருகில் அமர்ந்திருக்கும் மாணவியைப் பார்த்து ‘காப்பி’ அடிப்பதைப் பார்த்தாலே நேர்மையான எண்ணம் படைத்தவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். வாழ்க்கையையே முடிவுசெய்யும் விஷயத்தில் இத்தனை பெரிய முறைகேடு நடந்திருக்கிறது என்றால், இதை என்னவென்று சொல்வது?
* பிரியா முரளி, இல்லத்தரசி
இந்தியாவில் இருக்கும் ஊழல் வழக்குகளின் பட்டியலில் இதுவும் ஒன்று என்று பேசாமலிருக்க வேண்டியதுதான். வேறென்ன செய்ய முடிகிறது நம்மால்? எப்படிப் பார்த்தாலும் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளாக இருப்பதுதான் நமது துரதிர்ஷ்டம்!
- தொகுப்பு: ம.சுசித்ரா, வெ.சந்திரமோகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT